சுஜாதா பட்:
குஜராத்தின் அகமதாபாத்தில் பிறந்தவர். ஜெர்மனியின் பிரீமன் நகரில் வசிக்கிறார். இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பல்கலையில் வருகை பேராசிரியர். இந்திய-ஆங்கிலக் கவிதைகளையே எழுதுகிறேன் என்று தன் கவிதைகள் குறித்துக் கூறுகிறார்.
யமுனா ராஜேந்திரன்:
கோவை சௌரிபாளையத்தில் பிறந்தவர். கவிதை, அரசியல், தத்துவம், திரைப்படம் உள்ளிட்ட தலைப்புகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். தற்போது ஐக்கிய ராஜ்ஜியத்தில் வாழ்ந்து வருகிறார்.
ஜெர்மனி, யூதவெறுப்பில் இருந்து வெகுதூரம் கடந்து வந்துவிட்டது. அதற்குப் பதிலாக இப்போது பழுப்புத்தோல்களின் (Brown skin) மீது வெறுப்பு அதிகமாகி இருக்கிறது. விமான நிலையத்தில் சிவப்பு பாஸ்போர்ட்டுகள் நடுவில் இந்திய நீலப் பாஸ்போர்டை வைக்கும் போது அவர்கள் உணர்வைப் புரிந்து கொள்வீர்கள். சுஜாதா ஜெர்மனியில் வசிப்பதால் இந்தந் தொகுப்பின் பல கவிதைகளில் அது பிரதிபலிக்கிறது. குஜராத்திகள் எங்கு சென்றாலும் வீட்டைத் தூக்கிசெல்பவர்கள், அதற்கு சுஜாதாவும் விதிவிலக்கல்ல.
தலைப்புக் கவிதை ஒரு அன்னையின் அழுகுரல். ” மனதில் மட்டும் அன்னையா மகனே நீ இல்லையா ” என்ற சுசிலாவின் குரல் பின்னணியில் ஒலிக்கிறது. கருச்சிதைவுக்குப் பின் சிதைவாக எதுவுமே வயிற்றில் தங்காமல் போவதை எந்த மொழியில் சொன்னாலும் உணர்வுகளைப் புரிந்து கொள்ளமுடியும்.
” ஒவ்வொரு முறை நான் பார்க்கும் போதும்
பெருக்கெடுத்தபடி இரத்தம்
முகத்தை எப்போதும் நான் பார்க்கவில்லை
தளர்ந்த செதில்கள் மட்டுமே
மின்னி மறைந்த ஒருநொடி மட்டுமே
வளைந்த முதுகுத்தண்டு பீங்கானில்
நடுங்குவது போல் தோன்றியது”
ரோஜா ஐரோப்பாவில் காதலின் சின்னம். பூண்டு இந்தியர்களுக்கு மருந்தாகப் பயன்படுவது. பூண்டை முடை நாற்றமெடுக்கும் ரோஜா என்ற தலைப்பிலுள்ள கவிதை இரண்டு கலாச்சாரங்களின் சந்திப்பு மட்டுமன்றி, ஷேக்ஸ்பியரைத் தொட்டு, சமையலில் கலந்து, இரத்த ஓட்டத்தைத் துரிதப்படுத்திக் கடைசியாக பாலியலில் முடிகிறது.
” அவனது விரல்கள் உரித்தாலும் பிழிந்தாலும் சோர்ந்து போயிருக்கும்
நாற்றமடிக்கும் ரோஜா
பிசுபிசுப்பான சதை
இப்போதும்
இந்த இரவின் நடுசாமத்திலும்
அவனது விரல்கள் தொட்டு உரிக்கும்
அவளது சொந்த நறுமணத்தையும்
அவள் ஸ்பரிசத்தையும் திறக்கும்”
பெண்ணின் காமத்தைச் சொல்லும் கவிதை வெள்ளை தண்ணீர்கொடி. கர்ப்பமாகிய பெண்ணை தாய்மை பொங்கிவழிகிறது என்று காட்டும் மரபை உடைக்கிறார்.
” எவர்தான் சொல்ல இயலும்
பச்சைத் தேங்காய்
கருப்பை தசைகள் நழுவுவதை
ஒரு ஆழமான நீரோடையாக
பச்சைத் தேங்காய்ப்பால்
அவள் கிணற்றை அடைத்தபடி
இன்னும் உடைத்துக் கொண்டு
பாயக் காத்தபடி
அவனது மிக மெலிதான தொடுதலிலிருந்து
ஈரம் பெற
இதன் பின்னிருக்கும் தர்க்கத்தை
எவர் தான்உணர முடியும்?”
சுஜாதா பட்டின் கவிதைகளில் அவர் வளர்ந்த சூழல் காரணமாக கிழக்கு மற்றும் மேற்கத்திய கலாச்சாரங்கள் ஒன்று கலக்கின்றன. உலகம் அழிகையில் சிவன் தலையில் ஏழுதலை நாகத்தை அணிந்து வருகிறார். ஸ்வஸ்திகா இருவேறு அர்த்தங்களைச் சொல்கிறது. போர்டாக்ஸ் ஒயின், செர்னோபில் விபத்து, நியுசிலாந்து ஆடுகள் எல்லாம் ஒரே கவிதையில் கலக்கிறார்கள். ஜெர்மனியில் இந்தியக்குழந்தையின் உடல் மற்றும் தலைமுடியின் நிறம் கேவலப்படுத்தப்படுகிறது. ஜப்பானில் பிறக்காத ஜப்பானியன் சிலியில் வளர்கிறான். கலவை கலாச்சாரங்களின் கூட்டல்களையும் கழித்தல்களையும் நுட்பமாகப் பேசுகின்றன சுஜாதா பட்டின் கவிதைகள்.
சிறிய தொகுப்பு இது. ஆனால் சுஜாதா பட்டைத் தொடர்ந்து வாசிக்க இந்த நூல் நுழைவாயிலாக அமையக்கூடும். குர்திஸ் கவிதைகள், லத்தீன் அமெரிக்கக் கவிதைகளைத் தொடர்ந்து வெளிவரும் அடுத்த கவிதை மொழிபெயர்ப்பு நூல். யமுனா ராஜேந்திரனின் மொழிபெயர்ப்பு தெளிவாகவும், மூலத்திற்கு வெகுவாக நெருங்கியும் அமைந்திருக்கிறது. கலாச்சார அடையாளத்தைப் பலதேசங்களின் அனுபவங்கள் என்னும் கண்ணாடி வழியாகத் தேடும் கவிதைத் தொகுப்பு.
பிரதிக்கு:
புது எழுத்து 63742 30985
முதல்பதிப்பு ஜனவரி 2022
விலை ரூ.100.