Hareesh:
Moustache என்னும் நாவலுக்காக JCB விருதை 2020ல் பெற்றவர்.மூன்று சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். சினிமாவிற்கு திரைக்கதை எழுதியுள்ளார். இரண்டு முறை சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர்.
Jayashree Kalathil:
The Sack Cloth Man என்ற சிறார் நூலை எழுதியவர். ஹரீஸின் மீஷா என்ற நூலை moustache என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். N.Prabhakaranன் Diary of a Malayalee Madman என்ற நூலும் இவரது மொழிபெயர்ப்பே.
மலையாளத்தில் 2016ல் வெளிவந்த இந்த சிறுகதைத் தொகுப்பு அதற்குள் பத்து பதிப்புகளைக் கடந்து விட்டது. நல்ல நூல்களைத் தேடி வாங்கிப் படிக்கும் சூழலில் தான் சிறந்த எழுத்தாளர்களும் உருவாக முடியும். கன்னி போன்ற அற்புதமான மொழிநடையில் அமைந்த மயக்குறு நாவல் அதிகம் வாசிக்கப்படாது போனதும் அடுத்த பதிப்பைக் கொண்டுவருமுன் எழுத்தாளரே இல்லாது போனதும் தமிழ் படைப்புலகத்தின் சோகங்கள்.
Death Notice போன்ற கதைகள் தேர்ந்த எழுத்தாளரால் கூட அடிக்கடி எழுத முடியும் கதைகளில்லை. கலப்பின நாயின் ஏழுகுட்டிகள் பிறந்து கண்ணைத் திறக்குமுன்னே உயிருடன் குழிக்குள் போடப்பட்டு மண்ணை வைத்து மூடப்படுகின்றன. அதே நேரத்தில் பசு ஈனுகையில் கன்றின் கால்கள் முதலில் வெளியே வந்ததால் பிரசவம் கடினமாகி மாடு உயிருக்குப் போராடுகிறது. கடைசியில் இறைச்சி வியாபாரி மாட்டை ஐநூறு ரூபாய் கொடுத்து இழுத்து செல்கிறான். கன்று பிறந்திருந்தால் அது மட்டும் ஐயாயிரம் போயிருக்கும் என்கிறாள் அம்மா. இப்படித் தான் கதை ஆரம்பிக்கிறது, இப்போது தான் நாய்க்குட்டிகள் ஏன் புதைக்கப்பட்டன என்று தெரிகிறது. தொடரும் கதையில் மரணஅறிவிப்பு வந்த நாளிதழ்களில் இருந்து துண்டாக எடுக்கப்பட்ட அறிவிப்புகளை வைத்து இருவர் பணம் வைத்து விளையாடுகிறார்கள். ஒருவரின் கையில் வந்த அறிவிப்பில் இறந்தவர் நாற்பது வயது அடுத்தவருக்கு நாற்பத்தைந்து வந்தால் இரண்டாமவர் வென்றவர். ஆரம்பத்தில் இருந்தே Disturbing மற்றும் Funny ஆக நகரும் கதையின் முடிவில் மிகப்பெரிய Twist இருக்கின்றது.
மீண்டு வர முடியாத அறைகள் கொண்ட கட்டிடத்திற்குள் சிக்கிய உணர்வை ஹரீஸின் பல கதைகள் அளிக்கின்றன.
பிறந்த குழந்தைக்குப் பரிசாக நாய்க்குட்டியை வாங்கிச் செல்வதாகத் தொடங்கும் கதை, அநௌதக் குழந்தையைப் பற்றி எதுவும் சொல்லாமல், அந்த நாய் வளர்வதையும் பின் நான்கு குட்டிகளைப் பெறுவதையும் சொல்கிறது. கசாப்புக் கடையில் இருந்து தப்பிய பசுவும், காளையும் ஊருக்குள் நடத்தும் அட்டகாசங்களை சொல்லி வரும்பொழுதே, ஊரின் பல இரகசியங்கள், அரசியல், வக்கிரங்கள் வெளிப்படுகின்றன.
காமம் அநேகமான கதைகளில் கதாபாத்திரங்களின் Driving force ஆக இருக்கிறது. Adam கதையில் குருப்பு-பாலியின் உறவு. Maoist கதையில் வர்கீஸ், குட்டச்சன் இருவரது அடங்காத விளையாட்டுகள் என்பது போல. Magic Tail கதையில் தான் அது எல்லா உணர்வுகளையும் முந்திக் கொண்டு வெளிவருவது. இறந்த தந்தையின் உடலை காரின் பின்சீட்டில் வைத்துக்கொண்டு, மகள் சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் காமச்செயல்களில் ஈடுபடுகிறாள்.
மனிதர்களிடம் ஒளிந்து இருக்கும் மிக வக்கிரமான குணங்கள் இவரது கதைகளில் அடிக்கடி வெளிப்படுகிறது. அதை செய்பவர் எல்லோரும் ஆண்களாக இருப்பது தற்செயலாக இருக்கலாம். Adam கதையில் ஊர்மாற்றிப் போகையில் வளர்ப்புநாயைக் கொல்வது, Kavyamelaவில் பார்வை இல்லாதவரின் பேரழகான காதலியை வஞ்சகமாக அபகரிப்பது, Maoist கதையில் துப்பாக்கிமுனையில் பெண்களிடம் வல்லுறவு செய்வது, Night Watch கதையில் எதிரி இறந்த பின்னரும் பழிவாங்கத் துடிக்கும் மனம் என்று வக்கிரங்கள் கதைகளெங்கும் சிதறிக் கிடக்கின்றன.
மரணம் அநேகமான கதைகளை இணைக்கும் Themeஆக வருகிறது. மரணத்தை வைத்து விளையாடும் விளையாட்டு Death Notice. Murder at the Culvert, Magic Tail, Night Watch உள்ளிட்ட பல கதைகளில் மரணம் வந்தாலும், வெகுநுட்பமாக மரணம் சொல்லப்படுவது Alone என்ற கதையில்.
ஒன்பது கதைகள் கொண்ட தொகுப்பு இது. இன்னும் எழுதப்படாத கதைக்களங்கள் எத்தனை இருக்கின்றன என்பதற்கு இந்த சிறுகதைத் தொகுப்பை உதாரணமாக சொல்லலாம். இன்றைய கேரள சமூக, அரசியல் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கதைகள் சாதாரண மனிதர்களைப் பற்றி அசாதாரணமாகச் சொல்லப்பட்ட கதைகள். ஹரீஸின் எழுத்து நுட்பமாகவும், அதிகம் பயணம் செய்யாத பாதையிலும் எந்த ஆரவாரமுமின்றி செல்கிறது. கவனமான வாசிப்பைக் கோரும் எழுத்து. ஜெயஸ்ரீயின் மொழிபெயர்ப்பு நம்மை கேரளத்துக்குள் கூட்டிச் செல்கிறது. Perguin பதிப்பித்த நூல் இது, US, இங்கிலாந்து, அயர்லாந்தில் கிளைகள் உள்ள Penguin அந்த நாடுகளில் இது போன்ற நூல்களை, சில பிரதிகளையேனும் பதிப்பித்தால் இந்திய எழுத்து உலக வாசகர்களைச் சென்றடையும்.