பூங்கோதை என்ற பெயரில் சிறுகதைகளை எழுதும் கலா ஸ்ரீரஞ்சனின் முகநூல் பக்கத்தைத் தொடர்ந்து படித்தவர்கள், அவரது நகைச்சுவை உணர்வையும், எள்ளல் கலந்த வசீகரமான ஈழத்தமிழ் மொழிநடையையும் கவனிக்கத் தவறியிருக்க முடியாது. ஆனால் இந்த இரண்டு மட்டுமே சிறுகதை எழுதப் போதுமானவையல்ல. அவருடைய சில பதிவுகள் நல்ல சிறுகதையாக விரியும் கனம் கொண்டவை.
பதிவுகள் அதிகபட்சமாகப் பத்து வரிகளுக்குள் முடிவதால், அதற்குண்டான நேரத்தைச் செலவழித்து தன் முழுஆளுமையை வெளிக்காட்ட முடியும். ஆனால் சிறுகதைகள் அதிக நேரத்தைக் கோருபவை, மீள்வாசிப்பை எழுத்தாளர் பலமுறை செய்தாக வேண்டும், வார்த்தைகளை, சம்பவங்களைச் சோளியைக் குலுக்கிக்குலுக்கி தாயம் விழச் செய்யும் பிரயத்தனங்கள் சிறுகதைகள்.
Anthropophobia கொண்டவனைப் பற்றிச் சொல்லும் காதுகளும் கதவுகளும், psychological thriller சாயலில் செவ்வந்தித் தோட்டம், Stalker பற்றிய வெளிநாட்டு ஐயா கதை, உளவியல் Twistஆன கீறல்கள், domestic violence பற்றிப்பேசும் புன்னகை என்று கதைக்களன்கள் வித்தியாசமாக இருக்கும் கதைகளும் இந்தத் தொகுப்பீல் இருக்கின்றன. Melodramaவாக முடியும் கதைகளும் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன.
என்வரையில், ஊமைக் கனவுகள் தொகுப்பின் சிறந்த கதை. ஒரு காத்திருப்பு.
ஒரு மீறல். இரண்டுமே கடைசிவரை சம்பந்தப்பட்ட இருவருக்கும் தெரிவதில்லை
ஆரம்பத்தில் இருந்தே ஒரு வாசக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்தக்கதை, அம்மா வந்தாளில் அப்புக்கு அரசல்புரசலாகக் கேள்விப்பட்டு கடைசியில் விளங்குவது போல் தி.ஜா செய்த அதே யுத்தி கையாளப்பட்டிருக்கிறது. ஆரம்ப வேகத்தைக் கடைசிவரை இழக்காத கதை இது. அதே போல் எந்த இடத்திலும் நிதர்சனத்தை விட்டுக் கொஞ்சமும் விலகாத கதை. செல்வத்தின் பார்வையில் இந்தக் கதையை நான் மனதுக்குள் தனியாக ஓடவிட்டுப் பார்த்துக் கொண்டேன்.
பூங்கோதையின் மொழிநடை சரளமானது. வெளியுலக அனுபவங்கள் வாய்த்ததால் முதிர்ச்சி கலந்தது. காதுகளும் கதவுகளும் கதையில் மற்றவர்களை விட்டு ஒதுங்கி இருக்க நினைப்பவன் குறித்த விவரணைகள், அம்மாவிடம் பேச இடைப்பட்ட நேரத்தைத் தேர்ந்தெடுத்தல், சீக்கிரம் முடித்ததில் ஆசுவாசம் என்ற எல்லாமே யதார்த்தம், ஆனால் ரோஜாவை நினைத்து ஏங்குவது ஒரு Melodrama.
நிறையக் கதைகள் இவர் இன்னும் நேரம் செலவழித்திருந்தால் நல்ல கதையாக மாறும் வீரியம் கொண்டவை. கதைகளில் நாம் வாழ்க்கையில் செய்யும் அதே Ifs and butsஐ உபயோகித்து பல கோணங்களில், பல முடிவுகளில் பொருத்திப் பார்க்கையில்,
ஒரு கதை பல கதைகளாய் விரியும். அதில் சிறந்ததைத் தேர்ந்தெடுக்கையில் அது நல்ல கதையாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பூங்கோதை அதையே தன் இனிவரும் கதைகளில் செய்வார் என்று நான் நம்புகின்றேன்.
பிரதிக்கு:
பரிதி பதிப்பகம் 72006 93200
முதல்பதிப்பு நவம்பர் 2021
விலை ரூ.100.