ஆசிரியர் குறிப்பு:
கோவையில் வசிப்பவர். பொது சுகாரத் துறையில் பணிபுரிகிறார். இவரது ஆறு கட்டுரைத் தொகுப்புகள், ஏழு கவிதைத் தொகுப்புகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இது எட்டாவது கவிதைத் தொகுப்பு.
மத்திய வயதுக்குப்பின் பிள்ளைக்காதலில் விழுவது சிரமம். முதலில் நேரத்தைக் கொன்று தீர்ப்பார்கள் என்ற ஞானம் வந்திருக்கும் அல்லது முட்டாள்தனங்கள் மறைந்து கொக்குக்கு ஒன்றே மதி என்ற தெளிவு வந்திருக்கும். இரண்டும் இல்லாதவர்கள் கவிஞர்களாக இருக்கும் சாத்தியம் அதிகமிருக்கிறது. அழகிய யுவதிகளின் கைகளில் தவழ்ந்து பின் மாறிமாறி அடிபட்டாலும் பரவாயில்லை, கிழியாத இறகுப் பந்தாக ஆக வேண்டும், காரில் வந்து வழிகேட்டவளுடன் மனதை அனுப்பிவிட்டு உடலைத் தெருவில் தனியாக
நடந்து திரிவது என்பது போல் இளமைக் கவிதைகள் ஏராளமாக அடங்கிய தொகுப்பு இது.
கவிஞனோ, பாடுபொருளோ காட்சியில் கலந்து ஒன்றாவது இவரது கவிதைகளில் அடிக்கடி நிகழ்கிறது.
“நானும் ஒரு கணம்
அன்னையாகிவிட்டு
எனக்குத் திரும்பினேன்”
“அந்தியை அழகி படமெடுக்கையில்
அவளைப் பார்த்தாலே போதும்
அந்தியைப் பார்த்தது போலே”
“இப்போது நான் தான் சேலைத்தூளியாம்
என்னைத் திறந்துதிறந்து
எட்டிப்பார்க்கிறது குழந்தை”
“இறுதியாக அவனை அவனே கைவிட்டான். அதற்குப் பிறகுதான் நிகழ்ந்தது அற்புதம்”- இவை கிருபாவின் வரிகள். எல்லோரும் கைவிடாமல் அல்லது யாராவது ஒருவரேனும் கைப்பற்றிக் கொண்டால் மரணம் கூட சிரமம் தான் இல்லையா?
” நேற்று இரயில் முன் பாய்ந்து
கூழாகிப்போனவனுக்கு
எண்ணற்ற நண்பர்கள்
நாலைந்து காதல்கள்
அத்தனை தோள்கள்
அத்தனை மடிகள்
அவனது ரயில்
எப்போது கிளம்பியதென
உறுதியாகச் சொல்ல இயலவில்லை
அது நெருங்க நெருங்க
ஒவ்வொரு தோளாக மாயத்தில் மறைந்தன
ஒவ்வொரு மடியாக
விலகிப் போயின”
கனவுகள்+கற்பனைகள்= காகிதங்களில் இருந்து வெகுதூரம் வந்துவிட்டது போல் தோன்றுகிறது. “முள்ளை முள்ளால் தானே
எடுக்க வேண்டும்….எங்கே இன்னொரு முறை பார்.” போன்ற வரிகள் எந்த முகத்தையும் மனக்கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதில்லை.
” சிறு பருக்கள் விளையாடும் முகத்தை
டம்ளர் தண்ணீரில் கழுவி
வாரிப்பின்னாத கலைந்த கேசத்தோடு
வாய்க்குள் பிரஷ்சைச் செலுத்தி
மேலும் கீழுமாய் வாசித்துக் கொண்டிருந்த
ஒருத்தி பார்த்தும் பார்க்காமலும் பார்த்த
லாவகத்தில் ஒரு சோகையான அழகிருந்தது
இன்றைய நாள்
இப்படி இருந்தால் போதும்”
அன்றாட நிகழ்வுகளே கவிதைகளாகி இருக்கின்றன. அரசு அலுவலகத்தில் ஆய்வு நாள், கோலம் போடும் திருக்கோலம், பாட்டிக்கு எட்டாத பூங்கொற்று, பாஸ்வேர்டை ஒளித்து வைத்தல், சுண்டுவிரல் நகத்தின் அழகில் சொக்கிப் போதல் என்று புறக்காட்சிகளே பெரும்பான்மையான கவிதைகளாகி இருக்கின்றன. அம்மாவின் பிணம் இருக்கும் நடுஇரவில் போன்ற அதிர்ச்சி மதிப்பிற்காக எழுதப்பட்ட கவிதைகளும் இருக்கின்றன. நடந்து நடந்து 1232 கிலோமீட்டர் செல்லும் கவிதை நயத்தை இழந்து பிரச்சார விளக்கை ஏந்திக்கொண்டு நடந்து கொண்டே இருக்கிறது. பல கவிதைகள் புன்முறுவல் செய்ய வைக்கின்றன. மற்ற கவிதைத் தொகுப்புகளைப் போலவே இசையின் இந்தத் தொகுப்பும் வாசிக்க சுவாரசியமானது.
பிரதிக்கு:
காலச்சுவடு பதிப்பகம் 4652-278525
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ. 175.