ஆசிரியர் குறிப்பு:

திருச்சி மாவட்டம் முசிறியில் பிறந்தவர். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிகிறார். இதுவரை ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு நாவல், மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இது நான்காவது கவிதைத் தொகுப்பு.

பன்னிரண்டு வருடங்கள். இவரது முதல் கவிதைத் தொகுப்பிற்கும் இதற்குமிடையே பன்னிரண்டு வருடங்கள். தொடர் வாசிப்பும், இலக்கிய விவாதங்களும் ஒருவரை எப்படி பட்டை தீட்டக்கூடும் என்பது இந்தக் கவிதைத் தொகுப்பின் மூலம் தெரிய வருகிறது.

முதல் பேரிச்சம் பழம் கவிதையே பீனிக்ஸ் பறவை போல ஒரு immortal உணர்வைக் கொண்டு சேர்க்கிறது. வீழ்வேனென்று நினைத்தாயோ?

“கசந்த இவ்வுடல் மீளவும்
கனிகிறது
எறும்புகள் எவ்வளவு முயன்றாலும்
இச்சிக்கவியலாத
எட்டிப்பழமென”

மகுடம் இல்லை. ராஜ்ஜியம் இல்லை ஆனாலும் சிலபெண்கள் மகாராணி தான். ராஜனுக்கும் கட்டளையிடுபவர்கள். நகை, ஆடைகள் அழகைக் கூட்டலாம், கம்பீரத்தை வரவழைக்க முடியாது.

” புண்ணியதலத்திற்குச் செல்லும் பணிவுடன்
அகந்தை அகற்று
வெற்றுக்காலுடன் வா
என் நிலத்தின் குளிர்ச்சியில் திளை

மழையற்ற ஒருநாளில்
என் வனத்திற்குள் நுழைய அனுமதிக்கிறேன்
துளித்துளியாப் படர்ந்து
என் தளிரிலை மேனியில்
முழுவதுமாக அரங்கேறு
………….
இப்போது நீ திரும்பலாம்
உனது ராஜ்ஜியத்திற்கு
உன் அரசை
இனி ஆள முடியும்
முன்பெப்போதும் இல்லாத
கம்பீரத்துடனும்
கருணையுடனும்”

இந்தத் தொகுப்பின் பல கவிதைகளில் பெண் அழிக்க முடியாத சக்தி ஆகிறாள். பிழைத்துப் போ என்று கருணை செய்கிறாள். பத்து தலைகளில் ஒன்றையாவது கொய்வேன் என்கிறாள். நாம் சிட்டுக்குருவியாகி சிறகடிப்பதே சிறந்தது.

” என் உடல் அடர்வனம்
நீ அறிந்ததெல்லாம் சில
புதர்கொடிகள் மாத்திரமே
அவை பாதையோரம் ஒதுங்கியவை

உன் புலன்களுக்கு எட்டாது என் விகாசம்
பறவைகள் மட்டுமே அறியும் பெருவெளி”

கிருஷ்ணாவில் கலக்கும் உபநதிகள் ஏராளம். சங்கமேஸ்வரரின் நதிமேல் பவனியும் வழமையான விசயம். நாம் வருத்தமாக இருக்கும் போது எதிர்படுபவர் எல்லோரும் அளவில்லா ஆனந்தத்தில் இருப்பதாகத் தோன்றும். புறக்காட்சிகள் நம் மனநிலையில் வந்து குவிவதைக் கவிதையாக்கும் போது அதற்குத் தனிஅழகு.

” கூடல் சங்கமத்தில்
சங்கமேஸ்வரரை நதியின் மேல்
பிரதட்சனம் செய்ய
இடமிருந்து வலம் போனது படகு
நான் மிதந்தது கிருஷ்ணாவில்
…………
கூடல் கூடிப்பிரிவது
சங்கமம் கூடியபின் பிரிவறியாது போவது
கூடல் சங்கமத்தில் ஆவதென்ன?
நான் கலக்கிய நதிநீரில்
எப்படிக் கண்டெடுக்க என் கிருஷ்ணாவை?”

தகிக்கும் உடலும் திருமஞ்சனமாடும் மாயனும். கண்ணனால் லீலைகள் செய்ய முடியும், உள்ளத்தைக் கவரமுடியும். ஆனால் என் காதலின்றிப் போனால் நீ யார் கண்ணனே?

” நீ கள்வன் நான் ஜோதியாய் ஜொலிப்பதை
காணப் பொறாதவன்
நீ கண்கட்டு வித்தைக்காரன்
ஆகவே என்மேனியில் கவிழ்க்கிறாய்
உன் மோகநீர்த் தடாகத்தை

என்னைச் சூடிக்கொடுக்கும் போது தானே
வரச்சொன்னேன் உன்னை
கண்ணாடிச் சிறைக்குள்
இப்போது எதற்காக தரிசனம்?

ஆண்டாளோ ரங்கநாச்சியாரோ
சந்திக்காத மோகத்தையா
நான் கண்டெடுக்கப் போகிறேன்
ஆயினும்
என் காதலன்றி
நீ வெறும் சிலைக்கல் தானே
எம்பெருமானே”

“Water, water, every where, And all the boards did shrink; Water, water, every where, Nor any drop to drink.” உலகின் இரண்டாவது அதிகமான மக்கள்தொகை கொண்ட தேசத்தில் Sexual povertyக்கு என்ன காரணமாக இருக்கக்கூடும்? பாசாங்கு தான் முக்கிய காரணம். இந்தக் கவிதையில் நூறுநூறாயிரம் பெண்களின் தாபத்தை மறைத்துக் கடந்து செல்லும் விளையாட்டு. நன்றாக வந்திருக்கிறது.

” எழுத்து தாளில் ஊர்கிறது
பிடித்து நிறுத்த
கண்ணாடி அணிந்தேன்

தலையில் உப்பு பூத்தது
உப்பு ரத்த அழுத்தத்திற்கு ஆகாதென்று
மருதாணியை கையிலிருந்து
இடம்மாற்றி தலையில் இட்டேன்

நான் அறியாததா
இம்மரம் இக்கிளை அதன் இலைகள்
இந்த இரவின் இருளின்
கட்புலனாக பசுமை
ஏன் இத்தனை ஆபாசமாய் தெரிகின்றது?

மாலையில் மயக்கும் நோய்
அதன் நிறம் மங்கிப் போனதோ?

பின்னும்
ரயிலில் இரண்டாம் வகுப்பில்
பயணிக்கும் போது
விழியகற்றாமல் பார்ப்பவனைப்
பார்க்கும் போது
நான் அடைவதென்ன பதற்றமா?”

லாவண்யாவின் இந்தத் தொகுப்பில் மீண்டும் மீண்டும் புறக்காட்சிகளோ அல்லது சில நினைவுகளோ அகத்தின் அலைபாய்தலையே போய்ச் சேருகின்றன.
அழிக்க அழிக்க அண்டமெங்கும் விரிந்து பெருகும் வனக்கடல், பத்திரகாளிப் பாவனை என்று பலவும் சொன்னாலும் கருணையும், ஈரமும், காதலும் கொண்ட இந்தக் கவிதைப் பெண்ணை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆதுரமாக ஏதேனும் பேச வேண்டும் என்று தோன்றுகிறது.

பல கவிதைகளின் கருப்பொருள் காதலே. அதற்கு கோபித்தல், சீண்டல், இறுகுதல், இறைஞ்சுதல், இணைதல் என்று பல பாவனைகள். தமிழில் பக்தியும் காமமும் ஒன்றனக்கலக்கும் பாரம்பரியத்தைத் தொடர்கிறார் சில கவிதைகளில். மலர்மஞ்சம் பாலியைப் போல் விரட்டவிரட்ட விலகாத சிவனையும், மனதில் பள்ளிகொண்ட மேகவண்ணனையும் என்ன செய்வது என்று திகைக்கின்றாள் ஒருத்தி. தலைப்புக் கவிதை, அதீத அழகிகளின் நிலையம் போன்ற புது முயற்சிகளும் இந்தத் தொகுப்பில் கலந்திருக்கின்றன. முந்தைய தொகுப்புகளை விட கவிதைகளில் நுட்பம் அதிகமாகி இருக்கிறது. லாவண்யா சிறுகதைகள், நாவல் என்று தொடர்ந்து இயங்கும் காலகட்டத்தில் இது குறிப்பிடத்தக்க விசயமாகவே தோன்றுகிறது. வாசகர்களுக்கு உருவமில்லா கவிதைப்பெண்ணுடன் உருவாக்கும் நேசத்தைத் தவிர கவிதைகளால் வேறு என்ன செய்யமுடியும்!

பிரதிக்கு :

தமிழ்வெளி 90940 05600
முதல்பதிப்பு ஜீலை 2021
விலை ரூ.100.

One thought on “மண்டோவின் காதலி – லாவண்யா சுந்தரராஜன்:

  1. லாவண்யாவை அவருடைய படைப்பு வலிமையை அவதானித்து நேர்மையாக எழுதப்பட்ட மதிப்பீடு. அறிமுகப்படுத்தப் படவேண்டியவர் என்ற தகுதியை அளிக்கிறீர்கள்.நன்றி.

    Like

Leave a Reply to கோ.புண்ணியவான். Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s