டேவிட் இஸ்ரேலிய எழுத்தாளர். ஜெருசலேமில் பிறந்தவர். இவரது நூல்கள் முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளன. 2017ல் இதே மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த்த A Horse Walks in to Bar என்ற நாவலுக்காக புக்கர் விருதை வென்றவர். இந்த நூல் இந்த ஆண்டின் புக்கர் நீண்ட பட்டியலில் இடம் பெற்றது.
மூன்று தலைமுறைப் பெண்கள், பல வருடங்களுக்குப் பின்னர் பாட்டியின் தொன்னூறாவது பிறந்த தினத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். அம்மாவிற்கு விமானம் சில தினங்கள் தாமதமானதால், அவள் விருப்பப்படி அவளுடைய கதையையும், பாட்டியின் கதையையும் படம் எடுக்கிறார்கள். இருவரின் கடந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்கும் மாறிமாறிப் பயணிக்கும் கதையின் கதைசொல்லி பேத்தி. தன்மையிலும், படர்க்கையிலும் Bits and pieces ஆக வரும் கதை, சரியாகப் புரியவில்லை என்று யாருமே சொல்ல முடியாது, ஏனென்றால் இந்தக்கதை ஒரு மாயச்சுழல்.
யூகோஸ்லேவியாவில் இரண்டாம் உலகப் போருக்குப்பின், Josip Broz Titoவின் அரசாங்கம் Stalin ஆதரவாளர்களைத் தேடி வேட்டையாடுகிறது. ராணுவத்தில் பணிபுரியும் செர்பியரை மணந்த யூதப்பெண்ணின் குடும்பம் இந்த அரசியலின் இடையில் மாட்டிக் கொள்கிறது. விசாரணை என்ற பெயரில் கூட்டிச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்ட கணவனை துரோகி என ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டால் மனைவியும், ஆறுவயது மகளும் பிழைத்து எங்காவது போய்விடலாம், இல்லை என்றால் மனைவிக்குக் கடும்சிறை, மகள் தெருவில் விடப்படுவாள் (Thrown out on the street என்பதன் Literal meaning வேறு) என்பதில் மனைவி பின்னதைத் தேர்ந்தெடுக்கிறாள். அதன் தொடர்ச்சியே இந்தக்கதை.
பெண்களுக்கிடையேயான உறவு இந்த நாவலில் முக்கியமான விசயம். பாட்டி அம்மாவை சிறுவயதில் கைவிட்டது போலவே அம்மா பேத்தியை சிறுவயதில் கைவிடுகிறாள். பாட்டிக்கும் பேத்திக்கும் இடையே புரிதலுடனான நல்லுறவு நிலவுவதைப் போல் பாட்டி- அம்மா, அம்மா-பேத்தி ஆகியோரிடையான உறவுகள் இல்லை. மிகவும் பாதிக்கப்பட்ட உறவுகள்.
பலகாலம் ஒருவரை ஒருவர் அறியாது பிரிந்து இருந்தது கூட இதன் காரணம். எல்லாவற்றிற்கும் மேல் கைவிடப்பட்ட காயம் ஆறாமல் செம்புண்ணாக இருப்பது. ஆனால்
அம்மா-மகள் என்னும் உறவு எல்லா பேதங்களையும் வெல்வது, கொஞ்சம் அருகாமையில் சாய்ந்து கொள்ள தோளைத் தேடுவது. முப்பத்தெட்டு வயதுப்பெண் அம்மாவிடம் நீ எத்தனை மாதங்கள் எனக்கு தாய்ப்பால் கொடுத்தாய் என்று கேட்கும் கேள்வி காலஇடைவெளிகளை கைகளுக்குள் கசக்கி இல்லாமல் போக்குவது.
காதல் என்பது மற்றொரு முக்கியமான தீம் இந்த நாவலில். முதலாவது வேராவிற்கும் அவளது முதல் செர்பியக் கணவனுக்குமானது. அடுத்தது வேராவிற்கும் இரண்டாவது கணவனுக்குமானது. முப்பத்தி இரண்டு வருடங்கள் இணைந்து வாழ்ந்த காதல். ஒன்றிற்காக மற்றொன்றை மறக்காது இருவரையும் கடைசிவரை விரும்பும் காதல்.
அடுத்தது நினாவிற்கும் ரபிக்குமான காதல், முறையற்ற உறவாக இருந்த போதிலும் ஆழம் குறைந்ததல்ல. கடைசியாக கில்லியின் காதல். எல்லாக் காதல்களுமே ஒன்றுடன் ஒன்று போட்டியிடத் தகுதி வாய்ந்தவை.
உண்மையான வாழ்க்கை ஒன்றின் பாதிப்பில் புனைவு கலந்து எழுதப்பட்ட நாவல் இது. டேவிட்டின் மொழிநடை மெல்லமெல்ல நம்மை உள்ளே இழுக்கக்கூடியது. பலவித உணர்ச்சிகளுக்குள் புகுந்து வெளிவரும் எழுத்து. இந்த நூல் இறுதிப் பட்டியலுக்குள் நுழையவில்லை என்றாலும் அவசியம் வாசிக்க வேண்டியது. Contemporary novel என்பது இருநூற்றைம்பது பக்கங்களுக்கும் குறைவாக ஆனால் அசாதாரண வீச்சுடன் எழுதமுடியும் என்பதை நிரூபிப்பது. தமிழ் வாசகர்களுக்கு பழக்கமில்லாத ஆனால் சுவாரசியமான கதைக்களம். தமிழ் மொழிபெயர்ப்புக்கு மிகவும் உகந்த நூல்.