சன்னக்கட்டை – ஆழிவண்ணன்:
ஒரே தொழிலில் இருப்பவர்கள் பொறாமைப் படுவது ஒரு உளவியல். உடன் பிறந்தோரில் ஒருவர் அந்தஸ்து உயர்ந்தால் மற்றவர்களது பொறாமைக்கணைகள் உடன் பாயும். யாரும் அம்பானியைப் பார்த்துப் பொறாமைப்படப் போவதில்லை. தேரையும், சன்னக்கட்டையையும் குறித்து இவ்வளவு விளக்கமாக இப்போது தான் வாசிக்கிறேன். கடைசி இரண்டு பத்திகளுக்கு முன்னே “மிக அருகில் வந்து நின்றது’ என்பதுடன் கதை முடிந்து விடுகிறது.
மானு மோராஸ் – சரவணன் சந்திரன்:
மாய யதார்த்தம், பேண்டஸி, Hysterical realism போன்ற வெகு சில Literary genres தவிர மீதிக் கதைகள் எல்லாவற்றிலும் லாஜிக் பார்ப்பது அவசியமாகிறது. அடுத்து கண்காணாத இடங்களுக்குக் கதைகளை இழுத்துச் செல்வது ஆரம்பநிலை வாசகனுக்கு மட்டுமே பிரமிப்பைக் கொடுக்கக்கூடியது. Morality பற்றி நான் பேசவில்லை, ஆனால் இது குமுதம் வகையறாக் கதை.
பைத்தியம் – போகன் சங்கர்:
அழகான கதை. எவ்வளவு முட்டாள் பெண்ணாக இருந்தாலும் கணவனின் தடம்
மாறுதலை எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடியும். நிகழ்காலம் கடந்தகால நினைவைக் கொண்டு வரும் கதை. அம்மா அவள் நினைத்ததை சாதித்த திருப்தியில் லாலா கடையில் இனிப்பு வாங்கி வருவது, கமலா மாமி கடைசி வரை வெளியே வராதது, அப்பா அன்று வீட்டுக்கு வராதது என்று எல்லாமே அடங்கிய தொனியில் சொல்லப்பட்டிருப்பது அழகு. யாருமே இருபத்தி நான்கு மணி நேரமும் பைத்தியமாக இருப்பதில்லை, சிலர் இரண்டு நிமிடங்கள், சிலர் இருபது மணிநேரம் அவ்வளவு தான் வித்தியாசம்.
எங்கிருந்தோ வந்தான்- எம்.கோபால கிருஷ்ணன்:
வாழ்க்கையில் நிறைய ‘ஏன்கள்’. அதில் ஒரு ஏன் பற்றியது இந்தக்கதை. அனீஷ் அறிமுகமாவதில் இருந்து கதையின் இறுதிவரை அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றிய சித்திரம் கொஞ்சம் கொஞ்சமாக Developஆகிக் கொண்டே இருக்கிறது. அவனுடைய ஒவ்வொரு செயலிலும் அவனைப் புரிந்து கொள்ள வைத்துவிட்டுக் கதையின் முடிவில் அதிர்ச்சியை வைத்திருப்பது நல்ல யுத்தி. மற்ற எல்லோருமே இந்தக் கதையில் பார்வையாளர்கள் தான். பெரியவர் அதிகம் அலட்டிக் கொள்ளாதது, அவர் போல் பழகியவர்களுக்கு இயல்பான விசயம். ஒரு பெண்ணைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அவள் பார்வை சந்தித்தால் பலருக்கு ஏற்படும் கூச்ச உணர்வு இவர்களுக்கு ஏற்படுவதில்லை. எல்லாவற்றிலும் நிதர்சனமான கதை.
அச்சுவெல்லம் – எம்.கே. மணி:
அச்சுவெல்லம் வாய் மாறுவதில் மொத்தக் கதையையும் திருப்பிப் போடுகிறார் மணி. உயிர் பிழைக்க வேண்டுமென்றால் வேறு வழியில்லை. இதில் ஆணென்ன? பெண்ணென்ன? பெண்ணுக்குக் கொஞ்சம் கூடுதல் சிரமம். மணி போல் நறுக்குத் தெறித்தாற்போல் பல்ர் தொட யோசிக்கும் விசயங்களைச் சிறுகதையாக எழுதுபவர்கள் குறைவு. அநாவசிய வார்த்தைகள் மட்டுமில்லை, அவசியமான வார்த்தைகளையே கதைக்குள் ஒளித்து வைத்து நுணுக்கமாகக் கதைகளை எழுதுகிறார் மணி.
மீண்டுமொரு சந்திப்பு – கமலதேவி;
அம்பையின் புதிய சிறுகதைத் தொகுப்பில் வரும் கதாபாத்திரங்கள் வயதானவர்கள். அவர் மட்டுமல்ல, பல ஆசிரியர்களுக்கு இது நேர்ந்திருக்கிறது. ஆனால் கமலதேவியின் இந்தக்கதையின் மையக் கதாபாத்திரங்கள் இருவருக்கும் வயது எழுபது. அது ஒரு ஆச்சரியம். ஜனாவிற்கும், திருவிற்குமான உறவு கதைக்குள் ஆழமாக ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. முதுமை தரும் சுதந்திரத்தை இளம்வயதில் பெரும்பாலும் பெற முடிவதில்லை.
நிர்வாணம் – ஐ.கிருத்திகா:
திருமணத்திற்குத் தேடுகையில் ஆண்கள் Miss Perfectஐயும் பெண்கள் Mr.Perfextஐயும் தேடுகிறார்கள். பலர் நிதர்சனம் புரிந்து விரைவில் சமரசம் செய்து கொள்கிறார்கள். சிலர் கருகிய இளமையைக் குறித்த சுயபச்சாதாபத்தில் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள். மித்ராவின் சிந்தனை எங்கு சுற்றியும் ரங்கனைச் சுற்றுவது போல் ஒன்றில் வந்து நிற்பது பரிதாபத்தை வரவழைக்கிறது. சிறுவயதில் இருந்த குறுகுறுப்பில் இருந்து மித்ரா வெகுதூரம் பயணித்திருக்கும் கதை.
வெற்றியின் விதிகள் – வில்லியம் ஃபாக்னர்- தமிழில் கார்குழலி:
பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் காலத்தியக் கதை. எப்போதுமே ஒரே நாட்டினர் அவர்களுக்குள் அடித்துக் கொள்ளும் போது பரஸ்பர நம்பிக்கையின்மை அதிகமாக இருக்கும். நம்பிக்கையின்மை தான் கதை முழுதும் வருகின்றது அல்லது நம்புவதால் ஏற்படும் விளைவு என்றும் சொல்லலாம். வடக்குக்கும் தெற்குக்கும் நடந்த பிரச்சனையை இப்போது அமெரிக்காக்காரர்களுக்கு சொன்னால் கூடப் புரியாது. இப்போது எந்த Relevanceம் இல்லாத கதை. அதி நீளக்கதை. கார்குழலியின் நல்ல மொழிபெயர்ப்பால் இந்தக்கதையை வாசிக்கையில் ஏற்படும் சலிப்பை ஏதும் செய்யமுடியவில்லை..