சின்ன வயதில் கேட்ட, பிச்சைக்காரன் வரமாகத் தங்கத் திருவோடு விரும்பிய கதை முழுக்கவே சொல்லியவரின் கற்பனையாக இருந்திருக்கக்கூடும். ஆனால் அது அடிப்படை உண்மை ஒன்றைச் சொல்கிறது.
படித்த திருடனுக்கும் படிக்காதவனுக்கும் செயல்முறைகள் வேறு, எனில் செய்வது கடைசியில் திருட்டாகத் தான் இருக்கும். அதிக நூல்களை வாசித்தவர்கள் பண்பாளர்கள் என்ற நம்பிக்கை ஒரு மாயை. அவர்களால் மற்றவர்களை விட எளிதாக முகமூடிகளை மாற்றிக் கொள்ள முடியும்.
பெண்கள் உருகிஉருகி காதல் பண்ணும், கேள்விகள் நிறையக் கேட்கும் கதைகளை எழுதிய எழுத்தாளர் ஒருவர் இருந்தார். ஆதர்சன எழுத்தாளரைக் காணவேண்டும் என்று துடித்த வாசகிகள் பலர் கசப்பான அனுபவங்களை அடைந்திருக்கிறார்கள்.
எழுதியவர்கள் தாங்கள் நம்புவதை எழுதாமல், இப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதைக்கூட எழுதிப் பார்த்து இருக்கலாம். முகநூலில் கூட போராளியாக, சினிக்காக, எல்லோரையும் கிண்டல் செய்பவராக இருப்பவர்கள், நேரில் பணிவாக நடந்து கொள்வதைப் பார்த்திருக்கிறேன். மேடைக்கேற்ற வேஷம் அது, அவ்வளவு தான்.
காந்தி இறந்து இருபது வருடங்களுக்குள் பிறந்தவர்கள், காந்தியைப் பற்றி அதிகமாகப் பேசி இருக்கிறார்கள். அப்போது மதுரையில் மார்க்சியம், தி.மு.க அதிக செல்வாக்கில் இருந்ததால், காந்தியைப் படித்தவர்கள் குறைவாகத் தான் இருக்கும். காந்தி அருங்காட்சியகம், பள்ளியின் ஒருநாள் சுற்றுலா. என்னளவில் சத்தியசோதனை, காந்தியின் எழுத்துகள் சில பாகங்கள் தவிர்த்துக் காந்தியின் எழுத்துகளை இன்று வரைகூட அதிகம் படித்ததில்லை. வெகுசில காந்தியவாதிகள் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் பொதுவாகக் காதலியைக் கடத்திச் சென்றால் கூட கடுமையாக முகபாவம் காட்டாதவர்களாக இருப்பார்கள். இந்தியாவின் எந்தத் தலைவரைப் பழித்துப் பேசினாலும் அடுத்து நிகழவிருக்கும் கைகலப்பு இவர்களிடம் நேர்வதில்லை.
குறைந்த அளவு எண்ணிக்கையில் இருந்தாலும் இவர்கள் வயதாக ஆக சிறுவயது நம்பிக்கையை மாற்றிக் கொள்ளாது, மறந்தும் புறம்தொழானைப் போல் இருப்பார்கள். அதில் ஒருவர் பணியில் ஓய்வுபெறும் வயதில் வீட்டில் வன்முறை செய்தார் என்று கேட்டதில் இருந்து, எல்லாவற்றையுமே மறுபார்வைக்கு உட்படுத்த வேண்டும் என்ற விதியை இந்த விஷயத்தில் நான் மறந்தது நினைவுக்கு வந்தது. “கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ! உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ!”