“இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே” என்பது போன்ற பாடல்களைக் கேட்டுப் பதின்மவயதில் நான் கொண்ட கற்பிதமே வேறு. காதலும், காமமும் தமிழர்கள் அதிகமாகப் புனிதப்படுத்திய விஷயங்கள். அடைய முடியாதவர்களின் மீதான ஏக்கத்தை நாம் உயிர்காதல் என்ற உருக்கொடுத்து பீடத்தில் அமர்த்தி வைக்கிறோம். வருவோர் போவோர் எல்லாம் அதை வழிபாடு செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்.
உலகத்திலேயே மிக மோசமான கெட்ட வார்த்தை இந்த Soulmate என்ற வார்த்தை. தினமும் காலையில் நீங்கள் பல்துலக்கியதும், உங்களுக்கு மிக விருப்பமான இனிப்பை விடாது கொடுத்தால் எத்தனை நாட்களுக்கு வெறுப்புத் தட்டாமல் இருக்கும்?
நீண்டகால தாம்பத்யம் என்பதும் அது தான்.
சிறைப்பறவைகள் கூவலாம், கூடலாம் என்றாலும் சிறை என்பதே நிதர்சனம். இருவருமே மிக நல்லவர்களாக இருந்தாலும், ஒரு வாழ்க்கை முழுவதையும் மற்றொருவரிடம் பணயம் வைப்பதில் இருக்கும் முட்டாள்தனத்தை நாம் உணரவேயில்லை.
ஸ்வரம் பிசகாத தாம்பத்யம் என்பது கன்னித்தீவு கதையை விட கற்பனைவளம் அதிகம் கொண்டது. நூறாயிரம் காரணங்களில் ஏதோ ஒன்றிற்காக சேர்ந்து வாழ்தல் தவிர்க்க இயலாது போகிறது. இதில் வறட்சிக்கு மறுபெயர் உண்ணாவிரதம் என்பது போல் glorification.
நான் Sardonic person இல்லை. ஆனால் யாரும் இது கடவுள் போட்ட முடிச்சு, காலமெல்லாம் தாம்பத்யத்தில் தேனாறு, பாலாறு ஓடியது என்றால் அவர்கள் மனதுக்குள் வருத்தப்பட்டுக் கொண்டு, வெளியே பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம். சாப்பிட்ட இலையில் விளக்கெண்ணையைத் தடவி, கடந்து போகிறவர்கள் இலையிலே மீந்ததே இவ்வளவு நெய்யா என்று பொறாமை கொள்ளட்டும் என்று அற்பசந்தோஷம் கொள்பவர்கள்.
எனில் தாம்பத்யம் என்பது என்ன? மணவாழ்க்கையில் வேண்டுமென்றால் தம்பதிக்குத் தம்பதி சமரசங்களின் சதவீதங்கள் மாறும். ஒருவரே காலம் முழுக்க விட்டுக் கொடுத்திருக்கலாம் அல்லது பரஸ்பரம் அனுசரித்திருக்கலாம். என் மனைவி எனக்காக செய்த தியாகங்கள் ஏராளம், அவளை விட்டு விலகுவதை என்னால் கற்பனை செய்யக்கூட முடியாது. ஆனால் காலம் முழுதும் காதலாகிக் கசிந்துருகினேன் என்றால் அது பொய். மற்றவர்களைப் பார்க்கையில், என்னுடைய அந்தஸ்துக்கு இது நல்ல துணை என்று, வெளியில் போனால் தெருவில்தான் நிற்க வேண்டும், குடும்ப மானம், பிள்ளைகளின் எதிர்காலம் என்று பல காரணங்களினால் மணவாழ்க்கைகள் பிழைத்திருக்கின்றன. புகழ்பெற்றோரின் துணைகள் வெளிநாட்டினரைப் போல இங்கே விட்டுவிலகத் தயாராக இருப்பதில்லை. புகழின் வெளிச்சம் அவர்கள் மீதும் சிறிது விழுவது அவர்களுக்குப் பழக்கமாகிவிட்டது. நீண்டகாலம் சேர்ந்திருந்து, பழக்கத்தினால் வரும் ஒரு இயல்பான அன்பை நாம் தெய்வீகக்காதல் என்றால் எப்படி?
நாற்பது வருடங்கள் மாறாக்காதலுடன் தாம்பத்யம் என்று யாரேனும் சொன்னால், எந்த எதிர்வினையும் செய்யாது காற்றுவெளியை உற்றுப் பாருங்கள். கொஞ்ச நேரத்தில் அவர்களே கிளம்பி விடுவார்கள்.