கிழிவு -. கலாமோகன்:
கலாமோகனின் கதைகள் Fantasyக்கு கதை வடிவம் கொடுக்க முயல்பவை. நான் வாசித்த அநேக கதைகளில் காணும் பெண்களை எல்லாம் கூடும் வயதான பிம்பம் ஒன்று வந்து போகும்.
அவரது எழுத்தில் அலைபாயும் உணர்வுகளைக் கடத்த முயலும் சற்றே பிறழ்ந்த மனம் இந்தக் கதையிலும் வருகின்றது. சொந்த நாட்டில் அகதியாக நடத்தப்படும் நிலை யாருக்கும் வரக்கூடாது. சிங்களவரும் தமிழரும் ஒருவரை ஒருவர் பார்த்து பயப்படுகின்றனர், ஒருவருக்கொருவர் உதவுகின்றனர். எல்லாம் OK. வாசித்து அந்த நேரத்தில் மறந்துபோய் பின் எவ்வளவு யோசித்தாலும் நினைவுக்கு வராமல் போகும் கதைகளை எத்தனையெத்தனை பேர் எழுதுகிறார்கள்.
தன் இனத்திற்காகப் போராடி, தோல்வியடைந்து, உயிர்தப்பி, தனக்குத் தெரிந்த தொழிலான கொலைத் தொழிலை வாழ்வாரத்திற்காக ஏற்றுக்கொண்டு, தன் சொந்த இனத்தவனை வேறொரு நாட்டில் கொல்லும் கதையில், சமகால வரலாறு இருக்கிறது, வாழ்க்கையின் Irony இருக்கிறது, கதையும் அங்கே இலக்கியமாகிறது. இலக்கியங்களைநாம் எளிதில் மறந்து போவதில்லை.
இணை – யுவன் சந்திரசேகர் :
சமகால யதார்த்த வாழ்க்கையை, குறிப்பாக மத்தியவர்க்க பிராமண வாழ்க்கையை, அச்சில் வடித்தது போல் எழுதும் யுவன்சந்திரசேகருக்கு ஏதோ ஒரு காரணத்தினால் இலக்கியத்தில் அவருக்கு உரிய இடம் கிடைத்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
சிவாமி போல் எத்தனை பேரைப் பார்த்திருப்போம்! எதற்காக காலம் முழுதும் ஒருவரை அண்டிய வாழ்வு? அதைக் காட்டிக் கொள்ளாது சமத்காரமான பேச்சு. பத்மினி கெட்டவளா? நிச்சயமாக இல்லை. வசதிகள், தொந்தரவாக உணரும் தருணம் எல்லோருக்கும் நேர்வது. ” சரி இறங்கிக்கிறேன்” என்பதைக் கேட்டதும் உள்ளுக்குள் ஏதோ அதிர்ந்தது. வெங்கிடுவை சிவாமியுடன் இணைக்கும் நேர்க்கோடு கதையில் சொல்லாமலே புரிகிறது. அரசு வங்கியில் DD எடுக்க நண்பரின் மனைவி பணிபுரியும் கிளைக்கு சென்றிருந்தேன். அவர் Formஐ வாங்கிக் கொண்டு நின்று கொண்டே இருந்தார். சங்கடமாக உணர்ந்தேன். அந்தப் பெண்மணியே Clearing வரும்போது கொடுத்தனுப்பி விடுகிறேன் என்றார். நண்பரிடம் சொன்னாராம். அவர் Chief Manager எப்படி அவர் நிற்கையில் நாம் உட்கார முடியும்! இந்தக் கதையைப் படிக்கையில் அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. Wife beater வெளியில் நாகரீகமாகநடந்து கொள்வதும் அவனை மீறி அவனது அடிமனம் வெங்கிடுவைப் பற்றிச் சொல்கையில் வெளிப்படுவதும்………
யுவன் சந்திரசேகரை வாசிப்பது சுகம்.