வியூகம் இதழில் வெளியான கட்டுரை
ரோஸ்மேரி கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர்,கவிஞர், பேராசிரியர். Stalin’s daughter என்ற இவரது முந்தைய நூல், பரவலான கவனத்தைப் பெற்றது. 2022 ஜனவரியில் வெளிவந்த இந்த நூல், தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது.
ஆனி ஃப்ராங்க் என்ற பதிமூன்றுவயது சிறுமியின் டயரி உலகத்தில் அதிகமாக வாசிக்கப்பட்ட நூல்களில் ஒன்று. இரண்டு வருடம், முப்பது நாட்கள் மறைவிடத்தில் இருந்த ஆனியின் குடும்பம், கண்டுபிடிக்கப்பட்டு வதைமுகாமுக்கு அனுப்பப்பட்டதில், தந்தையைத்தவிர குடும்பம் மொத்தமும் அழிக்கப்படுகிறது. கைப்பற்றிய ஜெர்மானிய வீரர்கள், அலட்சியமாகத் தூக்கி எறிந்த டயரி, பின்னாளில் உலகை உலுக்கிய புத்தகமாக
மாறப் போகிறது.
1944ல் நடந்த குற்றத்தை எழுபத்தி இரண்டு வருடங்கள் கழித்து விசாரணைக்கு எடுக்கும் குழுவில், வரலாற்று ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், துப்பறிவாளர்கள், காவல்துறை, உளவுத்துறையைச் சார்ந்தவர்கள் என்று பலர் இருந்தாலும், FBI அனுபவம் பெற்றவர் வேண்டும் என்று அவரையும் சேர்த்துக் கொள்கிறார்கள். எனவே இந்த நூலின் பின்னணியில் பெரிய குழுவின் பலவருடங்களின் ஆராய்ச்சி புதைந்திருக்கிறது.
1944 Augustல் கைதுசெய்யப்பட்டு வதைமுகாமுக்குக் கொண்டு செல்லப்பட்ட, மூன்று குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேரில் ஆனியின் தந்தை Otto மட்டுமே உயிர் பிழைக்கிறார். 1945 ஜனவரியில் ருஷ்யப்படையினரால் காப்பாற்றப்படுகிறார். தாங்கள் தோற்கப் போகிறோம் என்பதைத் தெரிந்து கொண்ட, ஜெர்மானியர்கள் கைதிகளை அவசரமாகக் கொல்வதிலும், வதைமுகாம் போன்ற தடயங்களை அழிப்பதிலும் அவசரமாக ஈடுபடுகிறார்கள்.
1947 மற்றும் 1964 ஆகிய ஆண்டுகளில் காவல்துறை விசாரணை நடந்திருக்கிறது.
Mellisa Muller, Carol Ann Lee போன்ற ஆசிரியர்கள் புலனாய்வு செய்து நூல்கள் வெளியிட்டுள்ளனர். ஆனால் இந்த ஆய்வு, Large Scaleல் மிகுந்த பொருட்செலவில், பல்துறை நிபுணர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. ஆஸ்திரியா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, இஸ்ரேல், ருஷ்யா, நெதர்லாந்து உள்ளிட்ட 29 நாடுகளின் National Archieveகளின் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன.
Kopgeld என்பது நாஸிகள் வைத்திருந்ந ரசீதுகள். யூதர்களின் பதுங்குமிடத்தைக் காட்டிக் கொடுப்பவர்களுக்கு இன்றைய மதிப்பில் $47 வழங்கப்பட்டதற்கான ரசீதுகள். ஆனியும் மற்ற ஏழுபேரும் சிறைப்பட்ட தேதியில் ரசீது எவ்வளவோ ஆவணங்களைத் தேடியும் கிடைக்கவில்லை. கைதுசெய்யப்பட்ட யூதர்களுடன் கைதியாகக் கலந்து, அவர்களிடமிருந்து மற்ற யூதர்களின் மறைவிடங்கள் பற்றித் தகவல் தெரிவித்தவர்களும் இருந்தார்கள்.
யார் ஆனி குழுவைக் காட்டிக் கொடுத்திருக்கக்கூடும்?
முப்பத்தோரு பல்துறை நிபுணர்கள் கொண்ட குழு, இருபதுக்கும் மேற்பட்ட ஆலோசகர்கள், இருநூறுக்கும் மேற்பட்ட உதவியாளர்கள், ஆறுவருடத்திற்கு ஆய்வு செய்து, பல்வேறு கோணங்களில் நவீன ஆய்வுயுத்திகளை உபயோகித்து, பல சந்தேகத்துக்கிடமானவர்களை ஒவ்வொருவராக கழித்து, கடைசியாக குழு அடையாளம் கண்டுபிடித்தது ஒருவரை.
இத்தனை ஆய்வுக்குப்பிறகும் அவராக இருக்க 85% சாத்தியக்கூறு இருப்பதாகக் குழு சொல்கிறது. காட்டிக் கொடுத்தது ஒரு யூதர். காரணம்? தன் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்ள! எல்லாக் கதைகளிலும் முடிவு தன் இனம் வெட்டிச் சாய்ப்பதாகத் தான் இருக்கிறது.
நூல்:
The Betrayal of Anne Frank- A Cold Case Investigation By Rosemary Sullivan:
Released in January 2022.