அரசரடி மைதானத்தில், கல்லூரி விடுமுறை நாட்களில் அதிகாலைப் பொழுதுகள் தொடர் காப்பிகளிலும், புகைபிடித்தலிலும் கழியும்.
ரோனி போன்ற நண்பர்கள் இரண்டும் செய்வதில்லை. மைதானத்தை மூன்று நான்கு முறைகள் சுற்றி வந்து, வேர்வையும், சோர்வும் வடிய அரைச்சுவரின் மேல் சாய்ந்து அமர்வார்கள். ரோனிக்கு ஏழெட்டு வருடக் காதல் இருந்தது. எங்களில் முதலாவதாக அவனுக்கு நல்ல வேலையும் கிடைத்தது. காதலித்த பெண்ணை மணமுடித்து அடுத்த வருடம் பிறந்த பெண் குழந்தைக்குத் தனக்கு மிகவும் பிடித்த டென்னிஸ் வீராங்களையின் பெயருமிட்டான். பதவி உயர்வுக்குப் படிக்க ஆரம்பித்தான். ஒழுக்கமான அதிக சிக்கல்கள் இல்லாத வாழ்க்கை. எப்படி என்றாலும் முப்பதுகளின் இறுதியில் முதல் மாரடைப்பிலேயே இறக்கும் வயதுமல்ல, உடலுமல்ல அவனுக்கு.
சமீபத்தில் மதியவிருந்து ஒன்றுக்கு வந்திருந்த இருபது வயதை இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன் கடந்திருந்த பெண்கள் எல்லோரும் சொல்லி வைத்தது போல் உருளைக் கிழங்கு சிப்ஸைத் தொடாமல் நகர்த்தினார்கள். மிகவும் சுவையாக இருக்கிறது என்று சொல்லிய பின்னும், புன்சிரிப்புடன் ஒன்றை எடுத்தால் தொடரச் சொல்லும் என்று மறுத்தார்கள். காலை ஐந்தரை மணிக்குக் காரை நிறுத்திச் சுடச்சுட போட்டுக் கொண்டிருந்த வடைகளைத் தின்றது, திண்டுக்கல் தாண்டி வந்து விட்டோம், மதுரை சிம்மக்கல்லில் கோனார் மெஸ்ஸில் சாப்பிட்டுத் திரும்பலாம் என்று அதிகமாக எண்பது கிலோ மீட்டர் (போக வர) பயணம் செய்தது போன்ற ஆயிரம் நிகழ்வுகளில் ஒன்றிரண்டு மனதுக்குள் வந்து போயின.
Health consciousness என்பது அப்போது குறைவாகவும் இப்போது அதிகமாகவும் இருக்கிறது. நடையோ அல்லது வேறு உடற்பயிற்சிகளோ அத்தியாவசியம் என்பதிலும் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. சோம்பேறிகள் மட்டுமே விதண்டாவாதம் செய்வார்கள். ஆனால் எனக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்பதற்காக, என்னை ஆசைபொங்கப் பார்க்கும் நெய்வாசத்துடன் அறைகள் அறைகளாய்க் கொண்ட கட்டி மைசூர்பாகைத் தவிர்த்து இந்த வாழ்க்கையில் எதைச் சாதிக்கப் போகிறேன்.
முடிவு தெரியாத அநித்திய வாழ்க்கையில் அந்தந்தக் கணத்தில் வாழ்வது என்பது Prudent அல்லவா? நண்பனை எல்லோரும் மிரட்டினார்கள். “அவள் கள்ளவீட்டுப் பொண்ணுடா, தொட்டாக் கண்டிப்பா கையை வெட்டிருவாங்க”. அவன் கையை எங்கள் கண்கள் முன்காட்டிக் கொண்டு சொன்னான். ” தொடாம இந்தக் கையை வைச்சுக்கிட்டு அப்புறம் என்ன பண்றது?”