ஆசிரியர் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர். ஊடகவியலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. இது இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு.
கார்த்திக் புகழேந்தியின் இந்தத் தொகுப்பில் இரண்டு விதமான கதைகள் இருக்கின்றன. முதலாவதாக வாய்வழி சொல்லப்படும் நாட்டார் கதைகள். இந்தக் கதைகளைச் சொல்லும் இவரது மொழிநடையே வித்தியாசமானது. வட்டார வழக்கு, அப்பாவித்தனம், சன்னதம் எல்லாம் கலந்த மொழி. இரண்டாவதாகச் சொல்லும் நடப்புக் கதைகளில் எல்லோரும் உபயோகிக்கும் எழுத்து மொழி.
நாட்டார் கதைகளில் இவர் வீச்சு அதிகம் என்பது என் அபிப்ராயம். அநேகமான கதைகளில் வஞ்சம் தீர்ப்பது கருப்பொருளாக வந்தபோதிலும் ஒவ்வொன்றும் மற்றதில் இருந்து வேறுபட்டவைகள். ” இன்னுமா உனக்கு அந்த ராஜா மகன் யாருன்னு தெரியல” என்று கேட்கும் கதையும், அம்மன் மொத்தமாக மக்களின் நம்பிக்கையை அடித்து நொறுக்கிவிட்டு மலையேறும் கதையும் வஞ்சம் என்னும் மையக்கண்ணியில் இணைந்திருந்தாலும் முற்றிலும் வேறுகதைகள். அது போலவே,
வஞ்சகமாகக் கொல்லப்பட்டவளின் பாதி முடிந்த பேறுகாலக்குடிசையின் முன் தன் பிள்ளையைக் கிடத்தி, இனி இது உன் பிள்ளை என்பது. நாட்டார் கதைகளின் கற்பனைகள் நம்மை எங்கெங்கோ கொண்டு செல்பவை. ஒரு கட்டுக்குள் நிறுத்தி வைக்க முடியாதவை. கார்த்திக் அதே பாரம்பரியத்தைத் தன் கதைகளிலும் தொடர்கிறார்.
சமகால சரித்திரத்தை மையமாகக் கொண்ட ஜில்லா விலாசம், முக்கால் தகுதியும் இல்லாதவன் அக்கா மேலும் ஆசைப்படுவது (கல்மனம்) நீராடும் கடலுடுத்த, பூனைக்குட்டியைக் கொஞ்சுகிறவள் என்று
எல்லாக் கதைகளுமே நன்றாக வந்திருக்கின்றன. பெண்கள் காதலித்தால் இருபத்தி நாலுமணிநேரத்தில் இருபத்தைந்து மணிநேரத்தை எடுத்துக் கொள்வது சகஜமான விஷயம். கல்மனம் கதையில் அக்கா தங்கை உறவின் பல பரிமாணங்கள் வெளியாகி இருக்கின்றன.
வீட்டை விட்டு ஓடிவந்த பொற்செல்வி தான் என்னை அதிர வைத்தது. சரியாக மதிப்பெண் பெறவில்லை, காவல் நிலையம், பெண் துணை என்று சரளமாகச் செல்லும் கதையில் அந்தக் கேள்வியை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரே வரியில் கதையைச் சுத்தமாகத் திருப்பிப் போடும் எந்தக் கதையுமே நல்ல கதை தான்.
எட்டு கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பில் அநேகமான கதைகள் ஏற்கனவே வெளி வந்தவை. ஆனாலும்தொகுப்பாகப் படிக்கையில் இதற்குமுன் தவறவிட்ட Pattern புரிபடுகிறது. ஒரே பாணியில் கதைகள் எழுதுவது ஒரு stagnant மனநிலையைக் கொண்டு வந்துசேர்க்கும், ஆனால் எளிதில் மற்றவர்களால் காப்பி அடிக்க முடியாத வட்டார வழக்கு, நாட்டார் சொல்லியல், கற்பனை, இது போன்ற கதைகளுடனான பரிட்சயம் எல்லாம் சேர்ந்து ஒருவருக்குக் கிடைப்பது என்பது Gift. அதைக் கார்த்திக் தவறவிடாது கையகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பிரதிக்கு :
ஆகுதி 89397 45030
முதில்பதிப்பு மார்ச் 2022
விலை kindle Rs.117