மெல்சோர் மெக்ஸிகோவில் பிறந்தவர். மெக்ஸிகோவின் இன்றைய முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். இவரது முந்தைய நாவல் Hurricane Season NBA நெடும்பட்டியலிலும், புக்கர் இறுதிப் பட்டியலிலும் வந்திருந்தது. இது இந்த ஆண்டு புக்கரின் நெடும் பட்டியலில் இடம்பெற்ற நாவல்.
மெல்சோர் பத்திரிகையியல் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது, ஒரு கட்டுரைப் போட்டிக்காக அவர் ஊரின் ஒரு கிராமத்தில் பாலியல் வல்லுறவு செய்ய வந்தவனை மரத்தில் கட்டித் தீயைப் பற்ற வைத்த உண்மை நிகழ்வை எழுத நினைக்கிறார். அதை எப்படி எழுதுவது என்ற யுத்திகள் தெரியாது சீனியர் மாணவனை அணுகுகிறார். யுத்திகள் சொல்ல அவன் கேட்டது இவர் ஓரிரவு அவனுடன் தங்க வேண்டுமென்பது. கடைசியில் கட்டுரை நன்றாக வந்து, இரண்டாம் பரிசைப் பெறுகிறது. மெல்சோரின் இலக்கிய அறிமுகம் இவ்வாறாக.
பணக்கார, தாத்தா, பாட்டி வீட்டில் வாழும், படிப்பு வராத, எந்நேரமும் Porn Videos பார்க்கும் வெள்ளைக்கார குண்டு பையனுக்கு பக்கத்து வீட்டில் இரு குழந்தைகள் பெற்ற சீமாட்டியின் மேல் மையல். பள்ளியை விட்டு விலகிய, வறுமையில் இருக்கும், அம்மாவிடம் தினம் திட்டும் அடியும் வாங்கும், ஐந்து வயது அதிகமான பெரியம்மா மகளினால் தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்குள்ளாகும், பணியிடத்தில் கடுமையான வேலைகள் செய்ய நேரிடும், பதினாறு வயது கறுப்பினச் சிறுவனுக்கு எல்லாவற்றிலும் இருந்து தப்பிக்க வேண்டும். இரண்டு சிறுவர்களின் நோக்கமும் நிறைவேற அபாயகரமான திட்டம் ஒன்றைக் குண்டுபையன் தீட்டுகிறான். அதிலிருந்தே கதை ஆரம்பிக்கிறது.
போதை, வன்முறை, Incest, சுரண்டல் என்பதெல்லாம் Mexican நாவல்களில் அடிக்கடி வருகிறது. ஆனால் அவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு வன்முறை இந்த நாவலில். மெல்சோர் நீண்ட வாக்கியங்களில், தான் கேள்விப்பட்ட மெக்ஸிகன் வாழ்க்கைக்குப் புனைவு வடிவம் கொடுத்திருக்கிறார். திருட்டுக்கு கார் வேண்டும் என்பதற்காக, டாக்ஸி டிரைவரை துப்பாக்கிமுனையில் கார்
bootல் கட்டிப்போட்டுக் காரைக் கடத்திப் போவது நாவலில் வருவது போலவே உண்மையில் நடந்த சம்பவம். நாவலை வாசிக்கும் போது வேறு யாரும் எட்டிப் பார்த்தால் புத்தகத்தை மூடிவிடுங்கள், மூன்றாம் நபர் இருக்கும் போது நூலின் ஆடியோவைக் கேட்காதீர்கள். பக்கத்திற்கு பக்கம் அவ்வளவு கெட்ட வார்த்தைகள் இருக்கின்றன. நாம் இங்கே ஆணெழுத்து, பெண்ணெழுத்து என்று கட்டம் போட்டுக் கொண்டிருக்கிறோம். Powerful writing மெல்சோருடையது.