லூக்கா 5:8 – வைரவன் லெ.ரா:
கடவுள் என்பது ஒரு நம்பிக்கை. சாபம் என்பது மற்றொரு நம்பிக்கை. இரண்டு நம்பிக்கைகளுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஒருவன் பற்றிய கதை இது. மனைவி ஏன் பொய்சாட்சி சொல்லும் ஒருவனை வாழ்க்கைத்துணையாகத் தேர்ந்தெடுக்கிறாள்? அவளுக்கு வேண்டியது சொன்னதைக் கேட்டு நடக்கும் பாதுகாப்பான ஒருவன். மனைவி முழுக்கவே Practicalஆக இருக்கையில் இவனது பொறுப்புகள் குறைந்தது என்று நிம்மதியாக இருக்காமல் ஏன் அலைபாய்கிறான்! சிலர் அப்படித்தான் அவர்களே ஏற்படுத்திக் கொண்ட வளையத்தில் மாட்டிக் கொண்டு வெளியே வரமுடியாது கடவுளை உதவிக்குக் கூப்பிடுவார்கள். கடவுள் வா என்றாலும் வருவதில்லை போ என்றாலும் வரப்போவதில்லை. இயல்பான கதை.
பார்த்தல் – க.கலாமோகன்:
பிரான்ஸில் வயதானவர் ஒருவரைக் காணும் பெண் எல்லோரும் விரும்புவார்கள். கலவி முடிந்ததும் இதைப்போல் பார்த்ததில்லை, என்பார்கள். இதே Templateஐ சுற்றி வரும் இவரது கதைகள். மாறுதலுக்கு இந்தமுறை பணம் அதிகம் என்று அழகியை விட்டு ஓடுகிறார் முதியவர். ஆம் ஓடுகிறார். யார் கொண்டு வந்து சேர்த்தானோ அவனையே மீண்டும் பூங்காவில் சந்திக்கிறார். உலகம் மிகச்சிறியது என்பது கதை சொல்லும் நீதி!
பதிலீடு – காளீஸ்வரன்:
கதை மொத்தமுமே கடைசிப்பத்தியின் கனத்தில் நிற்கிறது. கிராமத்தில் வருடாவருடம் நடக்கும் நோம்பியை தவறவிடாது தொலைதூரத்தில் இருந்து வருகிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள். மருமகளை மகளாக நடத்தினால் குடும்பசாபம் அவள் மேல் விழுமா? இயல்பாக எந்தத் தங்குதடையும் இல்லாமல் விரையும் கதை. அம்மாவின் பரிதவிப்பு, ஆர்ப்பாட்டம், அப்பாவின் அழுத்தம் என்பது கிராமத் தம்பதிகளுக்கு பொருந்தி வந்திருக்கிறது. நாம் பலமுறை பார்த்தது.
நன்னீர் – ஹேமபிரபா:
வாய்மொழிக் கதை பாணியில் சொல்லப்பட்டிருக்கும் கதை. பழியோ, பாவமோ மக்கள் இயல்பாகக் கடந்து செல்கிறார்கள். மீனாட்சி ஊரை விட்டுக் கிளம்ப வேண்டும் என்று எல்லாமே காத்துக் கொண்டிருந்தது போல் காரியங்கள் நடக்கின்றது. உப்பு கலந்த பால் திரிவது சகுனத்தடையாவது கதையில் முக்கியமான திருப்பத்திற்கு உதவுகிறது. இயல்பாகச் சொல்லப்பட்ட கதை.
கங்காணி – ப.சுடலைமணி:
கங்காணி நெடுங்கதை. பெரும்பாலும் சிறுவனின் பார்வையில் சொல்லப்படும் கதை. அத்தை மகள்கள் மூத்தவர்களாக இருந்தால் கூப்பிட்டு வைத்து கிண்டல் செய்வது ஏதோ போன ஜென்மத்தில் நான் பார்த்தது போல் இருக்கிறது. எத்தனையோ உறவுகள், சண்டையும் பிரியங்களுமாக நகர்ந்த காலங்களை விட்டுத் தனியே நிற்கிறோம். ஆறாம் வகுப்பு முடிக்கப் போகும் பையனுக்கு விவரம் தெரியாதா? நாம் தான் பிஞ்சில் பழுத்துவிட்டோமா! எங்கேயும் தொய்வில்லாமல் வேகமாக நகரும் கதை.
ஜெயந்தி – அசோக்ராஜ்:
Lovestruck Adolescent பற்றிய கதை. இவர் கதையில் எவ்வளவு தூரம் கற்பனை என்று தெரியாது. ஆனால் முப்பது வருடங்களுக்கு முன்னால் சித்தூரில் ஒரு அக்கா, தங்கையிடம் தப்பு ஏதாச்சும் பண்ணே தொலைச்சுடுவேன் என்று எச்சரித்து விட்டு அவளைக் காதலனிடம் விட்டுவிட்டு ஒரு மணிநேரம் கழித்துக் கூட்டிச்சென்றாள்.
பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்று யூகிக்க முடியாததால் தான் வாழ்க்கை இவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது.
கடல்மனிதன் – கை.அறிவழகன்:
இது குறுங்கதையில்லை. சிறுகதை. வயிற்றுக்காக மனிதன் அங்கே கயிற்றில் ஆடுறான் பாரு என்ற திரைப்படப் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன. coincidences இல்லாமல் புனைவுகள் இல்லை. ஆனால் தமிழில் நாம் அதிகம் அவற்றை மட்டும் நம்பியே கதைகள் எழுதுவது போல் தோன்றுகிறது.
பந்தயம் – ஆன்டன் செகாவ் – தமிழில் கீதா மதிவாணன் :
எனக்கு மிகவும் பிடித்த செகாவ்வின் கதை இது. புத்தகங்கள் ஒரு மனிதனின் மனதில் ஏற்படுத்தும் வேதியல் மாற்றங்களையும், பதினைந்து வருடங்களின் தனிமையை புத்தகங்கள் மூலம் கடப்பதையும், பதினைந்து வருடங்களில் வாழ்க்கை எப்படி தடம் மாறிப்போகிறது என்பதையும் ஒருங்கே சொல்லும் கதை. எவ்வளவு அழகான மொழிபெயர்ப்பு கீதா மதிவாணனுடையது. இவர் நல்ல நாவல் ஒன்றை மொழிபெயர்க்கவேண்டும் என்பது என் அவா.
தாந்தேயின் தரிசனம் – எலிஸபெத் ஹாரிஸன்- தமிழில் தாமரைக்கண்ணன்:
இது ஒரு ஆன்மாவின் பயணம். நரகத்தின் பல இன்னல்களைக் கடந்து சொர்க்கத்தைச் சென்றடைவது. Divine Comedyஐத் தழுவிய கதையைத் தழுவிய கதை இது. தாந்தேயின் புகழ்பெற்ற நூல் எதைப்பற்றிச் சொல்கிறது என்பதை சுருக்கமாக இந்தக் கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம். சிறார்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்குமான கதை.
சிறப்பான மொழிபெயர்ப்பு.
பாட்டி சொன்ன கதை – ஐசக் பாஷவிஸ் சிங்கர் – தமிழில் சக்திவேல்:
பாட்டி சொல்லும் கதை, வாய்மொழிக் கதைகளுக்கேயுரிய பேண்டஸி, Gothic touch, சுவாரசியம், யாரையும் எளிதில் நம்பக்கூடாது என்று குழந்தைகளுக்கான நீதிபோதனை எல்லாமும் சேர்ந்து வந்திருக்கிறது. நல்ல மொழிபெயர்ப்பு.