ஆசிரியர் குறிப்பு:
கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டம் களம்பூரில் பிறந்தவர். மலையாளத்தில் ஐம்பது நூல்களுக்கு மேல் எழுதியவர். சென்னையில் இருந்த போது தமிழ் எழுதப்படிக்கக் கற்றுக் கொண்ட இவர் தமிழில் எழுதிய முதல் நாவல் இது.
துரியோதனன் மரணப்படுக்கையில் இருப்பதில் இருந்து இந்த நாவல் ஆரம்பிக்கிறது. துரியோதனன் பழங்கணக்கைக் காலம் கடந்து சரிபார்க்கிறான். நாவல் முழுக்கவே நனவோடை யுத்தியில் நகர்கிறது. துரியோதனன் பார்வையில் நாவல் என்பதால் கிருஷ்ணன், பாண்டவர்கள் வில்லனாகிறார்கள்.
துரியோதனன் கெட்டவன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் முழுக்கவே கெட்டவன் என்று யாருமில்லை. ஹிட்லருக்குள் ஒரு Artist இருந்தான். ஆனால் இந்தியர்களாகிய நாம் ஒருவரை முழுமையாகப் புனிதப்படுத்துதல் அல்லது செய்வதெல்லாம் தவறு என்ற இருமுனைகளில் ஒன்றில் நிற்கப் பழகியவர்கள். காந்தாரி தெளிவாகச் சொல்லுகிறாள், போகாதே இன்று உனக்கு மரணம் நேருமென்று. இத்தனை பேர் என் பொருட்டு இறந்தபின் நான் மட்டும் இருந்து என்ன செய்யப் போகிறேன் என்பதே அவன் பதில். இத்தனைக்கும் அவன் தாய் தந்தையர், மனைவி பானுமதி உயிருடன் இருக்கின்றனர்.
இராமாயணத்தை விட மகாபாரதம் மிகவும் பிரபலமானது. எத்தனையோ பாரதங்கள், எத்தனையோ கிளைக்கதைகள், எத்தனையோ நூல்கள், எத்தனையோ கோணங்கள் என்றாலும் பாரதம் நமக்கு சலிக்கவில்லை. தருமனை வஞ்சகமாக சூதாட்டத்திற்கு அழைத்தது தவறு. ஆனால் மதிமறந்து எல்லாவற்றையும் பணயம் வைத்தது சரியானதா? பீஷ்மர் உட்பட எல்லோருமே பாண்டவர்களின் மேல் தனிப்பாசம் கொண்டிருந்தனர். குரு துரோணர் சொந்த மகனை விட அர்சுனனை அதிகம் நேசித்தார். விதுரனின் வயிறு அஸ்தினாபுரத்தில் ஆனால் இதயம் எப்போதும் பாண்டவர்களிடத்தில். துரியோதனன் இடத்தில் நாம் இருந்திருந்தால் மொத்த உறவினர்களின் பாரபட்சத்தை பொறுமையாக ஏற்றுக் கொள்வோமா?
பாபுராஜ்ஜின் தமிழ் பிழையில்லாது திருத்தமாக இருக்கிறது. தமிழில் முதல் நாவல் என்பது குறிப்பிட்டிருக்காவிடில் யாருக்கும் தெரியாது. முழுமையாக ஒருவரின் நனவோடையை, அதுவும் எல்லோருக்கும் தெரிந்த கதையை நாவலாக வடிக்க உண்மையில் தைரியம் வேண்டும். மலையாளமும் தமிழும் நெருங்கிய மொழிகள். இன்னும் கூட பழைய தமிழ் சொற்களை உபயோகிக்கலாம். இருமொழிகளில் எழுதுபவர் நம்மிடையே வெகுகுறைவு. தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.
பிரதிக்கு:
கிழக்கு பதிப்பகம் 044- 42009603
முதல்பதிப்பு ஜனவரி 2022
விலை ரூ.275