Kawakami டோக்கியோவில் வசிப்பவர். கவிதைகளின் மூலம் அறிமுகமான இவர் Breasts and Eggs என்ற நாவலின் மூலம் உலக வாசகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவரது Heaven நாவல் 2022ன் புக்கர் இறுதிபட்டியலில் ஒன்று. இந்த நாவல் மே 12, 2022 அன்று வெளியாகியது.

புத்தகத்தில் இருந்து:

” சிலர் மிகச்சிறந்த எழுத்தாளர்கள், ஆனால் வெற்றிகரமானவர்கள் இல்லை. பலர் வெற்றிகரமான எழுத்தாளர்கள் ஆனால் சிறந்த எழுத்தாளர்கள் இல்லை. இது எல்லா இடங்களிலும் உள்ளது தான். நம்மைப் போன்ற பெண்களுக்கு எப்போதும் நேர்வது.
உன்னிடம் ஏராளமான பணமிருந்து குழந்தைகள் இல்லையென்றால் நீ வெற்றிகரமான பெண்மணி. ஆனால் குழந்தைகள் இருந்தாலொழிய உன்னை யாரும் சிறந்த பெண்மணி என்று அழைக்க மாட்டார்கள்”.

ஜப்பானின் மக்கள்தொகை ஒவ்வொரு கணக்கெடுப்பிலும் குறைந்து வருகிறது. வெறும் எண்ணிக்கையில் மட்டுமல்ல, முதியவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதும், குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து கொண்டு போவதும் நிச்சயமாக கவலைக்குரிய விசயம். பல காரணிகளுக்கு நடுவே, முதன்மையானது ஜப்பானிய இளைஞர்கள் சுதந்திரமான வாழ்க்கையை, அதிக நேரம் வேலைசெய்து வசதியான வாழ்க்கையை வாழவிரும்புவதும், குடும்பப் பொறுப்புகளுக்குள் சிக்கிக்கொள்ள விரும்பாததும் காரணம். இந்த நாவல் இப்போதைய ஜப்பானிய மனநிலையின்
உட்புகுந்து வருகிறது.

32 வயதில், பள்ளி இறுதிஆண்டில் ஒருமுறை உடன் படிப்பவன் செய்த பாலியல் வல்லுறவைத் தவிர வேறெதுவும் பாலியல் அனுபவம் இல்லாத, யாருடனும் பழகப் பிடிக்காத, மற்றவர்கள் வலிய வந்து பேசினாலும் சரியாகப் பேச முடியாத, Proof reader பெண்ணின் ஐந்து வருட வாழ்க்கையே இந்த நாவல். மிகச்சிறிய இந்த நாவலில் ஐந்துவருட வாழ்க்கையைப் படிப்பது ஐம்பது வருடங்கள் போல் கடைசியில் தோன்றுவது நாவலின் Depth என்றே சொல்ல வேண்டும்.

எதிலும் முடிவெடுக்க முடியாதவள் பத்து வருடங்கள் பார்த்த வேலையை விட்டு விட்டு Freelancing போவது, ஆல்கஹால் பழக்கமில்லாதவள் போதைக்கு அடிமை என்பது வரை போவது, யாருடனும் பழகாதவள் காதலில் விழுவது என்று மையக்கதாபாத்திரத்தின் மனஅவசங்களும், முரண்பாடுகளும் கூர்ந்து பார்க்க வேண்டியவை. தனிமையை விரும்பி எடுத்துக் கொள்ளும் ஒரு பெண்ணின் பயணம்.

முப்பத்தி நான்கு வயதுப் பெண் ஐம்பத்தெட்டு வயது ஆணைப் பதின்மவயதுப் பெண் செய்வது போல் காதல் செய்வதும், ஆரம்பத்தில் Proof reading குறித்து மட்டுமே தடையில்லாமல் பேசும் பெண் பின்னர் நாளடைவில் தெளிவாகப் பேச ஆரம்பிப்பதும் நுட்பமான விசயங்கள். அதே போல் Hijitiஉடன் ஆன நட்பு ஒரே நாளில் நெருக்கமாக அமைவது. குறைந்த பகுதியே வரும் Kyokoவும் Morokoவும் கூட தெளிவான வடிவத்தில் கண்முன் தெரிகிறார்கள். எப்போதுமே Kawakamiன் பெரிய பலம் அவரது பெண் கதாபாத்திரங்கள்.

Kawakami Barல், புத்தகக்கடையில் வேலைபார்த்துப் பின் பாடகியாக மூன்று ஆல்பங்கள் வெளியிட்டு 2006ல் எழுத வந்தவர். இசை குறித்து நாவலில் வரும் பகுதிகள் வியப்பில்லை, ஆனால் இயற்பியல் குறித்து, Proof reading குறித்து இந்த நாவலுக்காக சொல்லும் தகவல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. அர்ப்பணிப்பு. Kawakami இந்த நாவலைக் காதல்கதையாகவே எழுதி இருக்க வேண்டும். ஆனால் வாசித்து முடித்ததும் வழிந்து பெருகும் பல எண்ணங்கள் இதைக் காதல்கதை என சுருக்க மறுக்கின்றன.
Kawakamiன் மொழியை அதே அழுத்தத்துடன் ஆங்கிலத்துக்குக் கொண்டு வந்த மொழிபெயர்ப்பாளர்கள் பாராட்டுக்குரியவர்கள். Kawakami, A real talent.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s