அட்வுட் கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர். ஐம்பது நூல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர், உலக இலக்கியத்தில் பெரிதாக மதிக்கப்படும், வாழும் வெகுசில எழுத்தாளர்களில் ஒருவர். நோபல் பரிசைத் தவிர மற்ற எல்லா இலக்கிய விருதுகளையும் பெற்றவர். 2004ல் இருந்து 2021 வரை இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
அட்வுட் எழுதும் யுத்தியைப் பற்றிச் சொல்கையில் கூறியிருப்பது. ” நான் பத்து, பதினைந்து பக்கங்களைக் கையில் எழுதிவிட்டு, அதனை தட்டச்சு செய்வேன். பின் மீண்டும் பத்து பக்கங்கள் கையால். அதன் மூலம் நூலின் முன்னும் பின்னும் செல்வது போல் தவறுகளைத் திருத்த முடியும்”. நூறுபக்கங்கள் முடித்த ஒரு நாவலைப்பற்றி, ஒரு இரயில் பயணத்தில் யோசித்தபோது, அது சரியாக வரவில்லை என்று தோன்றியிருக்கிறது. மொத்தமாகத் தூக்கி எறிவதை விட, சில சம்பவங்கள், சில கதாபாத்திரங்களை விலக்கிப் பார்த்திருக்கிறார். அதன்பின் நாவல் நன்றாக வந்திருப்பதாகத் தோன்றியிருக்கிறது. கேட்பதற்கு சாதாரண விசயமாகத் தோன்றினாலும் ஒரு எழுத்தாளர் தனது எழுத்தில் நேர்த்தியைக் கொண்டுவர உதவும் முக்கியமான யுத்தி இது. திருத்திக்கொண்டே இருப்பது எழுத்தில் நுட்பத்தைக்கூட்டும்.
Richard Powersன் Echo Maker நூல் குறித்த விரிவான கட்டுரை முக்கியமானது. புத்தகத்தைப் பற்றி மட்டும் சொல்லாது, மிகத்திறமை வாய்ந்த, மூன்று முறை புக்கர் பட்டியலில் வந்த, புலிட்சர், NBA முதலிய விருதுகளை வென்ற இவர் ஏன் வாசகர்கள் மத்தியில் பிரபலமாகவில்லை என்பதையும் குறிப்பிடுகிறார். வெகுஜன பிராபல்யம் என்பதும் கலைநுட்பம் என்பதும் இருவேறு விசயங்கள்.
சக எழுத்தாளரும் சொந்த நாட்டைச் சேர்ந்தவரும் மட்டுமல்லாது, சமீபத்தில் நோபல் பரிசு வாங்கியதால், கிட்டத்தட்ட அட்வுட்டின் நோபல் வாய்ப்பைப் போக்கிய ஆலிஸ் மன்றோ குறித்து இவர் எழுதி இருப்பது “மன்றோவின் கதைகள் கேள்விகேட்கும் நம்பிக்கையாளர்களாலும், கச்சிதமான முடிச்சுகளாலும் நிரம்பியுள்ளன. அதேநேரத்தில் எல்லாக் கதைகளும், எல்லா மனிதர்களும் உள்ளொளியால் நிரப்பப்பட்டுள்ளனர். இந்தக் கதைகள் ஒரு ஆபத்து விளைவிக்கும் புதையல், விலைமதிப்பில்லாத மாணிக்கம், இதயத்தின் அவா”
கலைநுட்பம்- அமைதியான சூழல்- விச்ராந்தியான மனநிலை என்பது போல் எத்தனையோ சொல்கிறோம். ஆனால் Dostoevskyயின் Gambler கடனை அடைக்க, காலக்கெடுவிற்குள் முடித்த நாவல். போலவே, Charles Dickensன் Christmas Carol ஆறுவாரங்களுக்குள் கடனை அடைக்க எழுதப்பட்டது. தேவதைக்கதைகள் பாணியில் எழுதப்பட்ட இந்தக்கதை இன்றளவும் கிறிஸ்துமஸ் சமயங்களில் உலகமெங்கும் பலரால் வாசிக்கப்படும் புகழ்பெற்ற கதை.
காஃப்காவை பத்தொன்பது வயதில், நாற்பத்து நான்கு வயதில், ஐம்பதுகளின் நடுவில் என மும்முறை அணுகியதைச் சொல்லும் கட்டுரை முக்கியமானது. வயதும் அனுபவமும் அதிகரிக்கையில் சாதாரண எழுத்தாளர்கள் நினைவில் இருந்து தொலைந்து போகிறார்கள்,மாஸ்டர்கள் தங்கள் படைப்புகளில் புதிய தரிசனங்களை அளிக்கிறார்கள்.
அட்வுட் எப்படி எழுத்தாளர் ஆனேன் என்பதைச் சொல்லும் கட்டுரை, அறுபதுகளில் எழுதத்தொடங்கிய எல்லா அமெரிக்க, கனடா பெண் எழுத்தாளர்களையும் பிரதிநித்துவம் செய்வது. மருத்துவம் படித்தால் நர்ஸாகவும், சட்டம் படித்தால் வக்கீல் குமாஸ்தாகவும் ஆண்களின் கீழ் இரண்டாமிடத்தில் வேலைபார்த்த படித்த பெண்களுக்கு, சுதந்திரமாக இயங்கும் துறையாக எழுத்து இருந்தது. அப்படித்தான் நிறைய பெண்கள் எழுதத் தொடங்கினார்கள். இன்று அமெரிக்கா, கனடா போன்றநாடுகளில் பெண்களே அதிகமாக எழுதி வருகிறார்கள்.
இந்த நூல் அட்வுட்டின் மூன்றாவது கட்டுரைத் தொகுப்பு. கிட்டத்தட்ட ஒவ்வொரு இருபது வருடங்களுக்கும் ஒரு தொகுப்பு. எண்பத்து ஒருவயதை நிறைவுசெய்திருக்கிறார் அட்வுட். அறுபது வருடங்கள் என்பது தனிமனித வாழ்வில், நொடிநேரப் பயணம் போல் மாயையை ஏற்படுத்தினாலும், கடலளவு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
அறுபதுகளின் மனிதஉரிமைப் போராட்டங்கள், எழுபதுகளின் பெண்ணிய போராட்டங்கள் என்பது போல் ஒவ்வொரு பத்துவருடங்களிலும் பெருமாற்றங்கள் நிகழ்ந்து, பெருந்தொற்றுக் காலத்தில் உயிர் யாருக்கும் எப்போதும் போகும் என்ற புரிதலை வந்தடைந்திருக்கிறோம்.
ஐம்பது கட்டுரைகள் அடங்கிய இந்தத் தொகுப்பில், சுற்றுச்சூழல், பெண்ணியம், பெருந்தொற்று போன்ற பொதுவான அக்கறையூட்டும் தலைப்புகளும் இருக்கின்றன. காமிக்ஸ் முதல் காஃப்கா வரை ஏராளமான எழுத்தாளர்கள் குறித்தும் எழுதியிருக்கிறார். தொடர் வேலைகள், வயோதிகம், எழுத்து, பயணங்கள் ஆகிய எல்லாவற்றையும் தாண்டி பரந்துபட்ட வாசிப்புக்கும் இவருக்கு நேரமிருந்திருக்கிறது. Stephen King நூல்கள் குறித்தும் எழுதியிருக்கிறார்.
எல்லாவற்றையும் விட சிறப்பான அம்சம், தன் படைப்புகளின் பின்ணணி, எழுதிய நோக்கம், எதிர்கொண்ட இடர்கள் எல்லாவற்றையும் இந்த நூலில் சொல்லி இருக்கிறார். மெல்லிய நகைச்சுவை இவரது எல்லா எழுத்துகளிலும் இழையோடும். நாம் வாழும் காலத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் இவர். இவருடைய முப்பதாவது வயதில் முதல் நாவல் வெளிவந்துவிட்டது. வெகு சீக்கிரமே இவரது படைப்புகள் பள்ளிப் படிப்பின் பாகமாக சேர்க்கப்பட்டுவிட்டன. அதைப் பள்ளியில் படித்துவிட்டு, இப்போது ஐம்பது வயதைக் கடந்த தலைமுறை அடிக்கடி கேட்கும் கேள்வி அட்வுட்டா? இன்னும் உயிரோடிருக்கிறாரா? புகழுக்குக் கொடுக்கும் விலை!
நூல் பெயர் – Burning Questions
ஆசிரியர் பெயர்- மார்க்கரெட் அட்வுட்
பதிப்பகம்- வின்டேஜ் டிஜிட்டல்
பக்கங்கள்- 496
வகை- ஆங்கிலக் கட்டுரைத்தொகுப்பு
விலை- ரூ.779
நூல் பெற தொடர்பு- Amazon.in
முதல்பதிப்பு- மார்ச் 2022.