மோகனாவிற்கு என் வயதே இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் அவளுக்கு பதினெட்டு ஆகிவிட்டது என்றாள். என்னை விட மூன்று வயது அதிகம். என்றாலும் பெயர்சொல்லிக் கூப்பிட்டு, போ,வா என்றே தொடர்ந்தேன். காலனியில் நூறு வீடுகளுக்கு மேல் இருந்தது. இரண்டு மூன்று வயது வித்தியாசத்தை அப்போது நாங்கள் பொருட்படுத்தியதில்லை. ஆறேழு வருடங்கள் இருந்தால் அக்கா, அண்ணன், பன்னிரண்டு, பதினைந்து வயது கூடுதல் என்றால் மாமி, மாமா என்று வாழ்க்கை மிக எளிமை. இரட்டை ஜடை போட்டுக் கொண்டு, மணமாகிப் புதிதாக காலனிக்கு வந்த பெண்ணை, நான்காம் வகுப்பு படித்த நான் மாமி என்று கூப்பிட்டிருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் போது கூட ஏறக்குறைய சமவயதினர் எல்லோரையும் வா, போ தான். சிறுவயது முதல் ஒன்றாக வளர்ந்தவர்கள் வேறு எப்படி அழைக்க முடியும்?
வங்கியில் நுழைந்த பின்னரே மாற்றிக் கொண்டேன். எந்தப் பதவியில் இருந்தாலும், ஆண் பெண் என்னைவிட வயதுகூடியவர் என்றால் சார், மேடம். இளையவர் என்றால் பெயர் சொல்லி அழைத்தல். வயதில் எவ்வளவு சிறியவர் என்றாலும் நீங்க, வாங்க தான். என்னுடைய மொத்த வங்கி வாழ்க்கையிலும் எனக்குப் பெண் உயரதிகாரி இருந்ததேயில்லை. எனவே பெயர் சொல்லி அழைப்பதில் எந்த சிக்கலும் இல்லை. நிறைய மேலதிகாரிகள் முப்பதுகளில் இருந்துகொண்டு ஐம்பதுகளில் இருக்கும் பெண்ணைப் பெயர்சொல்லி சத்தமாகக் கூப்பிடுவதை Oddஆக உணர்ந்திருக்கிறேன்.
சிலர் ஒருமையிலும் அழைத்ததுண்டு.
நகரங்களில் தொண்ணூறுகளின் இறுதியிலேயே யாரும் சார் போட்டு அழைப்பதை விரும்பியதில்லை. மேடம் விசயத்தில் நாம் அவ்வாறு சொல்வதற்கில்லை. நன்கு படித்த பெண், சகஊழியர் ஒருவரை ‘தாலிகட்டியவனைப் போல்’ பெயர்சொல்லிக் கூப்பிடுகிறார் சார் என்று என்னிடம் புகார் செய்திருக்கிறார்.
வங்கியிலும் சரி, அதன் பிறகு வேலைபார்த்த கார்ப்பரேட்டிலும், இப்போதும் கூட சரி நெருங்கிப் பழகிய பெண்கள் என்னிடம் நீங்கள் என்னைப் போ, வா என்றே அழைக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். என்னால் ஒரு போதும் முடிந்ததில்லை. மனதில் நெருக்கம் இருந்தால் ஒருமை தானாக வரும் என்று தெலுங்கில் எனக்குக் கற்பித்த பெண்ணின் முகம் நினைவுக்கு வருகிறது. போங்க, வாங்கவில் வந்த நெருக்கமே மூச்சுத்திணறிப் போனது.
முகநூல் ஒரு விந்தை உலகம். முகமில்லாதவர்களின் கணக்குகளை விட்டு விடுங்கள். முகத்தை முன்னிறுத்தி எல்லோருக்கும் தெரிந்த ஆண்களே இரண்டுமுறை பெண்களிடம் பேசியபிறகு எப்படி போ, வா என்று ஆரம்பிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. கூறாமல் சந்நியாசம் கொள் என்பது போல் கூறாமல் உரிமை எடுத்துக்கொள் என்று எங்கேனும் சொல்லி இருக்கிறதா? இதை எப்படி எதிர்கொள்வது என்று யோசிக்கும் நேரத்தில் போடி, வாடி வந்து விடுகிறது. இதில் உலக வியாக்யானம் எல்லாவற்றையும் பேசுகிறார்கள். இன்னும் ஏராளமான பெண்கள் பதிலுக்கு போடா, வாடா என்று சொல்லத் தயங்குவதும் இதற்கு முக்கிய காரணம். சொல்லப் பழகுவதுடன், யாராவது மதுரைக்காரரைப் பிடித்து ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு குறித்த பத்திருபது கெட்டவார்த்தைகளையும் திறம்படக்
கற்றுக் கொண்டால் உத்தமம்.