மோகனின் பயணங்கள் முடிவதில்லை வந்த போது, சிவாஜி எல்லாம் நடிப்பில் இவரிடம் பிச்சை வாங்க வேண்டும் என்று சொல்லியே படம் பார்க்க நண்பர்கள் அனுப்பி வைத்தார்கள். மோகன் நாலு படங்கள் தாங்க மாட்டார் என்று நான் நினைத்தேன். இருதரப்புக் கணிப்பையும் காலம் பொய் என்று சொன்னது. மைக் மோகன் என்றால் மட்டுமே அவரை இன்று பலருக்குத் தெரியும். விஜயகுமார், கமலஹாசன் இருவரையும் வைத்து, கமலஹாசன் காணாமல் போவார் என ஆருடம் சொன்னார்கள் என்று R P ராஜநாயஹம் சொல்லியிருக்கிறார்.
தமிழர்கள் மானின் கண்கள் என்பது போல் ஏராளமாகச் சொல்லி காலங்காலமாய் பழகி விட்டார்கள். பெருந்தேவி எழுதிய முயல்குட்டி தப்பிச்செல்லட்டும். விட்டு விடுவோம். இது போன்ற உவமை, உருவகங்கள் யாருக்கும் கிஞ்சித்தும் தொந்தரவு தராதவை. புல்லரிப்பு ஏற்படாதவர்கள், புன்னகையுடன் கடந்து போவார்கள். ஆனால் ஒப்பீடுகள் ஒருவரைத் தாழ்த்தி இன்னொருவரை உயர்த்தும் பொழுது தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. என்ன இருந்தாலும் எங்கம்மா செய்த வத்தக்குழம்பு மாதிரி வருமா என்பதெல்லாம் ஐம்பது, அறுபதுகளில் முடிந்து விடவில்லையா?
இலக்கியத்தில் ஒப்பீடுகள் தவிர்க்க முடியாதவை. அவை ஆய்வு நோக்கில் செய்யப்பட வேண்டியவை. போகிற போக்கில் சூடாமணி கலைமகள் எழுத்தாளர் என்று ஜெயமோக விமர்சனம் செய்தால், எதிர்வீட்டில் தேமே என்று தமிழ் சீரியல் பார்க்கும் மாமி ” அப்போ நான்காவது ஆசிரமம்” கலைமகளில் வரும் கதையா என்று எதிர்கேள்வி கேட்கிறார். சூடாமணி அறுநூறு கதைகளுக்கு மேல் எழுதிய பெண்மணி. மணவாழ்க்கையில் ஈடுபடாது கடைசி வரை தனியாக வாழ்ந்தவர். தனது கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளை சமூக நலத்திற்கு எழுதிவைத்து சென்றவர். அவர் வாழ்ந்து முடிந்த காலம் வேறு. அவரை விமர்சிக்கும் முன் நாம் இத்தனை விசயங்களையும் மனதில் கொண்டே பேச வேண்டும். முக்கியமாக அறுநூறில் பாதி கதைகளையாவது படித்திருக்க வேண்டும். படித்துவிட்டு, தருமம் செய்தவர் என்று தாட்சண்யம் பாராமல் விமர்சித்தால் பரவாயில்லை. ஆனால் இங்கே அது நடப்பதில்லை.
ஆதவன், அசோகமித்திரன் போன்றவர்கள் அதிக சேதமில்லாமல் தப்பித்துக் கொண்டார்கள். தி.ஜா தான் வருகிறவர் போகிறவரிடம் எல்லாம் மாட்டிக் கொண்டு இன்னும் திணறிக் கொண்டிருக்கிறார். தி.ஜாவின் படைப்புகள் தமிழின் சாதனை.
எத்தனையோ வேறுவேறு சித்தாந்தங்கள், பலதரப்பட்ட சூழல்களில் இருந்து வந்தவர்கள், அவரைக் கொண்டாடி இருக்கிறார்கள். இரண்டு மொழிபெயர்ப்பு நாவல்களைப் படித்துவிட்டு இவரை விட தி.ஜா மட்டம் என்பவர்கள் இவர்கள் அத்தனை பேரையும் முட்டாள் என்றோ, ரசனைக் குறைபாடு உள்ளவர் என்றோ கூறாமல் கூறுகிறார்கள். எனக்கு தி.ஜாவைவிட இவரைப் பிடித்திருக்கிறது என்று யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் இவர் சிறந்தவர் என்று முன்வைக்கும் போது உங்களை நீங்களே Expose செய்து கொள்கிறீர்கள். நாளை குரும்பூர் குப்புசாமி தி.ஜா வை விட சிறந்த நாவல்கள் எழுதி இருக்கிறார் என்று ஒருவர் சொல்லலாம். அதற்கு ஒரு குழு கைதட்டி ரசிக்கலாம். காசா, பணமா முகநூல் வேடிக்கை பார்ப்பவர்களின் சந்தை.