Paulo Scott பிரேஸிலில் பிறந்த எழுத்தாளர், வழக்கறிஞர், நாடகாசிரியர், திரைக்கதையாசிரியர், மொழிபெயர்ப்பாளர்.
இவரது No where people நல்ல வரவேற்பைப் பெற்ற நாவல். இந்த நாவல் 2022 புக்கர் நெடும்பட்டியலில் ஒன்று.
இது முழுக்கவே நனவோடை யுத்தியில் எழுதப்பட்ட நாவல். அதற்கேற்ப நெடும் வாக்கியங்கள் முற்றுப்புள்ளி இல்லாது தொடர்கின்றன. கறுப்பினத் தந்தைக்கும், வெள்ளையினத் தாய்க்கும் பிறந்த சகோதரர்களில் மூத்தவனே கதைசொல்லி. அவனுடைய வெளிர் நிறத்தால் அவன் பிரேசில் சமூகத்தின் நிறவெறியில் இருந்து தப்பித்துக் கொள்கிறான். ஆனால் அவனது தம்பி கறுமையான நிறத்தால் சகலவிதமான
தவறான நடத்துதலுக்கும் ஆளாகிறான். பிரேசில் சமூகம், நேற்றுவரை அடிமையாக இருந்த கறுப்பினத்தவரை சமமாக நடத்த மறுக்கிறது. சிறுவயதிலிருந்து கதைசொல்லியின் வாழ்க்கை நினைவுகள் மீதேறிப் பயணமாகிறது.
கருப்பினத்தவருக்கும், கலப்பு பழுப்பு நிறத்தவருக்கும், பள்ளி, கல்லூரி, வேலைவாய்ப்புகளில் ஒதுக்கீடு செய்ததால், வெள்ளையினத்தவர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். சாதாரணமாகப் பொழுது போக்க செல்லும் பாரில் இளைஞர்களுக்குள்ளேயே நடக்கும் தகராறு அடிதடி சண்டையாக மாறுகிறது. இன்றைய தினத்திலும் பிரேஸில் நிறவெறி அதிகம் கொண்ட நாடுகளில் முன்வரிசையில் இருக்கிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் வெள்ளையர், கறுப்பர், பழுப்பு நிறத்தவர் என்று நிறவாரியாகப் பட்டியலிடும் நாடு.
அடிமைகள் முறை இருந்த காலத்தில் போர்த்துக்கீஸியர்கள் வேறு எந்த நாட்டையும் விட அதிக அளவில் ஆப்பிரிக்காவில் இருந்து இறக்குமதி செய்தார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உலகமெங்கும் அடிமைத்தனம் ஒழிந்ததும், பிரேஸிலிலேயே தங்கியதால் கறுப்பர்கள் அதிகம் இருக்கும் நாடு, உலகத்திலேயே ஆப்பிரிக்காவிற்குப் பிறகு பிரேஸில் தான். இன்றும் Modern slavery பிரேஸிலில் இருந்துகொண்டே இருக்கிறது.
நாவல் எண்பதுகளுக்கும் 2016க்கும் மாறிமாறிச் செல்கிறது. வெளிர் நிறத்தால் அவ்வளவாகக் கொடுமைகளை அனுபவிக்காத மூத்தவன் போராளி இயங்கங்களுக்கு ஆதரவாக, ஊரைவிட்டு வெளியே செல்வது, அரசாங்கப் பணியை உதறுவது என்று இருக்கையில், கருப்பு நிறத்தால் எல்லா இடர்களையும் அனுபவித்த இளையவன் ஊரிலேயே கூடைப்பந்து பயில்வித்து அமைதியான வாழ்க்கையை வாழ்கிறான். இரண்டு சகோதரர்களின் கதை மூலம் பிரேஸிலின் கதை சொல்லப்படுகிறது. கறுப்பாக இருப்பவன்,
‘ எப்போதும் Flash உபயோகிக்காமல் என்னைப் புகைப்படம் எடுக்காதே என்று சொல்வது போல் நுட்பமான மொழி நாவலெங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பான மொழிபெயர்ப்பு.