புக்கரின் இரு விருதுகளில் புக்கர் இன்டர்னேஷனல் கூடுதல் சிறப்பு. உலகெங்கிலும் இருந்து பல நாடுகளில் இருந்து மொழிபெயர்ப்பு நூல்கள் போட்டிக்கு வருவதே முக்கிய காரணம். இம்முறை இந்தி மூலத்தில் இருந்து முதல்முறையாக புக்கர் பட்டியலில் ஒரு நூல் இடம்பெற்று, விருதையும் வென்றுவிட்டது. நான்கு கண்டங்களில், பன்னிரண்டு நாடுகளில் இருந்து, பதினோரு மொழிகளில் எழுதப்பட்ட பதிமூன்று நூல்கள் இவை.
இறுதிப்பட்டியல்:
1.Tomb of Sand – Geethanjali Shree-
கீதாஞ்சலி மணிப்பூரியில் பிறந்து உத்திரப்பிரதேசத்தின் பல நகரங்களில் வளர்ந்தவர். சிறுகதைத் தொகுப்புகளும், நான்கு நாவல்களும் ஏற்கனவே வெளியிட்டுள்ள கீதாஞ்சலியின் ஐந்தாவது நாவலான இது, இந்தியில் எழுதப்பட்டுப் பின் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, புக்கர் விருதை வெல்லும் முதல் இந்தியமொழி நாவல் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.
கணவனை இழந்து, மன அழுத்தத்திற்கு ஆளாகி, படுக்கையில் விழுந்த எண்பது வயதுப் பெண்ணைச் சுற்றி நகரும் கதை இது. திடீரென ஒரு நாள் காணாமல் போகிறாள், பின் கண்டுபிடிக்கப்பட்டு மகள் வீட்டிற்குப் போகிறாள். பின்னொருநாள் பதின்வயது நினைவுகளை மீட்டெடுக்க பாகிஸ்தானுக்குப் (பிரிவினைக்கு முன் ஒன்றுபட்ட இந்தியா) போகவேண்டும் என்கிறாள்.
சாதாரண கதைக்கருவை. சொல்லிய விதம் பெரிதும் கவரத்தக்கது. பெரும்பகுதி கதையை, பெயர்சொல்லாத கதைசொல்லி பார்வையாளன் கோணத்தில் சொல்கிறார்.
எதையுமே ஒரு அலட்டிக்கொள்ளாத தொனியில் சொல்லும் மொழிநடை இந்த நாவலின் பெரிய பலம். வடஇந்தியாவில் ஒரு உயர்மத்தியவர்க்கக் குடும்பத்தைச் சுற்றிவரும் கதை, வாழ்க்கை, இறப்பு, அடையாளத்தைத் தேடும் பயணம் போன்றவற்றை உள்ளடக்கியது.
இந்தியத்தனம் (Indianness) என்பதே இந்த நாவல் பட்டியலில் இடம்பெற்றதன் முக்கிய காரணமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். யயாதி கதை போல் புராணக்கதைகள் பல இடையிடை வந்து போகின்றன. நமக்கு சாதாரணமாக இருக்கும் விசயங்கள் வெளிநாட்டினருக்கு ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்துவன.
மாயயதார்த்தம் கதையின்இடையில் வந்து போகின்றது. காக்கைகள் நீண்ட உரையாடலை நடத்துகின்றன. அம்மா கீழே விழுந்த செய்தியை மகனிடம் காக்கை சொல்கின்றது. பாட்டி சொல்லச் சொல்ல வண்ணத்துப்பூச்சி அமைதியாக அவள் கதையைக் கேட்கிறது.
அம்மா-மகள் உறவு இந்த நாவலில் முக்கிய அம்சம். வயதான தாய், மகளுக்கு மகளாகிறாள். .ரோஸி என்னும் திருநங்கையுடனான அம்மாவின் நட்பு, மகளுக்குப் பொறாமையை ஏற்படுத்துகிறது. அம்மா இருக்கும் வீட்டில் காதலனுடன் உறவு கொள்ள பிடித்தமில்லாதது ஒரு நுட்பமான விசயம். அம்மாவின் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் என்ற திடீர் தீர்மானம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இப்போதும் அவள் மகளையே வழித்துணையாகத் தேர்ந்தெடுக்கிறாள்.
பல இழைகளைச் சேர்த்த நாவல் இது. நவீன நகரவாழ்வு, தொன்மை கதைகள், பெண்ணியம், மதம் இரு நாடுகளைப் பிரித்த கதை, குடும்ப உறவுகள், அழியாத காதல்……..இது போல் பல இழைகள். நாவலை கீதாஞ்சலி ஒரு மந்திரக்குரலில் சொல்லி இருக்கிறார். குருவான கிருஷ்ணா சோப்டியிடம் கடன்வாங்கிய குரல். எழுநூறு பக்கங்களுக்கு நான்கு பக்கங்களே குறைவாக உள்ள நூல். டெய்சியின் மொழிபெயர்ப்பு அபாரம். டெய்சி போல் ஒரு தேவதை மொழிபெயர்ப்பாளர் (Angel translator) கிடைத்தால் எந்த விருதையும் வெல்லலாம்.
- Cursed Bunny by Bora Chung:
பத்து சிறுகதைகள் அடங்கிய தொகுப்பில் அநேகமான கதைகளில் அமானுஷ்ய விசயங்கள் நடைபெறுகின்றன. மாயயதார்த்தம், அதிகற்பனை, அமானுஷ்யக்காதல், சர்ரியல்
என்று எல்லா வகைமைகளிலும் கதைகள் இருக்கின்றன. சாபம் என்ற கரு இவர் கதைகளில் அடிக்கடி இடம்பெறும் மையக்கரு.
- A New Name: Septology VI-VII by Jon Fosse:
இறுதிப்பட்டியலின் ஒரே ஆண் ஆசிரியர்.
வயதான ஓவியர் ஒருவர், தன் கடந்தகாலத்தை அசைபோடும் கதையில் நிகழ்காலமும் வந்து கலக்கிறது. மரணம் இந்த நாவலில் அடிக்கடி பேசப்படும் விஷயம். இந்த ஆசிரியர் என்றேனும் நோபல் பரிசை வெல்லக்கூடும் என்று பரவலாக நம்பப்படுகிறது.
- Heaven by Mieko Kawakami:
உலகமெங்கும் வாசகர்கள் கொண்ட ஜப்பானிய எழுத்தாளர். இன்றைய ஜப்பானியப் பெண்களின் அகஉணர்வுகளைத் தெளிவாக எழுத்தில் வடிப்பவர். இந்த நாவல் விவாகரத்து பெற்ற இரண்டு பெற்றோரின் இரு குழந்தைகள்
ஏதோ ஒரு காரணத்தில் சராசரி மாணவராக இருக்க முடியாமலும், அதனால் மற்ற பள்ளி மாணவர்களால் கேலிக்கு ஆளாவதும் பற்றிய கதை.
- Elena Knows by Claudia Piñeiro:
அர்ஜென்டினாவில் 2020ல் தான் கருச்சிதைவு செய்து கொள்வதற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் கிடைக்கிறது. அதற்கு முன் எழுதப்பட்ட இந்த நாவலில் கருச்சிதைவு முக்கியபங்கு வகிக்கிறது. கத்தோலிக்க மதத்தின் நம்பிக்கைகள் மூன்று பெண்களை வெவ்வேறு விதத்தில் பாதிப்பதைத் திரில்லர் பாணியில் சொல்லும் நாவல்.
- The Books of Jacob by Olga Tokarczuk:
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரின் நவீன காவியம். வரலாற்றில் மறக்கப்பட்ட, உண்மையில் வாழ்ந்த ஒருவனைப் பற்றிய நாவல். யூதர்களுக்கு நாடில்லாது, கிருத்துவ, இஸ்லாமிய மதமாற்ற முயற்சிகளின் நடுவே திண்டாடிக் கொண்டிருக்கும் போது, யூதர்களிலிருந்து ஒருவன் புதிதாக ஒரு மதத்தைக் கொண்டுவரும் முயற்சி குறித்த ஆயிரம் பக்கங்களுக்கும் அதிகமான நாவல்.
நெடும்பட்டியல்:
- After the Sun by Jonas Eika :
தனிமை, காமம், கூட்டுச்சேரும் ஆவல் இவற்றை மையக்கருவாகக் கொண்ட ஐந்து நீள்கதைகள் கொண்ட தொகுப்பு. எந்தக் கதையுமே நேர்கோட்டில் செல்லும் கதையல்ல, கதைசொல்லும் யுத்தியால் கதைகளை விட உணர்வுகளை வாசகர்களுக்கு அதிகமாகக் கடத்தும் கதைகள்.
- More Than I Love My Life by David Grossman:
இவருடைய மற்றொரு நாவல் ஏற்கனவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
ஹீப்ரு மொழியில் எழுதும் வெகுசிலரில் ஒருவர். வெவ்வேறு இடத்தில் வாழும் மூன்று தலைமுறைப் பெண்கள் நீண்ட காலத்திற்குப்பின் சந்திப்பதும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் முயற்சியும் இடையில் யூகோஸ்லேவியாவின் அரசியலையும் சொல்லும் ஆழமான நாவல்.
- The Book of Mother by Violaine Huisman:
அம்மாவின் கதையை சுயசரிதைக்கூறுகள் கொண்ட நாவலாக எழுதியிருக்கிறார். தாய்மையின் கோருதலுக்கும், பெண்மையின் வேண்டுதலுக்குமிடையே தனியாகப் பெண்ணை வளர்க்கும் ஒற்றைப்பெற்றோரைப் பற்றிய கதை. பெண்ணின் தாய் மீதான பார்வை இவள் தாயானதும் வெகுவாக மாறிவிடுகிறது.
- Paradais by Fernanda Melchor:
மெக்சிகோவைச் சேர்ந்த எழுத்தாளரான இவரது கதைகள் பெரும்பாலும் அங்கே நடக்கும் வன்முறை, போதைப்பொருட்கள், கடத்தல் பற்றிக்கூறுபவை. இந்த நாவல் பதினைந்து வயதாகும் வெள்ளையினச் சிறுவனும் கருப்பினச்சிறுவனும் தங்களது அபிலாஷையைத் தீர்த்துக்கொள்ள திட்டமிடுவது பற்றிய கதை.
- Love in the Big City by Sang Young Park:
கொரியாவைச் சேர்ந்த எழுத்தாளர். இன்றைய கொரிய இளைஞர் சமுதாயத்தையும், அவர்கள் சிந்தனைகளையும் கதைகளில் கொண்டு வந்திருக்கிறார். நான்கு வெவ்வேறு கதைகளை, ஒருபாலின உறவில் ஈடுபடும் ஒரு மையக்கதாபாத்திரம் இணைக்கிறது.
- Happy Stories, Mostly by Norman Erikson Pasaribu:
உண்மையில் இவை மகிழ்ச்சிக் கதைகள் இல்லை, எல்லாக் கதைகளிலும் மெல்லிய சோகம் இடையூடுகிறது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த எழுத்தாளரான இவர், பிற்போக்கு சிந்தனை கொண்ட சமூகத்தில், ஒருபாலின உறவுக்காரர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் புனைவாகச் சொல்லும் சிறுகதைகள்.
- Phenotypes by Paulo Scott:
பிரேஸிலில் இருக்கும் நிறவெறியை மையமாகக் கொண்ட நாவல். கருப்பினத் தந்தைக்கும், வெள்ளையினத் தாய்க்கும் பிறந்த இரண்டு மகன்களின் நிறமும் வேறு, சந்திக்கும் பிரச்சனைகள் வேறு, போகும் பாதையும் வேறு. நனவோடை யுத்தியில் சொல்லப்படும் நாவல் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் மாறிமாறி சென்று வருகிறது.