காலனியில் லட்சா என்ற லட்சுமணனின் வீட்டின் முன் பேசிக் கொண்டிருக்கையில், தற்செயலாகத் திரும்பிய போது, விஜி வீட்டு ஜன்னல் திரை சட்டென்று இழுத்துவிட்டது போல் ஒரு உணர்வு. அத்துடன் அதை மறந்து விட்டேன்.பத்து நாட்கள் கழித்து எதிர்பார்த்திருந்ததால், அதே நிகழ்வு மறுபடியும் நடந்த பின் அது என் கற்பனையல்ல என்பது புரிந்துவிட்டது. விஜி என்னிடம் நேரடியாகவே பேசுபவள். எதற்காக இப்படி செய்ய வேண்டும்?
பள்ளி, கல்லூரி, மணமுடித்துக் கிட்டத்தட்ட நாற்பது வயது வரையிலும் அழகான பெண்களை உற்றுப்பார்க்கும் (Staring) பழக்கத்தை விடவில்லை. கண்கள் கடைசியாக அவர்களைப் பார்த்தது தான் தெரியும், நான் மனதுக்குள் வேறு எதையோ யோசித்துக் கொண்டிருப்பேன். நேற்றுப் படித்த கதையாகவும் இருக்கலாம். அவர்கள் என்னைப் பார்ப்பதை அநேகமாக சிலதடவைகள் தவற விட்டிருக்கிறேன். பின்னர் பதறிப்போய் பார்வையை விலக்கியிருக்கிறேன். எனக்கு மட்டுமல்ல நிறைய ஆண்களுக்கு நம்மை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள வெகுநேரமாகிறது. என் மகளின் திருமணத்திற்கு வந்த தோழி ஒருவர் ” ஐந்து நிமிடம் உங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறேன், நீங்களும் என்னைப் பார்த்தீர்கள், ஆனால் உங்களுக்கு அடையாளம் தெரியவில்லை” என்றார். இல்லை நான் வேறு ஏதோ யோசித்துக் கொண்டிருந்தேன் என்றதை அவர் துளியும் நம்பவில்லை.
முகத்தைப் பார்த்து பேசுகையில், புடவையை சரிசெய்யும் பெண்களை விட்டுவிடுங்கள், ஆனால் பெண்களுக்கு பொதுவாக நம்மை யாரோ கவனிக்கிறார்கள் என்ற உள்ளுணர்வு அதிகமாக இருப்பது உறுதி. நாம் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் போது கீழே விழுவது போன்ற உணர்வு, நம் ஆதிக்குடிகள் மரத்தில் தூங்கிய போதெழுந்த பயத்தின் நீட்சியாக இருக்கலாம் என்பது போல் இதற்கும் காரணம் இருக்கக்கூடும். சென்ற வாரம் காலை நடைப்பயிற்சியில் பாட்டு கேட்டுக் கொண்டே வேர்க்க விறுவிறுக்க நடந்து கொண்டிருந்தேன். என் முன்னே நூறடித் தொலைவில் ஒருபெண் நடந்து கொண்டிருந்தார். என் பார்வைக்கோணம் நேரடியாக அந்தப் பெண்ணின் மேல் விழுந்திருக்க வேண்டும். உண்மையில் அந்தப்பெண்ணை மறைத்து அவர் என்ன உடை அணிந்திருந்தார் என்று யாரேனும் கேட்டிருந்தால் என்னால் சொல்ல முடிந்திருக்காது. நேர்ச்சாலையில் சட்டென முற்றிலும் திரும்பி என்னைப் பார்த்தார். நான் சாலையைக் கடந்து அமெரிக்கர்களின் Driving Rulesபடி வலப்புறத்தைக் கடைபிடித்தேன்.