நன்றி இந்து தமிழ் திசை
தூயனின் முதல் தொகுப்பான இருமுனை பரிட்சார்த்தமான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. ஐந்து வருடங்கள் இடைவெளி விட்டு வந்த கதீட்ரல் என்ற நாவல் தொன்மத்தையும், நிகழ்காலத்தையும் ஃபான்டஸியின் கூறுகள் இணைத்து எழுதப்பட்டது. மூன்றாவதாக வெளிவரும் இந்த நூல் மூன்று சிறுகதைகளையும், மூன்று குறுநாவல்களையும் கொண்ட தொகுப்பு.
தலைப்புக்கதை, தெரிவதும் பின் மறைவதுமான ஒரு விளையாட்டு. அல்லது கதையில் சொல்வது போல் வாழ்க்கையில் தற்செயல்கள் எல்லாமே மேஜிக் தான். ஒரு பெரிய எலி மனதில் பயத்தையும், வீட்டில் தொந்தரவையும், தூக்கமின்மையையும் ஏற்படுத்தும் கதையில், பேராசிரியருடன் நியூட்டன், பிராய்டு, டார்வின் எல்லோரையும் இணைத்து, நனவிலி, கூட்டு நனவிலி போன்ற கருத்தாக்கங்களுடன் நீண்ட விவாதம் நடக்கிறது. எட்டுவயதுப் பெண் ஆய்விற்கு யோசனை சொல்கிறாள். எலி
புத்திசாலித்தனமான சிறுவிலங்கு, அதன் வால் எலியின் உடலின் வெப்பத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது போன்ற அறிவியல் தகவல்கள் பகிரப்படுகின்றன.
அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்புடன் சற்றே மாயையின் சாயலும் கலந்து எழுதப்பட்ட கதை.
தூயனின் கதைகளில் சொல்லப்படும் நுண்தகவல்கள் மெல்லமெல்ல விரிவடைந்து கடைசியில் அகண்ட சித்திரத்தை வரைகின்றன. பல கிளைக்கதைகள் இடையில் வந்து பின் விலகும் போதும் சிறுகதை வடிவம் சிதையாமல் இருப்பது கடினம், ஆனால் ஒவ்வொரு கதையிலுமேயே தூயன் அதைச் செய்கிறார். ஓவியன் குறித்த கதை, சகஓவியனைக் குறித்துப்பேசி சட்டென்று தொன்மத்திற்குத் தாவுகிறது. கனவின் சாயலில் கதை முழுதும் நிகழ்வதும், வாழும் நிஜ ஓவியர்கள் பலரது பெயர்களும் இடைவருவதும் வாசகனுக்கு ஒரு அரைமயக்க நிலையை ஏற்படுத்துகிறது.
ஜெயகாந்தன் ஒரு கதையில் ஆண் அணிந்திருக்கும் பனியனில் இருக்கும் திரைப்படநடிகர் கணவன் மனைவி பாலியல் உறவுக்கு இடையில் வருவதைக் குறிப்பிட்டிருப்பார். பாலியலுறவு மீமிகைக் கற்பனைகள் தமிழில் அதிகம் வந்ததில்லை. ஸாஸ்யம் கதை, முழுக்கவே பாலியல் ஃபான்டஸிகள் குறித்த கதை. ஆணின் பாலியல் கற்பனைகளுக்கும், பெண்ணுடையதற்கும், அடுத்தவர் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் பெரிய வித்தியாசமிருக்கிறது. தற்செயலாகக் கதையில் வந்ததா என்று தெரியவில்லை, ஆனால் ஒரு ஆண் பெண்ணை முழுமையாகப் புரிந்து கொள்ள பெண்குழந்தை பெற்று, வளர்வதைப் பார்க்கும் போது தான் என்று சொல்வதில் உண்மை இருப்பதாகத் தோன்றுகிறது.
மாறுபட்ட கதைக்களங்களை கொண்ட தொகுப்பு இது. நுண்ணுயிரியல் படித்த இவரது எலி குறித்த எண்ணப்பீடிப்பு பற்றிய கதை, ஓவியத்தைப் பின்னணியாகக் கொண்ட கதை, பாலியலுறவு ஃபான்டஸி பற்றிய கதை, ஜோசியத்தை மையமாகக் கொண்ட கதை, கொரானா நோயில் நெருங்கிய உறவினர் மரணித்தால் உடலைப் பாராமலேயே இறந்ததாக தீர்மானம் செய்யவைக்கும் சூழல் குறித்த கதை, காலனிய காலத்து வரலாற்றை மையமாகக் கொண்ட கதை என்று கதைகள் சித்தரிக்கப்படும் களங்கள் வித்தியாசமானவை. ‘இந்திரஜாலம்’ முழுக்கவே ஜெயமோகன் பாணிக்கதை. எனில் இதன் மொழிநடை, சொல்லப்பட்ட விதம் முற்றிலும் வேறு. வைஸ்ராய் லிட்டன் குறித்த குறுநாவல் ஏறக்குறைய அல்புனைவை ஒட்டி வரும் புனைக்கதை. அங்கங்கே பா.வெங்கடேசனின் பாணி தெரிகிறது. மீதிக்கதைகள் எல்லாமே அக்மார்க் தூயன் கதைகள்.
ஒரு கவிதை ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து, நடைப்பயிற்சியின் போதான உரையாடலில் இருந்து, விவாதங்களில் இருந்து, கேள்விகளில் இருந்து இந்தக் கதைகள் உருவாகி இருக்கின்றன. கடைசிக் குறுநாவல் இந்தியாவில் ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில் வைஸ்ராய் லிட்டனின் குறிப்பிட்ட கால மனநிலையைப் படம்பிடிக்கும் முயற்சி. இந்தக் கதைக்காக இவர் வாசித்த நூல்கள் குறித்த பட்டியலைப் பின்னால் இணைத்திருக்கிறார். இந்தக் கதையில் மட்டுமல்ல தொகுப்பின் எல்லாக் கதைகளிலும் தூயனின் உழைப்பு தெளிவாகத் தெரிகிறது.
தூயன், வழமை போலலே கதைகளில் பொதுவான புழக்கத்தில் இல்லாத வார்த்தைகள் சிலவற்றை உபயோகித்திருக்கிறார். தூயனின் மொழிநடை நேர்த்தியானது, நுணுக்கமான புறச்சித்தரிப்புகள், கதாபாத்திரங்களின் மனஅவசங்களுடன் ஏதோ ஒரு கோட்டில் வந்து இணைகின்றன. ஓவியம், சிற்பம் குறித்த தகவல்கள், தொன்மம் மற்றும் மாயையின் கூறுகள் தூயனின் எல்லாப் படைப்புகளிலும் அடிக்கடி வரும் விசயங்கள்.
தொன்மம் குறித்து எழுதப்பட்ட கதைகளிலும், ஒரு உலகத்தன்மை (Globaness) இருக்கிறது. உதாரணத்திற்கு ஸாஸ்யம் கதையை எடுத்துக் கொண்டு, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் தமிழர்களாலேயே அதன் மூலம் தமிழில் எழுதப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க முடியாத அளவு, ஒரு பெண்ணின் அகச்சிக்கல்கள் நிறைந்த கதை. உலகின் எந்த மூலையில் இருப்பவரும் அந்த உணர்வைப் புரிந்து கொள்ளமுடியும். தூயனின் கதைகள் வாசகருடன் ஒரு விளையாட்டை நடத்திக் கொண்டே இருக்கின்றன. விளையாட்டை விரும்பும் வாசகன் கதையில் தானும் பங்கெடுத்துக் கொள்கிறான். ஒரு பிரச்சனையின் தோற்றம், வளர்ச்சி, தீர்வு என்பதான சிறுகதை வடிவம் தூயனிடம் இல்லை. அதனால் ஆரம்பநிலை வாசகர்கள் தடுமாறுவதற்கு ஏராளமான சாத்தியங்கள் இருக்கின்றன. சிறுகதை வடிவத்தை அதன் பாரம்பரியத்தன்மையில் இருந்து விடுதலை செய்து, உலகமையநீரோட்டத்தில் கலக்க வைக்கும் யத்தனங்களைச் செய்யும் வெகு சில எழுத்தாளர்களில் தூயனும் ஒருவர்.
பிரதிக்கு:
எதிர் வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு ஜனவரி 2022
விலை ரூ. 250.
பக்கங்கள் 224