பெங்களூர் இரவிச்சந்திரன் பெயரை எண்பதுகளின் மத்தியில் கேள்விப்பட்டேன். தோழர் R P ராஜநாயஹம் இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகளையும் வாசிக்கக் கொடுத்தார். நாங்கள் தமிழில் தீவிர இலக்கியத்தைத் தவிர மற்றவற்றைக் கரப்பானைப் போல் ஒதுக்கிய காலமது. தோழர் அவரது உறவினர் ஒருவரின் பலத்த சிபாரிசில் இவரது நூல்களை வாங்கினார். இந்தத் தொகுப்பு மட்டுமல்ல, இனி வரும் எல்லாத் தொகுப்புகளும் சுஜாதாவிற்கே என்றதும், சுஜாதா அதற்கான முன்னுரையில் பெண்கள் மிகவும் ஜாக்கிரதையானவர்கள் , தன்னுடைய காதலன் யார் என்பதை தன் கணவனிடம் கூட சொல்ல மாட்டார்கள் ” என்ற வரியும் இன்றும் நினைவிலிருப்பவை. தோழர் R P ராஜநாயஹம் என்னுடன் ஒரு மாலை முழுதும் இரவிச்சந்திரன் கதைகள் குறித்து உரையாடல் நிகழ்த்தியிருக்கிறார்.
என்னுடைய எழுத்து குப்பை என்று சொல்லும் ஒரு எழுத்தாளரை எப்படி அணுகுவது? இதை விடக் குப்பையாய் நிறையப்பேர் எழுதுகிறார்கள் என்று சொன்னால் அது நிச்சயமாக பாராட்டல்ல.
தன்னுடைய எழுத்தின் ஜனரஞ்சகத் தன்மையை உணர்ந்தே எழுதியவர் இரவிச்சந்திரன். காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, காணாமல் போன வரிசையில் சேர்ந்தவரை அவர் பிறந்த ஊரில் இருக்கும் ஜெய்ரிகி பதிப்பகமே மீட்டெடுத்துக் கொண்டு வந்திருக்கிறது. காலஞ்சென்ற இரவிச்சந்திரனுக்கு இது இரண்டாவது இன்னிங்ஸா என்பதை இப்போது தமிழ் வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
இந்திராகாந்தியின் இரண்டாவது முகம் A Woman in Woman? என்பதுடன் முடிகிறது. பெண்மையை அகற்றிப் பெண்களை எப்படிப் பார்ப்பது? இந்திரா வெளியில் செல்லுமுன் நீரருந்த மாட்டார், வீடு திரும்பும் வரை அடக்கிக்கொள்வார் என்கிறார் Nayantara Sahgal இந்திரா பற்றிய நூலில். அடுத்த கதை கோதை பிறந்த ஊர், மொழிநடையில் மட்டுமல்ல, கதையும் கூட சுஜாதா பாணி தான். பெண்களின் Extra sense எப்போதுமே ஆச்சரியப்பட வைக்கும் விஷயம்.
இவரது கதைப்பெண்கள் எழுதிய காலத்தைப் பார்க்கையில் வித்தியாசமானவர்கள். கணவன் கொலைசெய்யப்பட்டால் தெருவில் உருண்டு அழுது புரளாமல் பிரதமரிடம் வேலைகேட்கும் பெண், பதினெட்டு வயது கூடுதலுள்ள அவலட்சணக் கணவன் தாசி வீட்டுக்குப் போவதால் விருந்தினனை Hoax செய்து காரியத்தை முடிக்கும் பெண், தாலியைக் கழட்டிக் கையில் கொடுத்து விட்டு விறுவிறு என்று நடக்கும் பெண் என்பது போல் வித்தியாசமான பெண்கள்.
சிங்கள ராணுவம் தமிழ்பெண்களைக் குறிவைத்து பாலியல் வல்லுறவு செய்வது, சிந்து சமவெளி நாகரீகத்தின் ஆதிக்கதை, Politics, bureaucracy, காவல்துறை என்று பல களங்களில் முயற்சி செய்திருக்கிறார்.
இவருடைய இந்திய பாஸ்போர்ட் , சுயம்வரம் , பார்சல் ஆகிய கதைகள் தரமானவை என்று R P ராஜநாயஹம் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார். சுயம்வரம் மட்டுமே இந்தத் தொகுப்பில் இருக்கிறது. அது போன்ற வெகுசில கதைகளையாவது அவர் பின்னாளில் எழுதியிருக்கக்கூடும். மரணம் அவருக்கு அந்த வாய்ப்பைத் தரவில்லை.
பிரதிக்கு:
ஜெய்ரிகி பதிப்பகம் 86438 42772
முதல்பதிப்பு ஜூன் 2022
விலை ரூ. 450.