Tomb of Sand அமெரிக்காவிலும் வெளியாகப்
போகிறது. உலகத்தின் மிகப்பெரிய மார்க்கெட் அது. உண்மையில் கீதாஞ்சலிக்கு நிறையவே அதிருஷ்டம் இருக்கின்றது. பழகிய துணையை விடப் பக்கத்துவீடு அழகாக இருப்பது போன்ற பொதுமனப்பான்மைகளைக் களைந்து பார்த்தாலும், மீதி ஐந்து நாவல்களும் அதிக நுட்பம் வாய்ந்தவை. ஒரு இந்தியநாவல் உலகின் முக்கிய பரிசை வாங்கும் பொழுது, ஒரு இந்தியனாக மகிழ்வது நம் கடமை. நிறைசூலியின் நடையை விமர்சனம் செய்வது போல ஆகும், நம் நாட்டிற்குக் கிடைத்த பெருமையைக் குலைக்கும் செயலில் இறங்குவது.
கீதாஞ்சலி புக்கர் விருது விழாவில் ஒரு இந்தி நாவலுக்கு இந்த விருது கிடைத்தது ஆனந்தம் என்கிறார். கூடவே இந்தி இலக்கியத்தின் Richness குறித்துப் பேசுகிறார். நான் வாசித்தவரை அவர் எங்கேயும், முதல் இந்திய நாவலுக்கு இந்தப் பரிசை வாங்குவதில் பெருமை என்று சொல்லவில்லை. அருந்ததி ராய் Man Booker பரிசை வென்ற போது ( அருந்ததி ராயின் Calibre வேறு உயரத்தில்) மலையாளிகள், கேரள நாவல் புக்கர் வென்றது என்று சொல்லவில்லை. கேரள வாழ்க்கையே அந்த நாவலில். Anuk Arudpragasam சென்ற வருடம் புக்கர் இறுதிப்பட்டியலில் வந்தபோது சிங்களவர்களும் இவர் எங்கள் நாட்டவர் என்றே சொன்னார்கள். இவ்வளவிற்கும் அது திட்டமிட்ட தமிழினஅழிப்பைப் பேசிய நாவல். இரண்டுமே ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. அதனால் நாட்டின் சொத்தாக மாறிவிட்டது போலும்.
இந்தி எழுத்தாளர்கள் ஒன்று கூடி வாழ்த்துகிறார்கள். கூட்டங்களில், தனிப்பட்ட
முறைகளில் பாராட்டைத் தெரிவிக்கிறார்கள். இந்தி இலக்கியம் இனி உலகவாசகர்கள் கவனத்தைப் பெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். ஏகோபித்த குரல்களைக் கேட்க முடிகின்றது. தமிழில் ஏன் இப்படி நடப்பதில்லை? முதலில் ஆட்டுக்குட்டி கதையை உலகின் ஐந்தாறு மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு எழுத்தாளர்கள் கள்ள மௌனத்தைக் கடைபிடிக்கிறார்கள். நரி வலம் போனால் என்ன இல்லை இடம் போனால் என்ன என்ற மனநிலை. அடுத்து வாசகர்களின் துதிபாடும் மனநிலை. ஒவ்வொரு படைப்பிலும் எழுத்தாளன் தன்னை நிரூபித்தே ஆக வேண்டும். யாரோ வரும் அரவம் கேட்டு அவசரத்தில் மூக்கில் காதலி கொடுத்த முத்தமல்ல,படைப்புகள், இதுவாவது கிடைத்ததே என்று திருப்தி கொள்ள. ஒரு பல்கலையில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களில் ஒருவர் கூட தி.ஜானகிராமனின் ஒரு சிறுகதையைக்கூடப் படித்ததில்லை. தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களில் பெரும்பான்மை சதவீதத்திற்கு வாசிப்பு சல்லடையை உபயோகித்து பதரை அகற்றித் தானியத்தை நிறுத்திக்கொள்ளும் வழிமுறை தெரியவில்லை. எல்லோரும் பால்விடும் போது நாம் ஒருவர் தண்ணீரை விட்டால் என்ன என்று கடைசியில் தண்ணீரே மிஞ்சிய நிலைமை நினைவுக்கு வருகிறது.