Ozeki அமெரிக்கத் தந்தைக்கும், ஜப்பானியத் தாய்க்கும் பிறந்த அமெரிக்க-கனடா எழுத்தாளர், திரைப்பட இயக்குனர், ஜென் புத்தத்துறவி. இதற்கு முன் இவரது நூல் புக்கர் இறுதிப்பட்டியலுக்கு வந்திருக்கிறது. இது இவ்வாண்டு WFA இறுதிப்பட்டியலின் நூல்களில் ஒன்று.

Bennyக்கு பன்னிரண்டு வயதில் அவனது தந்தை, ஒரு விபத்தில் இறந்து விடுகிறார். அவனது தாய், அதை எதிர்கொள்ள முடியாது,
உணர்வுக் கொந்தளிப்பில் அதிகபருமன் (Obese) ஆகிறார். அவர் வேலை பார்க்கும் இடத்தில் ஆட்குறைப்பு செய்கிறார்கள். குறைந்த வாடகையில் பல வருடங்கள் இருந்த வீட்டைக் காலி செய்ய நோட்டிஸ் வருகிறது. Misery Loves company ஆனால், இவற்றையெல்லாம் விட டீன்ஏஜில் அடியெடுத்து வைக்கும் ஒரே மகன் Benny விசித்திரமாக நடந்து கொள்கிறான். அவனுக்குக் காதுக்குள் குரல்கள் கேட்கின்றன. ஜடப்பொருட்கள் அவனிடம் பேசுகின்றன. ( தமிழில் முப்பது வருடங்களுக்கு முன் எம்.வி. வெங்கட்ராம் எழுதிய காதுகள் நாவலைப் படிக்காதவர்கள் உடனே படித்து விடுங்கள். தமிழின் மாஸ்டர்களில் ஒருவரது சிறந்த நாவலின் Flash அம்மாவின் அதீதசாயல் கொண்ட மகள் போல் ஆங்கிலத்தில் வந்திருக்கிறது)

நாவல் முழுவதுமே குரல்கள் ஒலிப்பது தான் கதை. Bennyயே மையக்கதாபாத்திரம். அவனது கோணத்தில் தானே கதை நகர வேண்டும். ஆனால் இந்த நாவலில் இன்னொரு மையக்கதாபாத்திரம் புத்தகங்கள். கதாபாத்திரம் மட்டுமல்ல, கதைசொல்லியும் புத்தகங்களே. புத்தகங்கள் எப்போதுமே மகிழ்ச்சியான கதைகளை மட்டுமே சொல்வதில்லை, சில நேரம் துயரக்கதைகள், சிலநேரம் வேடிக்கைக் கதைகள்………

புத்தகங்கள் சரியான வாசகர்களைத் தேடி அடையும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. ஜென் குரு எழுதிய நூல் ஒன்று புத்தகஅடுக்கிலிருந்து தவறி Bennyயின் அம்மாவின் Shopping Cartல் விழுகிறது. பலவித துயரங்களுக்கு நடுவே அந்த நூல் அவளுக்கு மயிலிறகால் வருடுவது போன்ற ஆறுதலைத் தரப் போகிறது. அந்த நூலின் சில அத்தியாயங்களும் இந்த நாவலின் இடையே முழுதாக வருகிறது. அதனால் இந்த நாவலை Meta fiction எனலாம். முழுக்கவே மாயயதார்த்தத்தின் சாயல் கொண்டிருப்பதால் Magical realism என்றும், Bennyயின் பன்னிரண்டு வயது முதல் பதினைந்து வயது வரையான வாழ்க்கையைக் கூறுவதால் இதை Coming of age story என்றும் சொல்லலாம்.

Bennyக்குக் குரல்கள் கேட்பது hallucination என்றால், அவன் நெருங்கிப்பழகும் இருவரும் கனவின் சாயல் கொண்டவர்களாக இருக்கிறார்கள். வாசகர்களை அவர்கள் அரைமயக்க நிலையில் வைத்திருக்கப் போகிறார்கள். குறிப்பாகத் தன்னை The Aleph என்று சொல்லும் பதினேழுவயதுப் பெண், (Borges கதையிலிருந்து எடுக்கப்பட்ட பெயர்). Bennyக்கு காதலின் சுகவேதனையைப் புரிய வைக்கிறாள். பதினான்கு வயதுப் பையன்கள் தன்னைவிட ஓரிரு வயது மூத்தப்பெண்களைத் தீவிரமாகக் காதல் செய்வது எல்லாக்காலங்களிலும், எல்லா நாடுகளிலும் நடப்பது போலும்.

Book of form and emptiness என்ற தலைப்பே அர்த்தம் பொதிந்தது. Annabelle (Bennyயின் அம்மா) கணவனின் இழப்பு ஏற்படுத்திய வெற்றிடத்தை வீடுகள் முழுவதும் வேண்டாத பொருட்களால் நிரப்பப் பார்க்கிறாள். பழைய செய்தித் தாள்கள், உடைந்த பொம்மைகள், உபயோகமில்லாத உடைந்த பொருட்கள் ……… Hoarders தங்களது பற்றுதலை சகஉயிர்களிடமிருந்து பொருட்களுக்கு மாற்றிக்கொள்கிறார்கள்.

Ozeki இரண்டு வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த இரண்டு பன்மொழியறிஞர்களுக்குப் பிறந்தவர். இவர் எழுத்தாளர் மட்டுமல்ல, ஜென்புத்தத்துறவி. எழுத்தாளர் எப்படி உண்மையிலேயே ஆசான் ஆகமுடியும் என்பதைக் கூறாமலேயே உணர்த்துபவர். போகிற போக்கில் சொல்லும் Life is not a self improvement project என்பது போன்ற பல வரிகள் அதிர வைக்கின்றன. இப்புத்தகத்தில் இருந்து குறைந்தது நூறூ Quotes எடுக்க முடியும். வழக்கத்திற்கு மாறாக 560 பக்கங்கள் கொண்ட இந்தநூலைப் படிக்க மூன்று தினங்கள் எடுத்துக் கொண்டேன். ஜென்புத்தத்துறவி குருவுக்கு தேநீர் கொடுக்கக் கோப்பையை எடுக்கையில் நழுவி விழுகிறது. குரு அது ஏற்கனவே உடைந்து விட்டது என்கிறார். எடுத்துப் பார்க்கையில் அதில் ஒரு சிறு விரிசல் கூட இல்லை. மனதில் மட்டுமே கோப்பை உடைந்திருக்கிறது. குரு மறைகிறார். பல வருடங்கள் கடக்கிறது. ஒரு நாள் பூகம்பத்தில் அந்தக் கோப்பை மேசையில் இருந்து விழுந்து சுக்கு நூறாகிறது. குரு அன்று சொன்னது இப்போது உண்மையாகிறது. இங்கே தேநீர் கோப்பைக்குப் பதில் வேறு எதையேனும் கூட நாம் பொருத்திக் கொள்ளலாம்.

When everything you think you own—your belongings, your life—can be swept away in an instant, you must ask yourself, What is real? (Ozeki)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s