கலகம் பிறக்குது – கார்த்திக் புகழேந்தி:
குறைந்த பட்சம் ஒரு குறுநாவலாகவாவது எழுதியிருக்க வேண்டிய கதை. 1800ல் இங்கிலாந்து, Wales, ஸ்காட்லாந்து எல்லாம்சேர்ந்த ஜனத்தொகை 10.5 மில்லியன். அதே வருடத்தில் இந்தியாவின் ஜனத்தொகை 160 மில்லியன். போரில் வெல்ல மக்கள் எண்ணிக்கை முக்கியகாரணியல்ல, ஆனால் ஒருநாட்டை ஆக்கிரமித்துத் தொடர்ந்து ஆட்சிசெலுத்த அது முக்கியம். எப்படி அவர்களால் 200 ஆண்டுகள் முடிந்ததென்றால் அதற்கு முக்கிய காரணம் நம்மவர்களின் துரோகமும், நமக்குள் அடித்துக் கொண்டதும் தான்.
ஒரு கலகத்தை கதையாக்கி இருக்கிறார் கார்த்திக் புகழேந்தி. இது போல் எத்தனையோ நூறு, தமிழ்நாட்டில் மட்டுமே நடந்திருக்கக்கூடும். ஆரம்பத்தின் சின்ன வெற்றிகளுக்குப் பின்னர் கடைசிச்சிரிப்பு எப்போதும் ஆங்கிலேயர்களுடையதாக இருந்திருக்கிறது. சட்டென்று நிகழ்காலத்தை மறக்கவைத்து, நம்மைக்கூட்டிச் செல்லும் மொழிநடை, கோர்வையாக சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்கும் கதை சொல்லல் இந்தக் கதையின் உபரி லாபங்கள். கார்த்திக் புகழேந்தி அவரது uniquenessஐத் தொடர்ந்து மெய்ப்பித்து வருகிறார்.
http://www.yaavarum.com/kalakampira/
அம்மை – சுஷில்குமார்:
சுஷிலிடமிருந்து மீண்டும் ஆன்மிகமும், அமானுஷ்யமும் கலந்த கதை. மாவிசக்கி அக்காவின் கதை. அம்மையும் அவள் தான்.
அம்மை முலையூட்டுவது மட்டும் இல்லை, அரக்கர்களை வதை செய்வதும் அவள் தான்.
நாஞ்சில் மொழிநடையில் தனக்கென்ற பாணியைத் தக்க வைத்திருக்கிறார் சுஷில். முன்னும் பின்னுமாக கதை நகரும் யுத்தியில் நேர்க்கோட்டில் செல்லும் கதைகளில் இல்லாத அழுத்தம் பதிவாகி இருக்கிறது. நாலுவீட்டுக்காரர்களின் ஆதிக்கதையிலிருந்து நடப்புக்கதை வரை கதையின் மையத்தை விட்டு நகராமல் கதை செல்கிறது. ஊர்கூடி சித்திரைக்கொடை விழா இரண்டுமுறை கதையில் வருகிறது. இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம். மாவிசக்கி அக்காவின் தொழிலும், அவள் நடந்து கொள்ளும் விதமும் எதனால் வந்தது என்பது கதை முடிகையில் தெரிகிறது.
http://www.yaavarum.com/ammai/
இறைவன் – லெ.ரா. வைரவன்:
இறைவனை நம்புபவர்களுக்கு மனித உருவில் செய்யப்படும் உதவிகளெல்லாம் அவன் செய்வதே. நம்பாதவர்களுக்கு உதவுபவனே இறைவன். கதியற்றோரின் கதறல்களுக்கு கோடிமுறை அவன் செவிசாய்க்காதது மட்டுமல்ல, இல்லாத அவன் பெயரால் நடக்கப்போகும் யுத்தங்களினால் தான் மனிதகுலத்திற்குப் பேரழிவு வரப்போகிறது.
வைரவன் Consciousக்கு உருவம் கொடுத்துக் கதைமுழுதும் பேச வைத்திருக்கிறார். நெடுங்காலமாக உறங்கிக்கொண்டிருந்த Conscious வயதானதும் முழித்துக் கொண்டது போலும். தனியாக மாட்டிக் கொண்ட பெண்ணுக்கு, போராளி, படைவீரன், பொதுமக்களில் ஒருவன் எல்லாமே ஒன்று தான். ஆண் என்ற ஒரே பெயர் தான். கதையின் முடிவை Open endingஆக விட்டிருப்பது நன்றாக இருக்கிறது.
http://www.yaavarum.com/iraivan-vairavan/
மரணமென்பது ஒரு சொட்டு அமிலத்துளி- தமயந்தி:
“எழுபத்தி இரண்டு வயதில் பாட்டி தற்கொலை செய்து கொண்டாள்.” இந்த இரண்டு பெண்பிள்ளைகள் எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. எரியும் வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்ற பொதுமனப்பான்மை கொண்டவர்களால் நிறைந்த உலகம்.
இந்த உலகம் வெகுசிலர் மட்டுமே வாழ்வதற்குத் தகுதியானதாக மாறிக்கொண்டே இருக்கிறது. அந்த நிதர்சனத்தைப் பெண்களின் பார்வையில் தமயந்தியின் இந்தக்கதை சொல்கிறது.
மணிப்பூர் பெண்கள் உடைகளைக் களைந்ததால் ஏதாவது மாறி இருக்கிறதா என்ன? அரசு அலுவலகத்தில் வேலை செய்வோர் தங்களையே அரசாங்கமாகக் கருதுவது தென்மாநிலங்களிலேயே பிரதானமாக உள்ளது.
http://www.yaavarum.com/dhamayanthi-story/
பொம்மை – தென்றல் சிவக்குமார்:
இந்துக்களுக்கு ஏகப்பட்ட தெய்வங்கள். அதனால் புதுத்தெய்வங்களை ஏற்றுக் கொள்வது எளிதாகிறது. புத்தரையும் ஒரு அவதாரமாக்கி இந்து தெய்வங்களுக்கு நடுவில் உட்காரவைத்த கோயில் ஒரிஸ்ஸாவில் இருக்கிறது.
தன்மையில் கதைசொல்லும் (உண்மையில் ஒருநாளின் ஒரு பொழுதில் நடப்பதைச் சொல்கிறாள்) பெண் குறித்து அதிக தகவல்கள் இல்லை. அவள் பெயர் கூட இல்லை. அவள் இந்துக்கோவிலுக்கும், கிருத்துவக் கோவிலுக்கும் வேண்டுதலா, பொழுது போகாமல் போகிறாளா என்பது கூட முக்கியமில்லை. முக்கியமான விஷயம் வேண்டுதல் தெய்வங்களின் பெயரைத் தேடாது பரந்து விரிதலும், முகம்தெரியாதவர்கள் காட்டும் ஆதுரமும் தான். அதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் தென்றல்.
http://www.yaavarum.com/pommai/
உள்ளிருக்கும் சொல் – காலத்துகள்:
எழுத்து என்பது Sexual urge போல பலரால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாததாகிறது.
எழுதுவதை Painful exercise என்றும் வாசிப்பதே பேரானந்தம் என்றும் வெகுசிலரால் மட்டுமே உணரமுடிகிறது.
காலத்துகளின் இந்தக்கதை கொரானாவால் உயிர்பயம் போகாத இந்தக்காலகட்டத்தில்
தன்னிருப்பை எழுத்தின் மூலம் நிரந்தரமாக்கத் துடிக்கும் மனநிலையை அழகாகக் கொண்டு வந்திருக்கிறது. எழுத்து ஒரு போதை.
http://www.yaavarum.com/kaalathugalstory/
ஃபோகஸ் – லட்சுமிஹர்:
காமிராவுக்கு முன் ஒருதரம் நின்றவர்களால் பின்னர் அதிலிருந்து விலகிச்செல்லவே முடிவதில்லை. வேலன் போல் contentment
மனநிலை அபூர்வமாகக் கிடைப்பது.
திரைத்துறையில் பணிசெய்வதால் அது சம்பந்தப்பட்ட தகவல்கள் அவ்வளவு இயல்பாக இருக்கின்றன. மனைவியாக நடிப்பவளை அசல் மனைவியுடன் ஒப்பிட்டுக் கொள்வதில் ஆரம்பித்து வேலன் கதாபாத்திரம் நன்றாக வந்திருக்கிறது. Ladyluckஐ முழுதாக நம்பிய துறை திரைத்துறையாகத் தான் இருக்கும்.
http://www.yaavarum.com/focus/
சிராய்ப்பு – அகராதி:
காதலில் பைத்தியக்காரத்தனம் தான் முக்கியமான விஷயமா? தெரியவில்லை. அகராதி Young adult fiction எழுதலாம். தமிழில் எழுதுவதற்கு எண்ணிக்கை குறைவு.
காமிக்ஸ் படிப்பதும் Maturityம் Deadly combinationஆக இருக்கிறது. எனக்கு புரிந்து கொள்ள முடியவில்லை. அடுத்து கவலைப்பட வேண்டாம் என்று சில கஷ்டங்களை மறைப்பது காதலில் சேர்த்தி இல்லையா? இந்தப் பெண்களையும் புரியவில்லை.
http://www.yaavarum.com/siraippu/
குரூரத்தின் நிழல் – ஸ்ரீராம் கலியப்பெருமாள்:
திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையைப் பற்றிய கதை. இடையில் ஜாதி வன்மம்.
கொஞ்சம் திட்டமிட்டிருந்தால் இந்தக் கதையையே நன்றாக எழுதி இருக்கலாம்.