Shafak துருக்கி-பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர், கட்டுரையாளர், பேச்சாளர், களப்பணியாளர். இவருடைய முந்தைய நாவல் புக்கரின் இறுதிப்பட்டியலுக்கு வந்திருக்கிறது. இந்த நூல் WFAன் இறுதிப் பட்டியலில் ஒன்று.
மரம் ஒரு கதை சொல்லி. Fig மரம். Cyprus தீவு British Crown Colony ஆக இருந்த காலத்தில், 1878ல் உயிர்கொண்ட மரம். 1970ல் Cyprusல் கிரேக்கர்களுக்கும், துருக்கியர்களுக்கும் மதக்கலவரம் மூளுகிறது. இரு மதங்களைச் சேர்ந்த, வேறுபட்ட நம்பிக்கையுள்ள காதலர்கள், பிரிகிறார்கள் பின் பலப்பல வருடங்களுக்குப்பின் அங்கிருந்து இங்கிலாந்து வந்து சேர்கிறார்கள். அவர்கள் வரும்போது, Fig மரத்தின் கிளை ஒன்றைக் கொண்டு வந்து இங்கிலாந்தில் நட, அது வளர்கிறது. தாய்மரம் கடந்த காலக் கதையையும், கிளைமரம் நிகழ்காலக் கதையையும் சொல்கின்றன.
மரங்கள் தட்பவெப்ப நிலையை அனுசரித்தே உயிர்த்திருக்கின்றன. Cyprus போன்ற உஷ்ணப் பிரதேசத்தில் வளர்கின்ற மரம் இங்கிலாந்து போன்ற நாடுகளின் கடும்பனிக்காலங்களில் பிழைத்திருப்பதே அதிசயம். அதை Cyprusல் இருந்து கொண்டு வந்தவன், பனிக்காலங்களில் மரத்தை முழுதும் மண்ணுக்கு அடியில் புதைத்து, வெயில் வந்ததும் வெளியே எடுக்கிறான். சிதைந்த வேர்களைத் தவிர எஞ்சியிருக்கும் வேர்கள், மரத்தை மீண்டும் நட்டதும் உயிர்ப்பிற்கு உதவுகின்றன. கதையில் Fig மரத்தை அவன் பெண்ணாகக் கருதுவதும் கூட, மரத்திற்கு உயிர்பிழைக்கும் ஆவலை அதிகரித்திருக்கலாம்.
மதக்கலவரங்களுக்கு உலகில் எல்லா இடங்களிலும் ஒரு Pattern இருக்கிறது. வன்முறைகளுக்கும் அதே போல். பேருந்தை நடுவழியில் நிறுத்திப் பெயரைக் கேட்டு அவர்களைத் தனியாகப் பிரிப்பது, Cyprusல் மட்டுமல்ல, இந்தியாவிலும் நடந்திருக்கிறது. அத்தனை காலம் ஒன்றாக இருந்த கிரேக்கரும், துருக்கியரும் ஏன் ஒருவரை ஒருவர் கொல்ல வேண்டும்? அத்தனைகாலம் ஒன்றாக இருந்த இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஏன் ஜென்மவிரோதிகள் ஆக வேண்டும். எல்லாவற்றிற்கும் பின் ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சி இருக்கின்றது.
எழுபதுகளில் Cyprusல் பெரும் மதக்கலவரம், உள்நாட்டுப் போராக கிளர்ந்தெழுகையில் ஆரம்பிக்கும் நாவல், இரு மதத்தினரின் ஒருகாதல் கதையைச் சொல்லிக் கொண்டு போகும் போது, எழுபதுகளில் இருந்து 2010 வரையான Cyprus அரசியல், சமூக சூழலையும் சொல்லிக் கொண்டே போகிறது. எழுபதுகளின் Cyprusம் 2010ன் லண்டனும் கதையில் மாறிமாறி வருகின்றன.
இரண்டு மதத்தினருக்குப் பிறந்து இங்கிலாந்து போன்ற அந்நிய நாட்டில் வாழும் டீன்ஏஜ் பெண்ணின் பிரச்சனைகள், தாய்நாட்டில் கலவரம் வந்து போது தப்பியோடி அடுத்த நாட்டில் அடைக்கலம் புகுந்தவருக்கா இல்லை அழிவைக் கண்முன் பார்த்து நடைபிணமாய் ஆனவருக்கா அதிக வலி போன்ற ஆதாரக் கேள்விகள், நெருங்கிய சொந்தம் இறந்தார்களா இல்லையா என்று தெரியாது நிம்மதியிழந்த மக்கள், அதைக் காசாக்கத் துடிக்கும் குறிசொல்லிகள், Cyprusல் மலேரியா ஆங்கிலேயர்களின் முன்னூறு குழந்தைகளைக் கொல்வது என்று நாவல் ஏராளமான விசயங்களைத் தொட்டுச் செல்கிறது.
Closure என்பது மனித உறவுகளில் முக்கியமான விசயம். Missing persons ஏற்படுத்தும் நிம்மதியின்மையை மற்றவர்களால் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது. ஏராளமான விஷயங்கள் இந்த நாவலில் Historical facrsஐ வைத்து எழுதப்பட்டன. ஆனால் புனைவு, அதிசயங்களின், கனவுகளின், காதலின், துயரத்தின், கற்பனையின் கலவை. இந்த நாவலும் அதுவே. துருக்கியின் புகழ்பெற்ற எழுத்தாளர் இவர். நாவலில் குறைவாக வரும் மரியம் கூட தெளிவாகச் சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரம். ஒவ்வொரு நேர உணவையும் விருந்தைப் போல் தயாரிக்கும் மரியம். உணவின் மூலம் ஆதிக்கம் செலுத்த நினைப்பது பெண்களின் பழக்கம். டெஃப்னியின் பிரச்சனை தான் என்ன? நல்ல வாசகர்கள் கண்டு கொள்வார்கள். காதலின் புனிதத்தை விட காதலின் நிதர்சனத்தை இலக்கியப்படுத்துவது மேன்மையானது.
WFAன் இறுதிப்பட்டியலின் ஆறுநாவல்களில் ஐந்தாவது நாவல் இத்துடன் முடிகிறது. ஐந்துமே Modern Novels எப்படி எழுதப்படுகின்றன என்பதன் மாதிரிகள். நாவல்கள் விரிவான களத்தை எடுத்துக் கொண்டு, பல்லடுக்குகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிக் கொண்டே போகின்றன.
ஐந்துமே மிகச் சிறந்த நாவல்கள், மிகுந்த ஆய்வின் பின் எழுதப்பட்ட நாவல்கள், ஐந்தையும் வாசிக்க முடியாதவர்கள், இந்த நாவலை மட்டுமாவது தவறாது வாசிக்க வேண்டிக் கொள்கிறேன்.