ஆசிரியர் குறிப்பு:
அமெரிக்காவின் ஃப்ளாரிடா மாகாணத்தில் வசிக்கும் ஆரூர்பாஸ்கர் மென்பொருள் துறையில் பணிபுரிகிறார். இர்மா, வனநாயகன் போன்ற இவருடைய முந்தைய நூல்கள் பரவலான கவனத்தைப் பெற்றன. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழரில் இலக்கியத்திற்குத் தொடர்ந்து பங்களிப்பவர்களில் ஒருவர். இந்த நூல் சமூகஊடகங்கள் குறித்த புரிதலை அதிகப்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு.
காலை ஐந்து மணிக்குக் கோலம் போடுகையில் பார்த்தால் தான், யாரும் அருகில் இல்லாது பேசமுடியும் என்ற காலத்திலிருந்து, அடுத்தவர் மனைவியிடம் கூட நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு யாருமறியாது பேசமுடியும் என்ற காலத்தில் வந்து நிற்பது வாழ்வின் சர்ரியல் தன்மையை உணர்த்துகிறது. சமூக ஊடகங்கள் ஆண்-பெண் உறவின் நெருக்கத்தை மட்டும் ஏற்படுத்தவில்லை, ஒரு கலாச்சாரத்தை, சில நம்பிக்கைகளை, பல முட்டாள்தனங்களை அடித்து நொறுக்கியிருக்கின்றன.
Finance உலகில் இருப்பவர்கள் எல்லோருக்கும் தெரிந்தது பணமோசடிகளில் நைஜீரியர்களின் பங்கு. சமூக ஊடகங்கள் அதைப் பரவலாக்கிப் பலரை ஏமாற வைத்திருக்கின்றன. தொண்ணூறுகளின் ஆரம்பத்திலேயே காசோலையைப் போட்டதும் Clear செய்யும் அமெரிக்க வங்கிகளுக்கும், முப்பது நாட்கள் ஆகும் முடிவுதெரிய என்று நிறுத்தி வைக்கும் இந்தியவங்கிகளுக்கும் எவ்வளவு வித்தியாசம்!
பத்து ஆண்கள், பத்து பெண்கள் ஒன்றாக பாலினவேற்றுமையைப் பார்க்காது, அரட்டை அடித்து நட்பாக இருக்கும் இன்றைய தலைமுறையினர் Messengerல் அதிகம் அறிமுகமில்லாதவர்களுக்கு காதல்/காமச் செய்திகளை அனுப்புவார்களா? Sexual povertyயில் உழல்பவர்கள் வேறு எப்படியும் நடந்து கொள்ள முடியாது.
Dos and Don’ts ஆக இந்த நூலை ஆரூர் பாஸ்கர் எழுதவில்லை. பலரது குட்டிக் கதைகளை இணைத்துத் தான் சொல்ல வேண்டியதை சொல்லியிருக்கிறார். அமெரிக்காவின் பிரியாவின் கதை மிக முக்கியமானது. Fame, popularity என்ற போதைகளை எல்லாம் தாண்டி தூத்துக்குடி சம்பவத்தால் அவர் செயலிழந்து போவது தான், ரத்தமும் சதையுமான நம்மையும், அரசியல்வாதிகளையும் பிரிப்பது. தவறான செய்திகள் சமூகஊடகங்களில் பரப்பப்பட்டு கோடிக்கணக்கானவரை அடைந்தபின் அதற்கு மறுப்பு தெரிவித்து ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதும் மிக முக்கியமான விஷயம். Character Assasination.
என்வரையில் முகநூல் எனக்கு அளித்தது ஏராளம். அடிப்படையில் Introvertஆன எனக்கு ஒரு பெரிய வட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தது மட்டுமல்லாமல், பலகாலம் படித்த புத்தகங்களை விவாதிக்க யாரும் இல்லாமல் புதைத்துக்கொண்டே இருந்த நிலையை மாற்றிப் பலரது கோணங்களைக் கேட்கும் வாய்ப்பை முகநூல் தந்திருக்கிறது.
நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, சின்னச்சின்ன அத்தியாயங்களாய், வேறுவேறு மனிதர்களின் கதையாய் சுவாரசியத்திற்கு குறைவேயில்லாது நூலை எழுதியிருக்கிறார். பெரும்பாலான தகவல்கள் பலருக்கும் தெரிந்தவை தான். ஆனால் தெரியாதவருக்கு இது அபாயத்தில் இருந்து காப்பாற்றும் கையேடாக இருக்கக்கூடும். இன்னும் கூட, முற்றிலும் ஒருவனை நம்பி, எச்சரிக்கை உணர்வு சிறிதுமின்றி, X videosல் இடம்பிடித்த குடும்பப்பெண்கள் போல சமூகஊடகங்களின் பல ஆபத்துகளைக் குறித்து நாம் பேச வேண்டியது நிறையவே இருக்கின்றது.
பிரதிக்கு:
எழுத்து பிரசுரம் 89250 61999
முதல்பதிப்பு ஜனவரி 2022
விலை ரூ.260.