சார்லஸ் டிக்கின்ஸ்ஸின் நாவல்களில் சிறந்தது எது என்றால் கலவையான பதிலே கிடைக்கும். David Copperfieldம் Great Expectationம் பலரும் படித்தவை. Oliver Twist, Hard Timesக்கு கணிசமான ஓட்டுகள் கிடைக்கும். பெண்கள் மட்டும் ஓட்டளித்தால் Christmas Carol என்ற குறுநாவல் வெல்லும். ஆனால் என்னைப் பொறுத்தவரை Bleak House தான் அவருடைய சிறந்த நாவல். என்னுடைய போறாத காலம், ஷெர்லாக் ஹோம்ஸ்க்கும் முன்பாக, ஒரு டிடெக்டிவ் அறிமுகமாகும் முதல் ஆங்கில நாவல் இது. டிக்கின்ஸின் (மேற்குறிப்பிட்டவை மட்டுமே நான் வாசித்தவை) மற்ற நாவல்களை விட சஸ்பென்ஸ் அதிகமாக இருக்கும் நாவல் Bleak House. ஆனால் இதற்காக நான் இந்த நாவலை சிறந்த நாவல் என்று சொல்லவில்லை. கிளாசிக்ஸில் திரில்லரை எப்போதும் நான் தேடுவதில்லை.

1851 டிக்கின்ஸிற்கு துர்வருடம். இதே வருடம் அவருடைய மனைவி நரம்புத்தளர்ச்சி நோயால் பாதிக்கப்படுகிறார். அவரது குழந்தை எட்டு மாதத்தில் இறந்து போகிறது. அவருடைய தந்தை இறந்து போகிறார், எல்லாமே 1851ல். 1851 நவம்பரில் டிக்கின்ஸ் இந்த நாவலை எழுத ஆரம்பிக்கிறார். 1852ல் Bleak House தொடர் நாவலாக (இருபது பகுதிகள்) வெளிவருகிறது. டிக்கின்ஸின் ஒன்பதாவது நாவல் இது. Victorian Literatureஐப் பற்றிக் குறிப்பிடுபவர்கள் யாருமே Bleak Houseஐத் தவிர்த்து சொல்லிவிட முடியாது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த நாவல்களில் ஒன்று.

Bleak House பெரிதும் Anatomy of society குறித்துப்பேசும் நாவல் என்று சொல்லலாம்.
மொத்த சமூகத்தின் இயல்பையும், கட்டமைப்பையும் இந்த நாவல் ஆராய்கிறது.
அடுத்ததாக நீதிமன்றமும், சட்டமும் எவ்வாறு குறித்தகாலத்தில் நீதி வழங்குவதை விட
வழக்கை எவ்வளவு தாமதப்படுத்தமுடியுமோ அவ்வளவு தள்ளிப்போட உறுதுணையாக இருக்கின்றன என்ற விமர்சனத்தை முன்வைக்கிறது. இதில் குறிப்பிடும் வழக்கு முடிவதற்குள், இரண்டு தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் இறந்து போகிறார்கள். இவருடைய முந்தைய நாவல்களில் இருந்து விலகி, தனியொருவன் வில்லனாக வருவது இந்த நாவலில் கிடையாது. Signs and Symbols அதிகமாக டிக்கின்ஸ் உபயோகப்படுத்தி இருப்பது இந்த நாவலில் தான். உதாரணத்திற்கு ஒரு கதாபாத்திரம் கொலைசெய்யப்படுமுன், கடிகாரத்தைப் பார்த்து ” நீ ரொம்ப நாள் ஓட மாட்டாய் போலிருக்கிறதே” என்பான். பிரதான கதாபாத்திரமே பெரும்பாலும் கதைசொல்லியாக வரும் நாவலில், அவளுக்குத் தெரிந்த கதையை மட்டும், அவளது கோணத்தில் தோன்றுவதை மட்டும்
சொல்வதாக Narrative technique. ஒரு அத்தியாயத்தில் அவளுக்கு அவள் அம்மாவிடம் இருந்து முக்கியமான கடிதம் வரும், அவள் படிப்பாள், ஆனால் அதில் என்ன எழுதியிருந்தது பல அத்தியாங்களுக்குப் பிறகே வாசகர்களுக்குத் தெரியவரும்.

இப்போது யோசித்துப் பார்த்தால் இதன் மையக்கதாபாத்திரம் எஸ்தரினால் தான் எனக்கு இந்த நாவல் அதிகம் பிடித்ததா என்ற கேள்விக்கு எனக்கு விடைதெரியவில்லை.
எஸ்தருக்குக் கிட்டத்தட்ட ஜேன் ஆஸ்டின் கதைப்பெண்களின் சாயல், of course மைனஸ் snobbishness. Feminism பற்றிய தோற்றுவாய் இல்லாத காலத்தில் ஒரு பெண் ஒருவனைக் காதலித்துக் குழந்தை பெற்றுப்பின் சமூகஅந்தஸ்து கொண்ட ஒருவனை மணந்து கொள்கிறாள். இது இங்கே முடிவதில்லை. மனைவியின் ரகசியத்தை மணமுடித்து இருபது ஆண்டுகள் கழித்து அறியவரும் கணவன்,
அவள் மேலுள்ள காதல் சற்றும் குறையாமல், அவள் ஏதேனும் செய்துகொள்ளக் கூடாதே என்று கவலைப்படுகிறான். இன்னொரு பெண்மணியின் மூன்றாவது கணவன், முதல் கணவனைத் தான் அவள் உயிராகக் காதலித்தாள் என்று பெருமையாக வெளியில் சொல்கிறான். தான் காதலித்த, திருமணம் செய்வதற்கு மனப்பூர்வமாக ஒப்புக்கொண்ட பெண்ணை, அவளது காதலனுடன் சேர்த்து வைக்கிறான் ஒருவன். சுதந்திரமும், சுயசிந்தனையும் கொண்ட வலிமைமிக்க பெண்கதாபாத்திரங்கள் நிறையவே இந்த நாவலில் உண்டு.

அடுத்தடுத்து என்ன என்ற கேள்விகள் பெரும்பாலும் கிளாசிக்கில் வருவதில்லை. ஆனால் Bleak House விதிவிலக்கு. நான் முதன்முதல் கல்லூரி முடித்து உடனேயே படித்தபோது எனக்கு Bandwidth போதவில்லை. இருபதுவருடங்கள் கழித்து படித்தபோது நினைவாற்றல் காரணமாக எந்த suspenseம் பாக்கி இருக்கவில்லை. சந்தர்ப்ப சாட்சியங்கள் எல்லாமே ஒருகொலையை இவர் தான் செய்திருக்க வேண்டும் என்று நூறு சதவீதம் வாசகர்களை நம்பவைத்து ஒரு டிவிஸ்டு போல பல Suspenseகள் இந்த நாவலில். பத்தொன்பதாம் நூற்றாண்டு வழக்கப்படி Ghostன் காலடிச்சப்தம் சில இடங்களில் கேட்டு மறைகிறது.

கிட்டத்தட்ட நூறு கதாபாத்திரங்களை ஒரு மொத்த சமூகத்தை எடுத்துக்காட்ட பயன்படுத்தி இருப்பார். அந்த காலகட்டத்தில், அங்கே, விளிம்புநிலை மனிதர்களின் சராசரி ஆயுள் 24 வருடங்கள் என்னும் போது இந்தியா எவ்வளவு ஆரோக்கியமாக இருந்திருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. Double narrative யுத்தி அந்தக்கால வாசகர்களுக்கு சவாலாக இருந்திருக்கும். அதில் ஒரு கதைசொல்லி யாரென்றே கடைசி வரை தெரியாது.

பெரியம்மை தழும்புகள் நிறைந்த முகத்தை எஸ்தர் கண்ணாடியில் பார்ப்பதும், மரப்பசுவில் அம்மணி கண்ணாடி முன் நின்று வயதாகிவிட்டது என்று யோசிப்பதும் ஏதோ ஒரு புள்ளியில் இணைகின்றன. பெரிய அந்தஸ்தில் இருக்கும் எஸ்தரின் அம்மா, தன் ரகசியம் வெளியானாலும் பரவாயில்லை என்று தன்னை நம்பிய பணிப்பெண்ணின் நல்வாழ்விற்கு உதவுகிறாள். Caddyக்கு ஏன் வாழ்க்கை மொத்தமுமே துயர் நிரம்பியதாக இருக்கிறது? பெரும்பாலான குடும்பங்கள் மகிழ்ச்சியற்ற தாம்பத்தியத்திலிருந்து வெளி வராமல் துயரை அனுபவிக்கின்றன.
எழுநூறு பக்கங்களுக்கும் அதிகமான Bleak Houseஐ வாசித்தல் கூடுவிட்டுக்கூடு பாயும் ஒரு அனுபவம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s