சந்திரா தங்கராஜ் சென்னைக்கு வந்து சேர்ந்து, பத்திரிகையாளராகப் பின் திரைப்படத்துறையில் பணியாற்றி என்று 27வருடங்கள் ஆன பிறகும், பிறந்த ஊரான தேனி மாவட்டத்தின் கூடலூரை இன்னும் சுமந்து கொண்டிருப்பது, இந்தக் கதைகளை வாசிக்கையில் தெரிகிறது. சோளம் என்ற இந்த சிறுகதைத் தொகுப்பில், பூனைகள் இல்லாத வீடு என்ற முந்தைய தொகுப்பின் கதைகளும் இருக்கின்றன.
பூனைகள் இல்லாத வீடு, ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் வளர்ந்து, ஒவ்வொருவராக வெளியேறி, முற்றத்தை வெற்றிடமாக்கிப் போவதைச் சொல்வதுடன் முடிவதில்லை. கதைக்குள் கதையாய் பெரியம்மா குடும்பத்தின் கதையையும் உள்ளே வைத்திருக்கிறது. ஒரு சிறுவனின் பார்வைக்கோணத்தில் நகரும் கதையில்
காலம் அவனது வளர்ச்சியைப் போலவே, வேகமாகக் கடந்து செல்கிறது. ஒரு கூரையின் கீழ் அடித்தும்,கொஞ்சியும் வாழ்ந்தவர்கள் இனி அவரவர் வாழ்க்கையை வாழப்போவதை எந்த ஆரவாரமுமில்லாமல் சொல்லி பிரதானகதை நகர்ந்து முடிகிறது. ஆனால் கிளைக்கதையில் தான் முக்கியமான ஒரு விஷயத்தை மறைத்து வைத்திருக்கிறார் சந்திரா. பூனைகள் என்பது குறியீடு.
இருபத்தொன்பது கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பை, மூன்று விதமாகப் பிரிக்கலாம்.
முதலாவது மேற்குத் தொடர்ச்சி மலையின் காற்றையும், நினைவில் ஊறிய ஊரின் வாசத்தையும் சொல்லும் கதைகள். இரண்டாவது நாட்டார் கதைகளின் சாயல் கொண்ட கதைகள். கடைசியாக சென்னை வாழ்வு, சினிமாத்துறை சம்பந்தப்பட்ட கதைகளும் அதில் அடக்கம்.
நாட்டார் பாணிக்கதைகளில் ஒன்றில் பேய் தன்னை ஏமாற்றிக் கொன்றவர்களைப் பழி வாங்குகிறது. இன்னொன்றில் பேய், சிறுமியை மடியில் படுக்கவைத்துத் தட்டிக் கொடுத்து பத்திரமாகத் திருப்பி அனுப்புகிறது. இது போன்ற கதைகளில் மட்டுமல்லாது, அநேகமான கதைகளில், கி.ரா வின் கதைகளைப் போன்று வாய்மொழிக்கதைகளைச் சொல்லும் கதைசொல்லியின் சாயல் நிறைந்திருக்கிறது.
சந்திராவின் சொந்த ஊரைக் களமாகக் கொண்ட கதைகள், மலையின் அழகை, நிலப்பரப்பை, நதி, மரங்கள், பறவைகள் சூழ்ந்த இயற்கை அழகைச் சேர்த்தே கொண்டு வருகிறது. உள்ளூரில் பிழைக்க வழியின்றி புலம்பெயர்வது, கஞ்சாச்செடி வளர்த்து, விரைவுப்பணம் சம்பாதித்துப்பின் மாட்டிக்கொள்வது, முந்திரிக்காடுகள் அழிவது போன்றவை திரும்பத்திரும்ப நடக்கின்றன. எளிய மக்களின் அதிகச்சிக்கல்கள் இல்லாத சாதாரண வாழ்க்கை. திருடன் கூட தன்னால் நேர்ந்த ஒரு தற்கொலைக்கு காலமெல்லாம் கண்ணீர் வடிக்கிறான்.
சென்னையில் திரைப்படத்துறையைப் பற்றிச் சொல்லும் கதைகளில் ‘கட் சொன்ன பிறகும் காமிரா ஒடிக்கொண்டிருக்கிறது’ என்ற கதை முக்கியமானது. திரைத்துறையில் உதவி இயக்குனராகப் பணியாற்றும் பெண்களும், பெண்களின் சங்கடங்களை உணராமல் தம் வேலையை முடிப்பதில் குறியாக இருப்பதையும், நடிக்க வந்த பெண், உணர்ச்சிகள் மரத்துப்போய், ரவிக்கையின் முதல் பின்னை மட்டும் அகற்றச் சொன்னால், காமிரா நிறுத்தாமல் ஓடிக்கொண்டிருப்பதால், மொத்தப் பின்களையும் கழட்டி, ரவிக்கையையும் உணர்வேயின்றி களைவதையும் சொல்லும் கதை. கனவுத் தொழிற்சாலையின் வெம்மை சுடுகிறது. அதே போல் வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் இரண்டு சிறுபெண்கள் கூட்டுப் பாலியலுறவுக்கு உள்ளாகிறார்கள், மற்றொரு கதையில் நிறை கர்ப்பிணிக்கு உணவு, உறைவிடம் கொடுக்க யாருக்கும் மனமின்றி விரட்டி அடிக்கிறார்கள். பெருநகருக்கு வரும் சிற்றூர் மக்களின் மிரட்சி கதைகளில் நன்றாக வந்திருக்கிறது.
தொகுப்பின் ஆறேழு கதைகளில் ஆண்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக காதலியை நிரந்தரமாகப் பிரிந்து செல்கிறார்கள். பெண்கள் பித்துப்பிடித்தது போல் அவர்களை நினைத்து உருகி, தற்கொலை முயற்சி வரை செல்கிறார்கள். அடித்தாலும் மனைவிகள் வீட்டை விட்டு வெளியேறாமல் காலத்தைக் கழிக்கிறார்கள். மொத்தத்தில் சந்திராவின் கதைப்பெண்கள் பலவீனமானவர்கள் அல்லது அதீத பாசமானவர்கள். அதனாலேயே மருதாணி வித்தியாசமானவளாகவும், வலிமை மிகுந்த கதாபாத்திரமாகவும் இருக்கிறாள். காமம், மீறல் என்பதைத் தாண்டி பெரும்பாலான ஆண்களின் குணத்தை மருதாணி பிரதிபலிப்பதாலேயே அந்தக்கதை வெற்றிகரமாக அமைந்திருக்கிறது. சந்திரா செய்ய வேண்டியதும், இது போன்ற வித்தியாசமான கருக்களைக் கொண்ட கதைகளை எழுதுவது தான்.
புளியம் பூ, பூனைகள் இல்லாத வீடு போல கிராமத்து மக்களின் வாழ்க்கையை, செயற்கைத்தனம் சிறிதுமின்றி உயிர்ப்புடன் கதைகளில் வடித்திருக்கிறார். கவிஞர் மற்றும் திரைப்பட இயக்குனர் என்பதனால் புறக்காட்சிகளை, கதைகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைத்திருக்கிறார்.
நல்ல மொழிநடை, எதிரிலிருப்பவருக்கு கதை சொல்வது போன்ற தொனி கதைகளின் சுவாரசியத்தைக் கூட்டுகிறது.
சந்திராவிடம் இன்னும் ஏராளமான கதைகள் சொல்லாமல் தங்கியிருக்கும், தனக்குத் தானே கடிவாளம் போட்டுக் கொள்ளாமல் ஓட விட்டால், இந்தக் குதிரை பயணிக்கப் போகும் தூரம் பரந்துவிரிந்தது.
பிரதிக்கு:
எதிர் பதிப்பகம் 99425 11302
முதல்பதிப்பு ஜனவரி 2022
விலை ரூ. 399.
பக்கங்கள் 352.