கள்ளிமடையான் சிறுகதைகள் என்ற மூர்த்தியின் முதல் சிறுகதைத் தொகுப்பில்,பெரிதும் கவர்ந்த விசயம் வட்டாரமொழியின் வசீகரம். முதல் தொகுப்பென்ற அறிகுறியே இல்லாது
செழுமையான மொழி. கதைக்கருவில் கவனம் தேவை என்று அப்போது குறிப்பிட்டதாக நினைவு. இந்தத் தொகுப்பில் ஐம்பது சதவீதம் கவனம் செலுத்தியிருக்கிறார் என்று தோன்றுகிறது. தமிழின் உன்னதமான கதைகள் எல்லாமே அழுத்தமான கரு அல்லது கதைக்களத்தைக் கொண்டவை. இவை இரண்டும் அழுத்தமாகப் பதியப்படாமல், மொழிநடை அல்லது அபரிதமான தகவல்களை மட்டும் நம்பி எழுதப்படும் சிறுகதைகள் ஒரு செய்தியைப் படிப்பது போன்ற உணர்வை அளித்து, நினைவில் நிற்காது மறைந்து விடுகின்றன.
நவீன சிறுகதைகளில் வாசகரின் பங்கும் முக்கியமானது. சிறுகதைகள் புதிர் விடுகதைகள் இல்லை. ஆனால் கதையைப் படித்து முடித்தபின்னர், வாசகரின் தொடர் எண்ணவோட்டத்திற்கு வழிவகுக்காத கதைகள் அநேகமாக சிறந்த கதைகள் இல்லை. முதல் கதையான அனன்யாவின் பச்சைக்கல் மோதிரம், இருவரும் ஏன் சேராதிருக்கிறார்கள், ஜாதிப் பிரச்சனையா என்பதில் இருந்து பல கேள்விகளை வாசகர் மனதில் எழுப்பும்.
சென்டிமென்டலான விசயங்களைப் பற்றிய கதைகளில் யதார்த்தத்தை விட்டு ஒரு இன்ச் நகராது எழுதும் போது அவை நல்ல கதைகளாகின்றன என்பதற்கு எடுத்துக்காட்டு ‘குறிப்புகள்’ சிறுகதை.
முழுமையாக ஒருவரின் சுமையாக அவர் தலையில் அமர்ந்து கொள்ளும் பொழுது, நெருக்கங்கள் நீர்த்துப்போய், நிதர்சனத்தின் கனத்தைத் தாங்கமுடியாது கசப்பு பரவுவது
வாழ்க்கையின் நியதி. உறவுகளை Glorify செய்து மகிழ்வது ஜனரஞ்சகக் கதைகள்.
பதினைந்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது. பக்க அளவிலும் நீள் கதைகள் எதுவுமில்லை. Lesbionism பற்றிப் பேசும் நீர்க்கன்னிகள், புராணக்கதையின் மறு உருவாக்கம் வித்தியாசமான கண்ணோட்டத்தில், இரண்டு தனிமையைச் சொல்லும் பின்னிரவுகளின் வாதை, புராண
மீட்டுருவாக்கம் ‘அரவான்’ என்று வித்தியாசமான கருக்களை தெரிவு செய்திருக்கிறார். ஆனால் இரவாடிப் பறவை, அசுணக்குடி, செவ்வரி பூத்த……, மண்புணர்க்காலம் போன்ற கதைகள் மூர்த்தியின் Signature கதைகள். வேறு எவரும் இதை காப்பி அடித்தல் கடினம்.
மூர்த்தியின் மொழிநடை, குறிப்பாக கிராமப் பின்னணி கொண்ட கதைகளில் சிறப்பாக உள்ளது. இவர் தவிர்க்க வேண்டியது இண்டீரியர் மோனாலாக் போன்ற முழுமையடையாத கதைகளையும், புராணக் கதைகளின் மீட்டுருவாக்கங்களையும். அவை எந்த தாக்கமும் இல்லாது கடந்து செல்கின்றன. மையக்கதாபாத்திரத்தின் மேல் அதிக Focus செய்வதும், எல்லாவற்றையும் சொல்லி விடாது சிறுகதை இடைவெளிகளைக் கதைகளில் ஏற்படுத்துவதும், அழுத்தமான கதைக்கருக்காக காத்திருப்பதும் மூர்த்தி செய்ய வேண்டியவை. எப்படியாயினும் முதல் தொகுப்பில் இருந்து பலபடிகள் ஏறி நிற்கும் தொகுப்பு இது. சிறுகதை எழுத்தாளருக்கு வளர்ச்சி என்பது எழுத்தில் அடிக்கடி நிகழக்கூடிய விசயமில்லை.
பிரதிக்கு:
வெற்றிமொழி வெளியீட்டகம் 97151 68794
முதல்பதிப்பு ஜூன் 2022
விலை ரூ. 150.