ஆசிரியர் குறிப்பு:
க்ரியா ராமகிருஷ்ணன் என்று அடையாளப் படுத்தப்பட்டவர். தமிழின் முன்னோடி பதிப்பாளர். ஜே.ஜே.சில குறிப்புகள், அந்நியன், காஃப்காவின் விசாரணை, குட்டி இளவரசன் போல் ஏராளமான உலகத்தரம் வாய்ந்த நூல்களைப் பதிப்பித்தவர். தமிழின் மிகச்சிறந்த எடிட்டர். தற்காலத் தமிழகராதி இவர் கடைசியாகத் தமிழர்களுக்கு விட்டுச்சென்றது. 2020ல் மரணமடைந்தார்.
ராமகிருஷ்ணன் ஒரு தொகுப்பு வெளியிடும் அளவிற்கு கதைகள் எழுதியிருப்பார் என்று நினைத்தே பார்த்ததில்லை. ஐந்து கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பில் கோணல்கள் சிறுகதைத் தொகுப்பில்(நான்கு ஆசிரியர்கள் எழுதிய தொகுப்பு) வெளிவந்த மூன்று கதைகளும் வந்திருக்கின்றன. எழுபதுக்கு முன் எழுதப்பட்டவை எல்லாக் கதைகளுமே. ஐம்பது வருடங்கள் கழித்துப் படிக்கையிலும் நேற்றுத் திருமணம் முடித்த பெண்ணின் கைமருதாணி போல் புதுக்கருக்கு கலையாமல் அப்படியே இருக்கின்றன.
நம்மைவிட வயதுகூடிய பெண்களுடன் இருக்கும் நட்பு என்பது, அனுபவித்தவர்கள் மட்டுமே உணரக்கூடியது. சிலநேரம் சிறுவனைப் போல், சிலநேரம் ராஜனைப் போல், சிலநேரம் எப்படியும் விட்டுத்தான் போகப்போகிறாய் என்ற கழிவிரக்கத்துடன் அடிக்கடி மாறும் வண்ணங்கள் கொண்ட உறவு. அவளிடம் சொல்லப் போகிறான் கதை 1966ல் வெளிவந்திருக்கிறது. முழுக்கவே ஒரு இருபத்தைந்து வயது ஆணின் கோணத்தில், அவன் உணர்வுகளை மட்டுமே சொல்லும் கதை. அந்தப் பெண் இதில் ஒரு வார்த்தைகூட நேரடி உரையாடல் செய்வதில்லை. அவள் வாசகரைப் பொறுத்தவரை, பெயரோ, முகமோ இல்லாதவள். இவனுடைய Self introspectionல் இடைவந்து போகிறவள். அவளிடம் இவன் ஒரே வரியைச் சொல்ல நினைப்பதுவே கதை. ஆனால் அதையும் Open ending ஆக விட்டுவிட்டார்.
கோணல்கள் சிறுகதையை ராமகிருஷ்ணன் கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானிடம் வெளிவருவதற்கு பன்னிரண்டு வருடங்கள் முன்னதாகவே எழுதியிருக்கிறார். இரண்டு ஹோமோசெக்ஸூவல்கள் உறவு கொள்கிறார்கள். ஆனால் அதுவல்ல கதை. அதில் ஒருவன் தன் குடும்பக்கதையை, குறிப்பாக அம்மாவின் கதையைச் சொல்கிறான். சராசரி வாழ்க்கையில் ஏன் இப்படி நிகழ்ந்தது என்பதை யாரும் விளக்குவதற்கில்லை. அம்மாவின் மனம் யாருக்குத் தெரிந்திருக்கும்? அந்தக் கதையின் கடைசியில் ஒரு டிவிஸ்டு இருக்கிறது. அம்மாவின் வெறுப்புக்குக் காரணம் புரிகிறது. அவளது கனமான கதைக்குப் பின்னரே, ஒரு Farewell நிகழ்வாக உறவு கொள்கிறார்கள். மிகவும் அழுத்தமான கதை. 1966ல் இது போன்ற கதையை எழுதியவர் சந்தேகத்துக்கிடமில்லாது மாஸ்டர் தான்.
ஐந்து கதைகளில் ஒன்றில் கூட ஒரு சம்பவம், ஒரு திருப்பம், ஒரு பிரச்சனை என்ற பாரம்பரியக் கதைசொல்லல் இல்லை. Homosexuality வருகிறது, Incest வருகிறது, Oedipus complex வருகிறது. மூன்று கதைகளில் கதைசொல்லிக்குப் பெயர்கூட இல்லை. அவர்களது உணர்வுகளை விஸ்தரித்துக் கதை நகர்கிறது. கோணல் தொகுப்பு தவிர கசடதபற, நடை ஆகிய பரிட்சார்த்த இதழ்களில் வந்த கதைகள்.
மழைக்காகக் காத்திருந்தவன் கதை மாடர்னிஸக்கதை. கணையாழியில் அசோகமித்திரன் ஆசிரியராக இருந்த போது திருப்பி அனுப்பப்பட்ட கதை.
காமம் அநேகமாக எல்லாக் கதைகளிலுமே முக்கிய பங்காற்றுகிறது. முதல் கதையில் நிறைவேறாத காமம். கோணல்கள் ஒருபாலினக் காமம். சங்கரராமின் நாட்குறிப்பு சிறுவன் பார்க்கநேரும் அப்பாவின் காமம். பின்கட்டு முறைதவறிய காமம். அதே போல் உளவியலும் நிறையக் கதைகளின் அடிநாதமாக இருக்கிறது. பின்கட்டு கதை ஒரு Classic example. ஒருவருக்கு காமம் ஒடுக்கப்படுவதும் ஒருவருக்கு வறட்சியும் இருக்கையில் சமூகத்தின் எல்லைக்கோடுகள் எப்படி தாண்டப்படுகின்றன என்பதைச் சொல்லும் கதை.
ராமகிருஷ்ணன் வெளிநாட்டு இலக்கியங்களில் ஆழ்ந்த பரிட்சயம் கொண்டவர். ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்றவர்களை நிச்சயம் வாசித்திருக்க வேண்டும். அதனால் வாசகர்களுக்குப் புரிய வேண்டும் என்று எதையுமே விளக்க முற்படாமல், நறுக்குத் தெறித்தாற் போன்று அளவான வார்த்தைகளோடு கதைகள் கச்சிதமாக முடிந்து விடுகின்றன. பதிப்புத்துறையில் முழுகவனம் செலுத்த கதைகள் எழுதுவதை நிறுத்தியிருக்க வேண்டும். தமிழுக்கு சோதனை இது தான், அரைத்த மாவை அரைப்பவர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பார்கள், ராமகிருஷ்ணன் போன்றவர்கள் எழுதாமல் நிறுத்திக் கொள்வார்கள்.
பிரதிக்கு:
க்ரியா 72999 05950
முதல்பதிப்பு பிப்ரவரி 2021
விலை ரூ.90.