நரை – மாஜிதா:
சொன்னதையே திருப்பிச் சொல்வது என்றாலும் பரவாயில்லை. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் எழுதுகையில் அவர்களை அறியாமலேயே தமிழின் புனைவெல்லையை விரிவுபடுத்துகிறார்கள். நம் கலாச்சாரத்தில் ஊறிய மனம் வேறு கலாச்சாரத்திற்குள் புகும்போது ஏற்படும் அதிர்ச்சிகள் தவிர்க்க முடியாதவை. அமெரிக்காவில் வசிக்கும் ஆப்பிரிக்கர்கள், ஜப்பானியர்கள், சீனர்கள், கொரியர்கள் இவற்றை நிறையவே தங்கள் கதைகளில் பதிவிட்டிருக்கிறார்கள். மாஜிதாவின் இந்தக் கதை லண்டனில் நடக்கும் கதை, இவர் இதுவரை எழுதியவற்றில் எனக்குப் பிடித்த கதைகளில் ஒன்று.
இந்தக் கதையில் பல உள்முடிச்சுகள். முதலாவதாக நரை. சில பெண்களுக்கு நரையை மறைக்க விருப்பமிருப்பதில்லை. இந்திரா காந்தியின் முன் வெள்ளைக்கற்றை முடிகள். அடுத்தது Visa என்பது பலநாடுகளில் இன்னும் முட்டாள்தனமான நடைமுறைகளால் கொடுக்கப்படுகிறது. கதையின் மையமே Visaவின் பின்னிருக்கும் ஏமாற்றுகளை வேறொரு தளத்தில், ஒருவேளை இப்படி இருந்தால் என்று பார்க்க வைக்கிறது. அடுத்ததாக நேப்பாளத்தின் சிதறல்கள். லண்டன் போன்ற மாநகரில் வசிப்பவர்கள் பலவிதமான கலாச்சாரங்களை அறிந்து கொள்கிறார்கள்.
அடுத்ததாக சட்டத்துறையில் பணியாற்றும் பெண். குறிப்பாக சலூனின் அலைபேசியில் நறுக்குத் தெரித்தாற்போல் பேசுவது. பெண்களால் மிக எளிதாக வேண்டியவர், வேண்டாதவர் என இருவிதமாகப் பேசமுடியும். கடைசியாக ஒரு காதல் கதை. இவை அனைத்துமே வெகு இயல்பாக இந்தக் சிறுகதை வடிவத்தில் அமர்ந்தூ கொள்வதே இந்தக் கதையின் அழகு. பாராட்டுகள் மாஜிதா.
தமயந்தியின் மகள் – பி.சத்யவதி- தெலுங்கிலிருந்து தமிழுக்கு கௌரி கிருபானந்தன்:
குழந்தைகளை விட்டுவிட்டு வேறொருவனுடன் ஓடிப் போகிற அம்மாவிற்கு இந்தியாவில் எப்போதும் ஒரே பெயர் தான். Cruel is She. Forsaken Merman poem இந்தக் கதையில் அழகாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு அதிக விவரமில்லாத பெண் குழந்தை, பல உளைச்சல்களை அனுபவித்து கடைசியில் திருமணம் செய்யப் போகும் நேரத்திலும் ஓடுகாலியின் மகள் என்ற பெயரைச் சுமப்பது வரை வெகு இயல்பாகச் சொல்லப்பட்ட கதை. அப்பாவின் பதில் எவ்வளவு Diplomatic ஆக இருக்கிறது? எதற்காகப் போயிருப்பாள்? இரண்டு பிள்ளைகள், அதிலும் பத்துவயது பெண் குழந்தையை விட்டுச் செல்லும் அளவிற்கு. அவளுக்கு மட்டுமே பதில் தெரிந்த கேள்வி. நல்ல மொழிபெயர்ப்பு. வித்தியாசமான கோணத்தில் சொல்லப்பட்ட கதை.