உடன் இருத்தல் – யுவன் சந்திரசேகர்:
ஒரு இழப்பு மொத்தமாகப் பாதிக்கையில், தோற்றமயக்கத்தை மனம் வலிய ஏற்றுக் கொள்கிறது. முழுக்கவே புலிகளைப் பற்றிய கதையில் அந்த சோகம் நீறு பூத்த நெருப்பாக கண்ணுக்குப் புலப்படாமல் பதுங்கியிருக்கிறது. தற்செயலாக சந்திக்கும் ஒருவர் தன் கடந்தகாலத்தைப் பகிர்வது Haruki Murakami கதைகளில் அடிக்கடி நடப்பது. வில்லியம்ஸிடம் ஆடியபாதத்தைக் காண்பது போல, எனக்கு முரகாமியை யுவன் மொழிநடையில் படித்த உணர்வு. கதைக்குள் கதையாக Fable சாயலில் ஒரு சம்பவம் வருகிறது. கண்கள் ரோட்டைப் பார்த்துக் கொண்டு, கைகள் கியரை மாற்றிக்கொண்டு, நாம் வேறெதுவோ நினைவுகளில் மூழ்குவது போல் யுவன்சங்கரால் அனிச்சையாகக் கதை எழுத முடியும் என்று யாரும் சொன்னால் நான் நம்புவேன்.
வல்லினம் இந்த இதழ் நாவல் சிறப்பிதழ், எனவே நாவல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பதிமூன்று நாவல்களைக் குறித்து விரிவான கட்டுரைகள் இதழில் இடம் பெற்றிருக்கின்றன. எல்லோரும் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்கள் இதில் பல இருக்கின்றன. இந்த இதழைத் தவறாது வாசித்துப் பாருங்கள். சிறுகதை யுவனுடையது மாத்திரமே.