ஆசிரியர் குறிப்பு:

இலங்கையில் வடபுலத்தில் அல்லைப்பிட்டி கிராமத்தில் பிறந்தவர். பல வருடங்களாகப் பிரான்ஸில் வசிக்கிறார். கொரில்லா என்ற நாவலின் மூலம் தமிழ் வாசகர்களின் கவனத்தைப் பெற்ற ஷோபாசக்தி, தொடர்ந்து நாவல்கள், சிறுகதைகள் எழுதி வருகிறார். விவாதங்கள், விமர்சனங்களுக்கு அதிகம் ஆளானவர். இது இவருடைய சமீபத்திய நாவல்.

இரண்டு பகுதிகள் கொண்ட நாவல். இரண்டில் எந்த பாகத்தையும் முதலில் படிக்கலாம். நூலின் வடிவமும் அதற்கேற்றாற்போல் அமைந்துள்ளது.
” இந்த உலகத்தில் ஒரே கதை தான் உள்ளது, அதைத்தான் ஆளும் பேரும் திரும்பத்திரும்பச் சொல்கிறார்கள்” என்பது நாவலின் ஒரு பாகத்தின் ஆரம்பத்தில் வருகிறது. இச்சா என்ற நாவல் வித்தியாசமான கதைக்களம். ஈழப்பிரச்சனையே கதை என்றாலும், பெல்ஜியத்தில் ஆலா யார் என்ற விசாரணை என்று, டான்பிரவுன் நாவல்களின் ஆரம்பத்துடன் தொடங்கி, ஷோபாசக்தியின் வழக்கமான மொழிநடை, பகடியுடன் தொடரும். இந்த நாவலில் ஆரம்பித்த இடத்திற்கே திரும்ப வந்து விட்டார் என்று தோன்றுகிறது. பாதிக்கப்பட்டவர்களை, வேடிக்கை பார்த்தவர்கள் இன்னும் எவ்வளவு காலம் இதையே எழுதுவீர்கள் என்று கேட்பதற்கில்லை. ஆனால் இலக்கிய வாசகனாக, ஷோபாசக்தி சொன்னதையே சொல்வது எதிர்பார்ப்பைப் பொய்யாக்குகிறது.

சொந்த நிலத்தில், சொந்த மக்களிடையே முறைகேடு செய்யும் ராணுவம் வேறொரு நிலத்தைத் தங்குமிடமாகக் கொள்ளும் போது, அத்துமீறல்கள் சர்வசாதாரணமாக நடக்கும். அதில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். உலகின் எந்த ராணுவமும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்திய அமைதிப்படையின் Excesses நாவலின் பெரும்பகுதியில் வருகின்றன. விடுதலைப்புலிகள் வலுக்கட்டாயமாக பிள்ளைகளைத் தூக்கிச்சென்று பயிற்சி அளிக்கிறார்கள். இதுவெல்லாம் இவர் மட்டுமல்ல, பலரும் ஏற்கனவே பதிந்தது. இந்த பாகம் ஷோபாசக்தியின் மொழிநடையும், பகடியும் தவிர்த்தால், ஏமாற்றம்.

இரண்டாம் பகுதியில் தான் ஷோபாஷக்தி தான் எப்படி ஒரு திறமைமிக்க எழுத்தாளர் என்பதை நிரூபிக்கிறார். குடும்பம் மொத்தத்தையும் போரில் கொடூரமாக இழந்தவன், அகதி வாழ்க்கை கிடைப்பதற்கே பிரம்மபிரயத்தனம் செய்தவன், அதன் பின் ஒரு சராசரி வாழ்க்கையை எப்படி வாழமுடியும்? water, water everywhere and not a drop to drink என்பதில் water வாழ்க்கை ஆகிப்போன உணர்வு. காதலின் அற்புதகீதம் தாம்பத்யத்தின் பாரம் தாங்காது அபஸ்வரமாக ஒலிக்கிறது. கதாபாத்திரத்தின் உள்ளே கூடுவிட்டுக்கூடு பாயக்கற்றுக்கொண்ட வாசகர்கள், அவனைத் தானாக உணர்ந்து
Judgemental ஆக நடப்பதை நிறுத்தி விடுகிறார்கள்.

ஜெபானந்தன் வித்தியாசமான பெயர். கடந்த காலம் அவனை மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவனாக்குகிறது. உயிர்வாழ வேண்டும் என்ற ஒரே உந்துதலில் கயமைகள், Betrayal எல்லாமே கணநேரம் யோசனையின்றி கடக்கப்பட்டு விடுகின்றன.
கடைசியில் அனைத்துப் போராட்டங்களுக்குப் பிறகு அதிகம் பிழியப்பட்ட கரும்புச்சக்கை போல் ஈயைத் தவிர சீண்டுவதற்கு யாருமில்லாது வாழ்க்கை முடியப்போகிறது. உமையாள் ஒரு அற்புதமான கதாபாத்திரம். அவளது உணர்வுகள் அதிகம் சொல்லப்படாமலேயே வாசகர்கள் அவளைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும்படி வடிக்கப்பட்ட கதாபாத்திம். சந்நிதியானே………! சின்னசின்ன கதாபாத்திரங்களுக்கும் தீர்க்கமான முகவடிவம் உண்டு இந்த நாவலில்.

Erotism எப்போது இலக்கியமாகிறது என்பதற்கு இந்தநாவலில் சில உதாரணங்களைக் காட்டலாம். பாலியல் வல்லுறவுக்குள்ளாகி மரணித்த அக்கா பலவருடங்களுக்குப் பிறகு கொடுங்கனவில் எப்படி வருகிறாள் என்பது பயங்கரம். யாருடைய தவறு இது? எதற்காக ஒரு இனமே, சகலத்தையும் இழந்து போராட்டமே
வாழ்க்கையாகக் கழிக்க வேண்டும்? நாவலின் தலைப்பு சொல்லும் சாந்தி எப்போது கிடைக்கும்? பதில்கள் இல்லாத கேள்விகள் காற்றுவெளியில் குறைகொண்ட ஆன்மாவைப்போல் சுற்றிக் கொண்டே இருக்கும்.

பிரதிக்கு:

கருப்புப்பிரதிகள் 94442 72500
முதல்பதிப்பு மே 2022
விலை ரூ.350.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s