ஆசிரியர் குறிப்பு:
கோவையில் மெல்லிசைக் குழுவையும், இசைப் பள்ளியையும் நடத்தி வருகிறார். மூன்று கவிதைத் தொகுப்புகள் ஒரு கட்டுரைத் தொகுப்பை இதற்கு முன் வெளியிட்டுள்ளார். இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு.
ஒவ்வொரு எழுத்தாளரும் அவர்களுக்கு தெரிந்த உலகத்தை நேர்மையாக எழுத முற்படுகையில், அவர்களை அறியாமலேயே ஒரு புதிய உலகத்தை வாசகர்களுக்கு கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு அனுபவமும் எழுத்தில் வரும் போது அது புதிய திறப்புகளைக் காட்டியே தீரும். ஜான் சுந்தரின் கதையுலகம் எளியவர்களின் உலகம்.
சில இடங்களை எடுத்து விட்டால் இந்தக் கதைகளை Perfect Young adult stories என்றும் சொல்லலாம். சிறுவர்களின் உலகம் தெளிவாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அநேகமான கதைகளில் சிறுவர்கள் வருகிறார்கள். பேய் வந்து கதவைத் தட்ட, சிறுவன் கேள்வி கேட்க, பேய் பதில் சொல்லும் விளையாட்டு, பாம்பை பயமின்றித் துரத்தும் சிறுவர்கள், அபூம்சக்கா போன்ற சிறுவர் உபயோகிக்கும் வார்த்தைகள், முழுக்க பெரியவர் வரும் கதையில் கூட கடைசியில் கைப்பையில் குழந்தை இருக்கிறது. ஏழைச் சிறுவர்களின் உலகம் எந்த வித பச்சாதாபத்தையும் கிளப்பிவிடும் நோக்கமில்லாமல் உள்ளது உள்ளபடி கதையாக வந்திருக்கிறது.
விதவையுடன் ரகசியத் தொடர்பில் இருப்பவன் Window என்று வரும் இடங்களிலும் Widow என்றே படிப்பான். அது ஆழ்மனம் நடத்தும் விளையாட்டு. இவரது எல்லாக் கதைகளிலும் பறவைகளும் விலங்குகளும் எப்படியாவது இடம் பிடித்து விடுகின்றன. மனச்சிதைவு அடைந்த வித்யாவைத் தவிர, (அவளுமே தெளிவான மனநிலையில் அன்பாகவே இருக்கிறாள்) மற்ற எல்லோருமே விலங்குகளுடன் பிரியமாகவே இருக்கிறார்கள்.
சாதாரணமாகவே சில பாடல்கள் சில முகங்களை நினைவுக்குக் கொண்டு வருகையில், இசைக்குழுவை நடத்துபவர் கதை எழுத வந்தால்…….. திரைப்பாடல்கள் கதைகள் முழுக்க இடையிடையே வந்து போகின்றன. தமிழன் போவோமா ஊர்கோலம் பாட்டைப் பாட தெலுங்குக்காரி அதையே தெலுங்கில் பாட….. பாட்டை விட பாடும் அந்த இடம் கவனத்தை ஈர்க்கிறது. பல பாடல்களைக் கதைகளில் சாமர்த்தியமாகப் பயன்படுத்தி இருக்கிறார்.
கின்னரப்பெட்டியில் பியானோ பெட்டியின் உயிர்துடிப்பை நம்மால் உணர முடிகிறது. சின்ன மலரக்காவின் சோகம், சிறுவனின் பார்வையில் சொல்லப்படுவதால் மெல்லிய தொனியில் சொல்லப்படுகிறது. மற்றும் பலரில் வரும் ராணி (சிலருக்கே பெயர் பொருத்தம் அமைந்து போகிறது) மறக்க முடியாத கதாபாத்திரம். தலைப்புக் கதை வன்மம் இல்லாத மனதை உடையவர் மட்டுமே எழுதக்கூடிய கதை. சொல்ல போனால் இவருடைய எந்தக் கதையிலும் கொடிய கதாபாத்திரம் என்று யாருமே இல்லை. சில கதைகளை இன்னும் எடிட் செய்திருக்கலாம். ஆனால் முதல் தொகுப்பு என்ற வகையில் மிகவும் திருத்தமாக, ஒரு புதிய உலகத்தைக் காட்டும் கதைகளாக வந்திருப்பதே பெரிய விஷயம். இவர் தொடர்ந்து எழுத வேண்டும். முதல் பதிப்பு பிப்ரவரி 2021ல் வெளிவந்திருக்கிறது. எழுத்தாளர் எம்.கோபால கிருஷ்ணன் மட்டும் நல்லதொரு விமர்சனத்தை இந்த நூலுக்குத் தந்திருக்கிறார். அதைத் தவிர வேறெதுவும் இருப்பதாக என் கண்ணில் படவில்லை. கடும் மௌனத்தினால் புதிய எழுத்தாளர்களை அடுத்து எழுதச்செய்யாமல் செய்வதில் நாம் கைதேர்ந்தவர்கள்.
பிரதிக்கு:
காலச்சுவடு 4652- 278525
முதல்பதிப்பு பிப்ரவரி 2021
விலை ரூ. 140.