ஆசிரியர் குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்டம் அண்டனூர் கிராமத்தில் பிறந்தவர். கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஏழு சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள், மூன்று புதினங்களை இதுவரை எழுதியுள்ளார். இது இவரது சமீபத்திய நாவல்.
சுப்பிரமணிய சிவா மற்றும் வ.உ.சிக்கு அளிக்கப்பட்ட அதிகபட்ச சிறைத்தண்டனை தீர்ப்பு நகலுடன் நாவல் தொடங்குகிறது. 1908ல் வ.உ.சி கைது செய்யப்படுகிறார். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலைக்கு வந்து போராடுகிறார்கள். அவர்களின் உணர்வு போராட்டம் பிரிட்டிஷாரை திருநெல்வேலி கலவரத்தில், துப்பாக்கிச்சூடு நடத்த வைக்கிறது. சிறுவன் உட்பட நால்வரைக் கொலைசெய்த குழுவிற்குத் தலைமை தாங்கியவர் பின்னாளில் வாஞ்சிநாதனால் சுட்டுக்கொல்லப்பட்ட அதே ஆஷ் தான். Period Novel எழுதுவது இந்தியாவில் மிகவும் சிரமமானது. நூறு வருடங்களுக்கு முன்பான, மக்களின் இயல்பான எழுச்சியை நினைவுறுத்தும் எதுவும் திருநெல்வேலியில் இருப்பதாகத் தெரியவில்லை.
பாரிஸ்டர் ரிச்மண்ட் நீதிபதி சங்கரன் நாயரை துளியும் மதிக்கவில்லை என்று நாவலில் குறிப்பிட்ட இடம் முக்கியமானது. நாம் தான் இங்கே ஜாதிரீதியாக உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று சொல்லிக் கொண்டோம். ஆங்கிலேயர்களுக்கு இந்தியர் எல்லோருமே நாய்கள் தான். Indian Dogs. நேரத்திற்கேற்றாற்போல் ஒவ்வொருவரிடம் நெருக்கம் காட்டி அடுத்தவரிடம் நிரந்தரப் பகையை உண்டாக்குவதே, காலனி ஆதிக்கம் செய்த எல்லா நாடுகளிலும் அவர்களது அணுகுமுறை. பிரித்தாளும் சூழ்ச்சி.
சுப்பிரமணியம் சிவா, வ.உ.சி இருவருக்கும் தேசதுரோக வழக்குத் தீர்ப்பில் இருந்து ஆரம்பித்து மேல்முறையீட்டுத் தீர்ப்பில் நாவல் முடிவடைகிறது. ஏராளமான தகவல்களை இவர் சிரமப்பட்டு இந்த நாவல் எழுதத் தேடியிருந்திருக்க வேண்டும். பிணப் பரிசோதனை செய்யப்பட்ட உடல் குறித்த Detailing, வ.உ.சியின் சகோதரர் மனநலம் பாதிக்கப்பட்டது என்பது போன்ற பல தகவல்கள் நாவலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ராமையாவும், சகஜானந்தாவும் அவர்கள் உரையாட.ல்கள் மூலம் பறவைக்கோணத்தில் அந்தக்கால சமூகத்தைப் பார்க்கத் தருகிறார்கள். சாதிப்பிரிவினையின் மூலம் நாம் ஒன்றாக பொது எதிரியை எதிர்க்க முடியாமலும், அவர்கள் மதத்திற்கு நம்மவர்கள் ஏராளமாக மாறவும் வழிவகுத்திருக்கிறோம். இரண்டுமே நாவலில் விளக்கமாக வருகின்றன. Data குறைவாகக் கிடைக்கும் நாட்டில் இது போன்ற நாவலை எழுதுவது என்பதே சவால் தான். இவை எல்லாம் நாவலின் Merits. Demerits என்பதைச் சொல்லப் போனால், அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்று எழுத்தாளர் கதையில் இடைவருவது, சாண்டில்ய வர்ணனைகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டியவை. அதே போல் சில விஷயங்கள் எழுதுமுன் சரிபார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ஆண்டான் கவிராயரை ‘பிராமண கோத்திரம் ‘ என்கிறார்கள். அப்படி ஒன்று கிடையவே கிடையாது.
எடிட்டர் ஒருவர் இல்லாதது தமிழ்நாவல்களுக்கு எவ்வளவு பேரிழப்பு என்பதற்கு இவை உதாணம். எடிட்டிங்கில் எளிதாக சரிசெய்யப்பட்டிருப்பவை இவை எல்லாமே. கார்த்திக் புகழேந்தி இதே நிகழ்வை மையமாக வைத்து புனைவாக ஒரு சிறுகதை சமீபத்தில் எழுதியிருந்தார். அண்டனூர் சுரா புனைவை விட வரலாற்றுத் தகவல்கள் பக்கம் அதிகம் சாய்ந்திருக்கிறார். தொடர்ச்சியாக இது போன்ற Period நாவல்கள் தமிழில் வரவேண்டும்.
பிரதிக்கு:
சந்தியா பதிப்பகம் 044- 24896979
முதல்பதிப்பு ஏப்ரல் 2022
விலை ரூ. 230.