எம்.எஸ். மூர்த்தி :
பெங்களூரில் பிறந்தவர். ஓவியக்கலை, சிற்பக்கலையில் டிப்ளமோ கல்வியும், உளவியலில் பட்டமும் பெற்றவர். பத்திரிகையில் கலை இயக்குனராக, பன்னாட்டுக் கலைகண்காட்சிகளில் பங்களிப்பாளராக இருந்தவர். முனைவர் பட்டம் பெற்றவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இந்த நூல் இவரது முதல்நாடகம்.
கே.நல்லதம்பி:
மைசூரில் பிறந்தவர். தனியார் கம்பெனியில் உயர்பதவியில் இருந்தவர். தமிழில் இருந்து கன்னடத்துக்கு, கன்னடத்தில் இருந்து தமிழுக்குப் பல நல்ல படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்து இருமாநில மக்களின் அபிமானத்தையும் பெற்றவர்.
ஐந்து காட்சிகளே கொண்ட சிறிய நாடகம் இது. முதல் காட்சியில் ராகுல் விளையாட்டுக்கு நடுவில் அப்பா என்ற வார்த்தையைக் கேட்டதும் அவர் நினைவு வந்து வீட்டுக்குள் ஓடுவது. அரசகுமாரன் என்றாலும், அப்பா இல்லாத குழந்தை தன்னை மற்றவர்களை விடத் தாழ்வாகவே எண்ணிக்கொள்ளும். உலகிற்கு ஞானத்தைப் போதிக்க சென்றவரின் மகன் நான் என்பது குழந்தைக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இரண்டாவது காட்சி தாயும், மகனும் உரையாடுவது. ராகுலைத் தேற்றி விடலாம், தன் துயரை எப்படி தேற்றுவது. மறக்க முடிந்தால் அல்லவா பின்னர் மன்னிப்பதற்கு.
மூன்றாவது காட்சியில் ஒரு டிவிஸ்ட் இருக்கிறது. ஒருவேளை சித்தார்த்தன், கடைசியாக உறங்கும் மனைவியிடமும், மகனிடமும் விடைபெற்றுச் செல்ல அவர்கள் அறைக்குப் போயிருந்தால்………….. ஒருவேளை அங்கே யசோதரா உறங்காமல் விழித்திருந்தால்………….
நான்காவது காட்சி இறந்தவன் வீட்டில் இருந்து இதுவரை சாவைப் பார்க்காத வீட்டில் கடுகு வாங்கிவரச் சென்ற கதை. இறப்பு மற்றவர்களுக்கு செய்தி ஆனால் நெருங்கியவர்களுக்கு அது வெற்றிடத்தை ஏற்படுத்தும். இறப்பு எல்லோருக்கும் உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் அகால மரணங்கள் ஆறாக்காயத்தை ஏற்படுத்தும்.
ஐந்தாவது ஞானம் பெற்ற புத்தர் வீட்டுவாசலுக்கு வந்தும் யசோதரை சந்திக்காதது. சீதை, திரௌபதி, யசோதரை, குந்தி, ஊர்மிளா போன்றவர்கள் நாம் பார்க்கும் பார்வைக்கு ஏற்ப மாறிக் கொள்வார்கள். ஆண் பார்வை வேறு, பெண் பார்வை வேறு. திரௌபதி அர்ச்சுனனை அதிகம் காதலித்தாள், அதற்கேற்ப அர்ச்சுனன் நடந்து கொண்டானா? யசோதரையும் கடைசியில் புத்தத்துறவியானதாக வரலாறு சொல்கிறது. எதற்காக என்று கேள்வி கேட்டுக்கொண்டால் அங்கே பல கதைகள் உருவாகும்.
பாடலில் தொடங்கிப் பாடலிலேயே நாடகம் முடிகிறது. அந்த இரவில் யசோதரை உறங்கவில்லை என்று எடுத்துக் கொண்டால், எல்லாமே தலைகீழாக மாறிவிடுகிறது. அந்த Assumptionல் எழுதப்பட்ட கதை இது. சிக்கனமாக வார்த்தைகளை உபயோகித்து மூர்த்தி இந்த நாடகத்தை வலிமையானதாக மாற்றியிருக்கிறார். நல்லதம்பி மூர்த்திக்குள் புகுந்து வெளிவந்திருக்கிறார்.
பிரதிக்கு:
பூமி, பெங்களூர் 98441 57982
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ.50.