விஜி என்ற விஜயாவை அவன் சந்தித்ததே ஒரு விபத்து. இருவரும் எட்டாவது படித்துக் கொண்டிருக்கக் கூடும். காலனியில் மார்கழி மாதத்தில் திருப்பாவை படித்து, திருப்பாவையும், பாவையும் பள்ளி எழுச்சியும் என்ற இரண்டு புத்தகங்கள் இலவசமாகத் தருகிறார்கள் என்றே போனான் அவன்.
விஜி இனம்புரியாத சோகம் ததும்பிய முகம். எப்போதும் கடவுள் வாழ்த்துக்கு அவள் தான். அந்த நேரத்தில் மட்டும் அவள் முகம் ஜெனிலியா போல் மாறிவிடும். அன்று அவன் நுழைந்த போது அவள் மட்டும் தான். அவன் அவளைக் கண்டு கொள்ளவில்லை. பேசப்போனால் பெண்பிள்ளைகள் தலையை திருப்பிக் கொள்வது ஏற்கனவே அவனுக்குத் தெரியும். அவன் கையிலிருந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தான். வீரபாண்டியன் மனைவி. புக் உன்னுதா? படிச்சுட்டு தரியா? சரி. கையில குடுக்காத. இங்கே வச்சிடு. உள்ள எதுவும் இருக்கக்கூடாது. நல்லா இருந்தது. ஆனால் ஜனநாதனை எனக்கு பிடிக்கலை. வீரசேகரன் பாவம். பொன்னியின் செல்வன் வேணுமா. இல்லை படித்து விட்டேன். கடல்புறா. படிச்சாச்சு. பரவாயில்லையே! பார்த்தால் விளையாட்டுப்பையன் மாதிரி இருக்கே. உனக்கு யவனராணி வேணுமா? சரி. இங்கேயே வை.
நீ விஷ்ணுசகஸ்ரநாமம் நல்லா சொல்ற. அப்படியா சின்ன வயசிலேயிருந்து சொல்லி பழக்கம். அவன் MS குரல் தேயும் வரை கேட்டான். அடுத்தமுறை நான் சொல்லட்டுமா என்றான். நீ தெரியாதுன்னு சொன்ன. இப்பத்தெரியும். சரி சொல்லு. கடகடவென மனனம் செய்ததை ஒப்பித்தான். விஜி முகம் மாறியதை அவள் முகத்தைத் திருப்பும் வரை அவன் கவனிக்கவில்லை. மறுநாள் யவனராணி அவன் மேசையில். படிச்சியா. பதில் இல்லை. அதன் பிறகு எப்போதும் விஜி பேசவில்லை. விஷ்ணுசகஸ்ரநாமம் சொன்னால் என்னவாகும்?
சாந்தாகாரம் புஜகசயநம் பத்மநாபம் சுரேசம்
விச்வாதாரம் ககந ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீகாந்தம் கமலநயநம் ……..