ஆசிரியர் குறிப்பு :
சிங்கப்பூரில் வசிக்கிறார். ஒரு கட்டுரைத் தொகுப்பு, ஒரு சிறுகதைத் தொகுப்பு, இரண்டு கவிதைத் தொகுப்புகள், ஒரு நாவல் முதலியன இவர் ஏற்கனவே எழுதியவை. இது இவரது இரண்டாவது நாவல்.
ஆதவனின் முதலில் இரவு வரும் ஒரு அற்புதமான கதை. மணமுடித்து, குழந்தையும் பெற்றுக் கொண்ட ராஜாராமன் அம்மாவிடம் மீண்டும் சரணாகதி அடைவது.
இன்னொரு பெண், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அம்மாவிடமிருந்து ஒரு சிறிய விலக்கத்தையேனும் கொண்டு வந்து விடுகிறாள். அவள் முன்னால் விச்ராந்தியாக அம்மாவைக் கட்டிப்பிடிக்க முடியாது. ஏழு ஆண்பிள்ளைகள் பெற்று எண்பத்தேழு வயதில் தனியாக யாரோ முகம் தெரியாத ஒருவரது கருணையில் வாழும் அம்மாவைப் பற்றிய கதை இது. அம்மாவின் கருப்பை, பணம் செலுத்தாத வாடகை வீடு.
வாசுகி ஒரு நுட்பமான கதாபாத்திரம். சிறுவயதில் ஒருவனைக் காதலித்து இன்னொருவனை வலுக்கட்டாயமாக மணக்க நேரும்போதும் சரி, பின்னர் காதலன் வந்து தாலியைக் கழட்டி எறிந்து என்னோடு வா என்னும் போது உறுதியாக மறுப்பதிலும் சரி, திருமணத்திற்குப் பின்னும் காதலன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதை அனுமதிப்பதும், அதைத் தாண்டாமல் பார்த்துக் கொள்வதும் (Give back to Caesar what is Caesar’s and to God what is God’s.), சராசரிக்கு குறைவான Sexual appetite கொண்ட கணவனுக்கு ஏழு குழந்தைகளைப் பெறுவதும், பிள்ளைகளுக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்க, ஆரம்பத்தில் இருந்தே அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதும், கடைசி காலத்தில் காதலனைப் பற்றி நினைக்காமல் கணவனைப் பற்றி நினைப்பதும் என்று நுட்பமான கதாபாத்திரம்.
முருகேசு கிராணிக்கு, வாசுகி அவளது காதலனுடன் உறவு வைத்துக் கொண்டிருந்தாலும் ஒன்றும் செய்திருக்க முடியாது. ஒற்றை வருமானத்தில், ஏழுபிள்ளைகளை கரை சேர்த்தது தான் அவரது வாழ்க்கையில் அதிகபட்ச சாதனை. ஆறு பிள்ளைகளும் அடுத்தவர் அம்மாவைப்
பார்த்துக் கொள்வார்கள் என்று அவர்கள் வாழ்க்கையை வாழப் போய் விட்டனர். ஹென்றி எலியைக் கொல்ல விரட்டிப்பின் அதை வீட்டுக்கு அழைத்து உணவு கொடுப்பது, வாய் திறந்து பேசாத நளினாகுமாரி செருப்பால் அடித்து அத்தனையும் பேசுவது, தெரிந்தே மூழ்கிக் கொண்டிருக்கும் ராஜா என்று சின்ன கதாபாத்திரங்களும் மிகத்தெளிவாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.
கதை என்று பெரிதாக எதுவும் இல்லை இந்த நாவலில். பல கதாபாத்திரங்கள் வாயிலாக ஒரு வாழ்க்கை கண் முன் விரிகிறது. மகன்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையை ஒரு அத்தியாயம் செலவழித்துச் சொல்லியிருக்க
வேண்டியதில்லை. பார்க்கப் போனால் எல்லாமே ஒரே வாழ்க்கை தான். நளினா குமாரி, ராஜாவை மீட்க முயற்சிக்காதது, ஹென்றி தன்னை சரி என்று எண்ணிக் கொள்வது, சிட்டுக்குருவி அத்தியாயம் என்று அதிகம் விளக்கப்படாமல் வாசகர்கள் நிரப்பிக் கொள்ளும் வகையில் எழுதப்பட்ட நாவல்.
வசந்தகுமார், கரிகாலன் போன்று பலர் புத்தகத்தைக் கொண்டு வர சிந்தும் உழைப்பு எல்லோருக்கும் தெரிந்ததே. சிலர் கதை வந்ததும் நேராக அச்சுக்கு அனுப்பி விடுவார்கள் போலிருக்கிறது. நாவல் முழுக்க தனக்கு ஏழு ஆண்பிள்ளைகள் என்று வாசுகி சொல்கிறாள், ஆனால் இருபத்தி நான்காம் பக்கத்தில், ராஜா மூத்த அண்ணனுக்கும், அக்காவுக்கும் திருமணம் ஆகிவிட்டது என்கிறான். எங்கிருந்து முளைத்தார் அக்கா? அச்சுக்குமுன் யாரையேனும் ஒருதடவையாவது படிக்கச் சொல்லுவது பதிப்பாளரின் கடமை இல்லையா?
பிரதிக்கு:
உயிர்மை பதிப்பகம் 44- 48586727
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ. 160.