ஆசிரியர் குறிப்பு:
மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தின் அட்டன் டிக்கோயா பிரதேசத்தில் சாஞ்சிமலைத் தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பத்திரிகையாளராக, எழுத்தாளராக செயல்படும் இவரது முதல் கவிதை நூல் கால்பட்டு உடைந்தது வானம். இது இரண்டாவது நூல்.
மலையகத்தின் வாழ்க்கை பல கவிதைகளில் கலக்கிறது. மார்பில் கசியும் தாய்ப்பாலும், வியர்வையும் தேவியைச் சேர்த்து நனைக்க குழந்தையைக் கைவிட்டு வாழ்வாரத்திற்காக தேயிலை மலை ஏறுகிறாள். தாத்தாவின் கரிக்கோச்சி கதைகள் நினைவில் பயணிக்கிறது. கழுவியும் கழுவாமலும் தேயிலை மலைக்கு அரை அம்மணத்துடன் ஓடுகிறாள் ஒருத்தி. பாண்டியம்மாவின் இரத்தத்தைத் தோட்ட கம்பெனிகள் குடித்தது போக மீதி இருப்பதை அட்டை குடிக்கிறது. சாஞ்சிமலைத் தோட்டத்தில் பங்குனியில் பறையடித்து காமன் ஆட்டம் ஆடுகிறார்கள். 1000 ரூபாய் கூலி உட்பட காற்றில் கரைந்த பல வாக்குறுதிகளை வெற்றிடத்தில் தேடிக் கொண்டிருக்கிறார்கள் தேயிலைத் தொழிலாளிகள். ஈழத்து இலக்கியமே அதற்குரிய போதுமான கவனத்தைப் பெறவில்லை என்பது என் கருத்து. அதிலும் மலையக வாழ்க்கை இலக்கியத்தில் இன்னும் அதிகமாகப் பதிவிடப் படவேண்டும்.
எஸ்தரின் கவிதைகளில் காதலும், காமமும் நன்றாக வந்திருக்கின்றன. மனத்திற்கு ஆயிரம் கேலன் லிட்டர் கொள்ளளவு என்றால் உடலுக்கு பத்து மில்லி கொள்ளளவு.
” இரவை எவருமே அருந்தி முடிந்ததில்லை
அது ஒரு கோப்பை தேநீராகினால் என்ன?
ஒருக்கோப்பை திராட்டை ரசமாகினால் என்ன”
” என் பெரும் காட்டின் தாகம் தீர்க்க
முதல் காடுகளின் பாடலோடும்
ஆலாபனைகளோடும் விடியலில்
என் வீட்டுக்கதவைத் தட்டு”
” நீ என்பது
நீலத்திமிங்கலத்தின் ஆறாப்பசி
நானோ தாகம் அடங்கிப் படரும்
நீலப்பெருங்கடல்”
” அலை மோதும் சபலங்களை
ஒரு வாய் தண்ணீரெனக்
கொப்பளித்து துப்புகிறேன்
நீயோவெனில்
தொண்டையில் சிக்கிய
துடித்த முள்ளென நிற்கிறாய்”
சமகால அரசியலும் பல கவிதைகளில் வந்து போகிறது.
” அவனுடைய போர் முற்றுப்பெற்றது
போரின் எளிய நீதி மட்டும்
முற்றுப்பெறவில்லை”
” காலமெல்லாம் நாடற்றவரின்
துயர வரலாறு
காற்றில் கரி.துண்டால்தான்
எழுதப்பட்டது “
” நாடற்றவனின் நிலமற்றவனின்
நிறம் அற்றவனின் தோட்டக்காட்டான்
கள்ளத்தோணி என்ற கருத்தியலாலும்
காரசாரமாக உழைப்பு சுரண்டப்பட்டவனின்
ஆயிரம் காலத்துக் கதறல்
கேட்டுக் கொண்டேயிருக்கின்றது”
இவரே முன்னுரையில் கூறியது போல, கண்ணெதிரே தெறிக்கும் வாழ்வை, விவிலியச் சொற்கள் கலந்து எழுதப்பட்ட கவிதைகள் இவை. பெருவெடிப்பு மலைகள் ஏறிஏறி வந்ததாய் இருக்கலாம். ஏக்கம், தன்னிரக்கம், நிர்க்கதி எல்லாவற்றையும் தாண்டி ஒரு புன்னகைப் பூவாய் நம்பிக்கை ஒளி அங்கங்கே வந்து போகிறது. பெண்களுக்கு ஆண்களும், ஆண்களுக்குப் பெண்களும் இல்லாவிட்டால் கவிதை என்ற ஒன்றைக் கண்டே பிடித்திருக்க வாய்ப்பில்லை இல்லையா?
பிரதிக்கு:
போதிவனம் 98414 50437
முதல்பதிப்பு ஆகஸ்ட் 2021
விலை ரூ. 100.