ட்டி.டி. ராமகிருஷ்ணன்:
ரயில்வேயில் பணிபுரிந்து விருப்புஓய்வு பெற்றவர். தன்னுடைய நாற்பத்தி இரண்டாவது வயதில் முதலாவதாக எழுதத் தொடங்கிய ராமகிருஷ்ணனின் ஆறு நாவல்கள் இதுவரை மலையாளத்தில் வெளிவந்துள்ளன. இது இவரது முதல் நாவல்.
குறிஞ்சிவேலன்:
தமிழ்நாடு அரசுப்பணியில் இருந்தவர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்தில் இயங்கி வருகிறார். நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். ராமகிருஷ்ணனின் முந்தைய ஐந்துநாவல்களையும், தற்போது ஆறாவது நாவலையும் மொழிபெயர்த்து வருபவர்.
ஆல்ஃபா பாதி Speculative fiction மறுபாதி Dystopian Fiction இரண்டும் சேர்ந்த நாவல்.
மானுடவியல் பேராசிரியர் ஒருவர், பன்னிரண்டு சீடர்களுடன், ஆல்ஃபா என்ற ஆளில்லாத தீவிற்கு சென்று, இருபத்தைந்து வருடங்கள், வெளியுலகத் தொடர்பு/தொந்தரவு இன்றி வாழப்போகும் வாழ்க்கையை ஆராய்ச்சிக்கு உட்படுத்தும் நோக்கத்தில் செல்வதுடன் நாவல் ஆரம்பிக்கிறது.
முதலாவதாகத் தனித்திறமைகள். தீவில் யாருமே அவர்களது தனித்திறமையைப் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. ஓவியன், கவிஞன், மருத்துவர், வரலாற்றுப் பேராசிரியன் என்று பதிமூன்று அறிவுஜீவிகள் அத்தனைகாலம் கற்ற அறிவைத் துறக்கிறார்கள். பெயர், பட்டங்களைத் துறக்கிறார்கள். இவற்றை எல்லாம் துறப்பதென்பது ஈகோவைக் கைவிடுதல், கும்பலில் கலத்தல், சுயத்தை இழத்தல்……..
அடுத்து மொழியை உபயோகிக்கக்கூடாது என்ற நிபந்தனை. எவ்வளவு சிரமமான மொழியாக இருந்தாலும், அதை உபயோகப்படுத்துபவருடன் தொடர்ந்த சம்பாஷணையில் இருக்கையில் கற்றுக் கொள்ள முடியும். மொழியை அழகாகப் பேசத் தெரிந்தவர்கள், தங்களுக்குத் தெரியாத விஷயங்களையும் அழகாகப் பேசி சமாளிப்பதைப் பார்த்திருக்கிறோம். மொழியை உபயோகப்படுத்தக் கூடாது என்னும் போது, பேசத் தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு அழிந்து விடுகிறது.
அடுத்ததாக, சமூகக் கட்டுப்பாடுகள், நம்பிக்கைகள், மதவழிபாடுகளைத் தகர்த்தல். குழுவின் எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் உறவுகொள்ளலாம், யாருக்கும் எந்த ஆணோ அல்லது பெண்ணோ தனியுடமையல்ல என்னும் போது பாலியல் சுதந்திரம் அடைந்த சமூகம் ஒன்று அங்கே உருவாக ஏதுவாகிறது.
மேலே கூறியவை எல்லாமே நம்பிக்கைகள், ஆனால் நடந்தவைகள்………… முதலில் பலம் பொருந்தியவன் மற்றவர்களை விரட்டிவிட்டு
விரும்பிய பெண்ணுடன் உறவு கொள்கிறான். பெண்கள் விருப்பமில்லாவிட்டாலும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிறார்கள். பாலியல் சுதந்திரம் இருந்தாலும், எல்லோருடனும் உறவு கொண்டாலும், ஒருத்திக்கு ஒருவனை மட்டும் பிடித்திருப்பது எதனால்? ஊர்மிளா தன் முதல் குழந்தை புரொபசர் மூலம் பெறவேண்டும் என்று விரும்புவது அவரே ஏற்படுத்திய சட்டத்திற்குப் புறம்பானது இல்லையா? தங்களிடமிருந்து விலக நினைப்பவர்களைக் கொல்வதும், தனித்து அலைய வைப்பதும் ஆதிமனிதன் செய்த அதே வன்முறை. எந்தவித கல்வியறிவு, பண்பாடு இல்லாத புதிய தலைமுறை தன்னைப் பெற்றவளையே பாலியல் பலாத்காரம் செய்வது ஆராய்ச்சியின் வெற்றியா? தோல்வியா? நாற்பதுக்கும் மேற்பட்ட, இவர்களது காமத்தில் உருவாகிய அந்த இளைய தலைமுறையின் எதிர்காலம் என்ன?
கட்டுப்பாடு மிகுந்த ஒரு சமூகத்தில் இருந்து கட்டுப்பாடில்லாத ஒரு சமூகம் என்பது எந்த அளவிற்கு உண்மை? இங்கே இந்திராகாந்தி அவசரநிலையைக் கொண்டுவந்தால், அங்கே ஹரி அவனது சட்டத்தைச் சொல்கிறான். பெண்களுக்குத் தொடர் கர்ப்பத்தினால் உடல் தொய்ந்து போகிறது. இருபத்தைந்து வருடங்கள், முப்பதுகளில் இருப்பவர்கள் தியாகம் செய்வதற்கு எந்த ஒரு ஆராய்ச்சியும் Worth ஆனது தானா!
இந்த நாவல் எந்த ஒரு விடையையும் அளிக்கவில்லை. ஒரு Experiment தோல்வி அடைகிறது. அந்த வகையில் இந்த நாவல் ஒரு Warning. ஆழ்மனதில் எல்லா மனிதனும்,
கோபம், காமம், விரகம், பொறாமை, ஏமாற்றுதல், வன்முறை போன்ற கயமைகள் நிறைந்த மிருகம் தான். Louise Philippe உடையில் நவநாகரீகமாக நாம் ஒருவரை ஒருவர் கடக்கையில், இதில் எதையும் வெளிப்படுத்தாது மரியாதைப் புன்னகையுடன் கடக்கிறோம்.
ராமகிருஷ்ணனின் முதல் நாவல் இது என்பதற்கு நம்புதே சிரமமாகும் வகையில் நுட்பமான நாவலிது. விவாதங்களில் தத்துவார்த்தம் நிரம்பி வழிகிறது. முதல் நாவலிலேயே அசல் வரலாற்று மாந்தருடன், கற்பனைப் பாத்திரங்களைக் கலக்கும் உத்தியைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார். இப்போது இந்த நாவலை எழுதி இருந்தால் இன்னும் விரித்து எழுதியிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. அரிசியில் மட்டுமல்ல, ராமகிருஷ்ணனின் ஒவ்வொரு மலையாளநூலிற்கும் அடியில் குறிஞ்சிவேலனின் பெயர் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. செறிவான மொழிபெயர்ப்பு.
பிரதிக்கு:
சொற்கள் 95666 51567
முதல்பதிப்பு ஏப்ரல் 2022
விலை ரூ. 150