சிகா உனிக்வே:
நைஜீரிய எழுத்தாளர். இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நைஜீரிய அரசின் இலக்கிய விருதைப் பெற்றவர். மேன் புக்கர் நடுவர் குழுவில் இருந்தவர்.
பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவரது இந்த நூல் முதலில் டச்சு மொழியில் எழுதப்பட்டு, பின் ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டது.
மாயா:
பல்லூடக வடிவமைப்பாளர். வரலாற்றுப் புனைவுகளில் நாட்டம் கொண்டவர். இணைய இதழ்களில், மலேசிய நாளிதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
கடாரம் என்ற வரலாற்றுப்புதினம் உட்பட பல நூல்களை எழுதியவர்.
சிஸி, பட்டப்படிப்பு முடித்து இரண்டு வருடமாகியும் வேலை கிடைக்கவில்லை. வீட்டின் வறுமை, அப்பாவைப் போலவே தேங்கி நிற்கப்போகும் காதலன் பீட்டர் என்ற இந்த வாழ்க்கையில் இருந்து அவள் தப்பித்தே ஆக வேண்டும். அமாவின் வளர்ப்புத்தந்தை ஒரு பாதிரி. சிறுவயது முதலே அவளை பாலியல் வல்லுறவு செய்பவன். அவனை நம்பிய அமாவின் தாயின் கண்கள் வன்கொடுமையைப் பார்க்காது மூடிக்கொண்டிருக்கின்றன. வீட்டை விட்டு வெளியேறி சித்தி வீட்டுக்குச் சென்ற அமா அந்த வாழ்விலிருந்து தப்பிக்க நினைக்கிறாள். எஃபே பதினான்கு வயதில் ஏமாந்து பெற்ற பிள்ளையை வளர்க்க, ஜாய்ஸ் டாக்டராகும் கனவு, குடும்பம் மொத்தமும் படுகொலைசெய்யப்பட்டு, காதலனால் ஏமாற்றப்பட்டு உடைகிறது. இவர்கள் நால்வரையும் விதி, பெல்ஜியத்தில் சிவப்புவிளக்கு விடுதி ஒன்றில் இணைக்கிறது.
சிகா பெல்ஜியத்தில் வசித்தவர். நைஜீரியாவில் இருந்து பெண்கள் விருப்பப்பட்டோ, ஏமாற்றப்பட்டோ பெல்ஜியம் மற்றும் பல ஐரோப்ப நாடுகளுக்கு அனுப்பப்படுவது தொடர்கதை. கறுத்த உடம்பின் மீது வெள்ளையருக்கு இருக்கும் மோகம், தொழிலைத் தொடர்ந்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய வழியில்லாத பெண்கள் ஆதித்தொழிலுக்குப் போய்விடுகிறார்கள். சிகா பெல்ஜியத்தில் இருந்த போது ஒரே நாட்டினர் என்ற நெருக்கத்தை உபயோகித்து பல விலைமாதரின் அனுபவங்களை சேகரித்து இந்த நாவலுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்.
நான்கு பெண்களில் யாருடைய கதை பரிதாபமானது என்று சொல்வது கடினம். பலர் சிஸியை சொல்லக்கூடும். ஆனால் எதற்கு செல்கிறோம் என்று தெரியாமலேயே வந்தவள் ஜாய்ஸ் மட்டும் தான். கண்முன் தாய் பலாத்காரம் செய்யப்பட்டு, குடும்பம் மொத்தமும் கொல்லப்பட்டு, பதின்வயதில் படைவீரர்களால் தொடர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி, அதன் பின் காதல் வயப்படுவது என்பது அதிசயமே. அவனாலும் ஏமாற்றப்பட்டு, ஆயா வேலை என்று அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் தொழிலுக்கு வற்புறத்தப்படுவது என்று
Cursed girlhood.
சிஸியே மையக்கதாபாத்திரம். அவளுடைய கதை அடுத்தடுத்த அத்தியாயங்களில் தொடர்ந்தும், மற்ற மூவரின் கதையும் இடையிடையேயும் சொல்லப்படுகின்றன. கதைகள் முன்னும்பின்னும் சிதறல்களாகச் சொல்லப்பட்ட போதும் நால்வர் குறித்தும் திருத்தமான வடிவம் கிடைக்கிறது. அதிகம் சொல்லப்படாத கதாபாத்திரம் கதையின் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் யுத்தி கையாளப்பட்டிருக்கிறது. நைஜீரியாவில் பெண்களின் உடல் நுகர்பொருள் போல் கையாளப்படுவது சொல்லப்படுகிறது. கதையின் பெரும்பகுதி பெல்ஜியம் சிவப்புவிளக்குப் பகுதி என்பதால் நாவலில் Profanity மற்றும் sexual exploitationகளுக்கு குறைவே இல்லை. மனைவியிடம் செய்ய முடியாத செயல்களை இவர்களிடம் செய்கிறார்கள். Human trafficking என்பது எவ்வளவு பலமான சங்கிலி என்பதைச் சொல்லும் நாவலே இது.
சொந்த நாட்டை விட்டு வந்து, சொந்தப் பெயரை இழந்து, ஆவணங்களை இழந்து, பாலியல் அடிமையாக வாழும் வாழ்க்கையில் இந்தப் பெண்கள் சின்னஞ்சிறு விஷயங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். தங்களுக்குள் ஒரு சகோதரத்துவத்தை உருவாக்கி ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். பக்கத்து வீட்டுப்பாட்டி எப்படி இறந்தாள் என்பது கூடத்தெரியாமல் அவளுக்கு சாந்திச்சடங்கு செய்வது போல் கவிதையாய் நீளும் சம்பவங்கள் பல இருக்கின்றன. சொல்லப்போனால் இவர்கள் நால்வரது வாழ்க்கையும் ஒருவகையில் ஒன்று தான்.
சிகா அவருடைய இரண்டாவது நாவலில் தன் நாட்டுப்பெண்களின் நிலைமையை புனைவின் மூலம் உரக்கவே தெரியப்படுத்தி இருக்கிறார். ஆய்விற்குப் பின் எழுதப்படும் நாவல்களுக்கும், மேசைவீரர்களின் நாவலுக்கும் உள்ள வேறுபாட்டை அறிய விரும்புபவர்கள் இந்த நாவலை வாசித்துப் பாருங்கள். A very decent translation by Maya. மொழிபெயர்ப்பைத் தொடர்ந்து செய்யுங்கள்.
பிரதிக்கு:
எழுத்து பிரசுரம் 98400 65000
முதல்பதிப்பு ஜூன் 2022
விலை ரூ. 470.