ஆசிரியர் குறிப்பு:
காலபைரவன் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் வசிக்கிறார். அரசுப் பள்ளியில் ஆசிரியப்பணி. நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் ‘ஆதிராவின் அம்மாவை ஏன்தான் நான் காதலித்தேனோ?’ எனும் கவிதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளன. சல்லிகை எனும் கலை இலக்கிய இணைய இதழின் ஆசிரியராகவும் உள்ளார். இது இவரது சிறுகதைத் தொகுப்பின் இரண்டாம் பதிப்பு.
ஆறு கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பில் கதாபாத்திரங்கள் எல்லோருமே விதியின் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, அது காட்டும் பாதையில் இழுத்துச் செல்லப்படுபவர்கள்.
சதாசிவம், பார்வதி, ஆறுமுகம் என்று பெயர்களும், சம்பவங்களும் மாறினாலும் எல்லோருமே வேறொரு சக்தியால் இயக்கப்படுபவர்கள். இன்னொரு சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்பட்டாலும் அவர்கள் ஏற்கனவே செய்ததில் தான் முடிவார்கள் என்று தோன்றுகிறது.
விஷம் தோய்ந்த நெடுங்கனவின் நகம், என்வரையில் தொகுப்பின் சிறந்த கதை. செய்யக்கூடாத பாவத்திற்குப் பிறகு தொடர்ந்து வருகின்ற Nightmares கதையில் நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
மகள் வரும் காட்சிகளில் மாஜிக்கல் ரியலிசத்தை அழகாக உபயோகித்திருக்கிறார். உண்மையில் பச்சாதாபத்தை ஏற்படுத்த வேண்டிய கதைக்கு Gothic சாயலைக் கொடுத்திருக்கிறார். மகள் வறுத்த சோளக்கதிரைத் தூவிச் செல்வதில் நாட்டார் கதையியல் கலந்திருக்கிறது. இத்தனையும் சேர்ந்தும் கதையில் ஒரு அமைதி இருக்கிறது. பெரிய இழப்புகளுக்குப் பிறகு வரும் அந்த அமைதி.
பைசாசத்தின் எஞ்சிய சொற்களில் மதுவே பைசாசம். குடித்திருக்கும் பாவனையில் பேச விரும்புவதை எல்லாம் பேசுவது ஒரு விதம். ஆனால் இந்தக் கதையில் குடியின் உளறலாக ஒரு புனிதமான உறவு கொச்சைப் படுத்தப்படுகிறது. இன்னொரு தடவை குடியின் உதவியுடன் ஒரு Confession நிகழ்கிறது. இரண்டு முறையும் எதுவும் செய்ய இயலாது, செயலற்று இருப்பவன் ஒருவனே. இரண்டு சம்பவங்கள் இயல்பாக இணைக்கப்பட்டிருக்கின்றன.
பாடம் கதையில் சிறார் உலகத்தில் லேசாகக் கலக்கும் கள்ளம் நுட்பமாக வடிக்கப்பட்டு இருக்கிறது. விருதுக்கதை பகடிக்காகச் சொல்லப்பட்டிருந்தால், மிகவும் சீரியஸாகச் சொல்லப்பட்ட பகடிக்கதை. தொகுப்பில் தனியாகத் தொங்கிக் கொண்டு நிற்கும் கதை. முதல் கதையில் முருகன் சதாசிவம் மனைவியைச் சந்தித்தபோது சிரிப்புடன் மன்னித்திருந்தால் கதை இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும். முறுக்காத்தி கதையில், முருகனுக்கு Extramarital affairs இல்லாமல் ஒருவேளை மனைவிக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளாக இருந்தால் கதை அழுத்தமாக வந்திருக்கும்.
கதைகள் எழுதியபிறகு சில நாட்கள் இடைவெளி விட்டு, வேறு சாத்தியக்கூறுகளை யோசிப்பது எப்போதுமே நல்லது. முன்பு புலப்படாத விஷயங்கள் தெரிவதற்கு வாய்ப்பு அதிகம். எல்லோரிடமும் ஏதோ ஒரு அவசரம் இருப்பதாகத் தோன்றுகிறது. காலபைரவனின் கதையுலகத்தில், நீதி, நேர்மை என்பதை விட, இப்படித்தான் வாழ்க்கை, சிக்கிக் கொண்டோம் என்ற தொனியே அதிகமுள்ளது. அதனாலேயே அவரது கதைகளில் தனித்துவம் தெரிகிறது.
பிறழ்வுகளை ஒழுக்கத்தின் அளவுகோலைக் கொண்டு அளக்க முற்படாத போது இலக்கியம் ஆகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நல்ல Potential கொண்ட இவர் தொடர்ந்து எழுத வேண்டும்
பிரதிக்கு :
எதிர் வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு ஜனவரி 2022
விலை ரூ. 150.