ஆசிரியர் குறிப்பு:
விருதுநகரில் வசிக்கிறார். கல்லூரியொன்றில் தமிழ்ப்பேராசிரியர் பணி. ஆதவன் படைப்புகளை முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார். இதுவரை நான்கு கவிதைத்தொகுப்புகள் எழுதியுள்ள இவரது ஐந்தாவது கவிதைத் தொகுப்பு இது.
மொழியின் செழுமையை நம்பாமல், கவிதை பயணிக்கும் தூரத்தை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்துபவர்களில் ஒருவர் செல்வசங்கரன். ஐந்தாவது தொகுப்பை வெளியிட்டிருக்கும் இவரை எத்தனைபேர் வாசித்திருப்பார்கள் என்பது எனக்கு வரும் சந்தேகம். தமிழில் கவிதைக் குவியல்களின் நடுவே செல்வசங்கரன் போன்ற நல்ல கவிஞர்களும், அதிகம் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
இந்த வரிகளைப் பாருங்கள். எங்கேயோ ஆரம்பித்து சட்டென தடம்மாறி, இலக்கிய விசாரம் செய்து, மெல்லிய பகடியைத் தாண்டி, கடலில் சங்கமமாவது போல் முடியும் கவிதை:
” நதியிடம் போய்வருகிறோமெனச் சொல்லி
நாங்கள் அங்கிருந்து கிளம்ப
சரியென நதி தலையை ஆட்டுகிறபோது
எல்லாமே ஆடியது”
சிலநேரங்களில் அதிர்வை ஏற்படுத்துவது இவரது கவிதைகளின் இயல்பு. காது கேளாதவனுக்கு எது சத்தம்? இல்லை நாம் இல்லாத போது கேட்கும் சத்தம் நம்மைப் பொறுத்தவரையில் சத்தமில்லைதானே!
” கண்ணாடிப் பொருளுக்கு அதன் சத்தத்தை விழுங்கப் பழக்க வேண்டும்.
யார் பழக்குவது?
ஆனால் கண்ணாடிப் பொருள்
இப்படி சொல்கிறது
நான் அமைதியாகத்தான் நொறுங்குகிறேன்
நீங்கள்தான் சத்தம் எழுப்பிக்கொள்கிறீர்கள்”
சா.கந்தசாமியின் தொலைந்து போனவர்கள் கதையை ஒட்டிய கவிதை இது. நிகழ்வு ஒன்று ஆனால் தாக்கங்கள் வேறு, ஏனென்றால் வாழ்க்கைகள் வேறு.
” ஒரே கடந்தகாலம் ஒரேதடவை
நிகழ்ந்த நிகழ்வு
இரண்டுபேர் அதைத்திரும்பக்
கொண்டுவந்தார்கள்
இரண்டுபேரும் அதைத்திரும்ப
எடுத்து வைத்தார்கள்
ஒரே விசயம் அதற்கே தெரியாமல்
அது இரண்டாயிருந்தது”
சாலை சில குறிப்புகள் வித்தியாசமான சிந்தனைகளின் கோர்வை.
” எல்லோரையும் கூட்டிப் போகிறேன்
என்னை யாருமே கூட்டிப்போக
மாட்டேனென்கிறார்கள் என்றது சாலை
எல்லோரும் தங்கள் இயலாமைக்குப்
பிராயச்சித்தமாக தாங்கள் கடந்த
சாலைகளிலிருந்தெல்லாம்
கிளம்பிய இடம்நோக்கித்
திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்”
சர்ரியல் காட்சிகள் அன்றாட நிகழ்வுகள் போல் இவரது கவிதைகளின் நடுவில் சர்வசாதாரணமாக வந்து போகும். சாலைகள் தனித்து இயங்குவது, முழுக்கை சட்டை தன்னைக் கையென்றே நம்புவது, பல் மருத்துவமனையின் காட்சிகள் போலப்பல.
கடவுள் கண்ணைக்குத்துவார் என்ற குழந்தை நம்பிக்கையை விரித்து எழுதிய கவிதைகள் போல் சில. சாதாரண நிகழ்வுகளின் தொனியை மாற்றி, ரயிலின் சத்தத்தை வைத்துக் காது குடைந்தேன் என்பது போன்ற கவிதைகள். க்ளிஷேக்கள் ஆதவனின் பாதிப்பில் எழுதிய கவிதையாக இருக்கக்கூடும். பழைய உலகம், சிம்ரன் விஜயைச் சேர்த்து வைப்பது போன்ற கவிதைகளில் பெயர் இல்லாவிட்டாலும் செல்வசங்கரன் எழுதியது என்று தெரியும்.
பலவற்றையும் முயன்றிருக்கிறார் இந்தத் தொகுப்பில். மொத்தமாக நல்ல வாசிப்பனுபவத்தை அளிக்கும் கவிதைத் தொகுப்பு.
பிரதிக்கு:
காலச்சுவடு 4652-278525
முதல்பதிப்பு பிப்ரவரி 2022
விலை ரூ.100.