ஆசிரியர் குறிப்பு:
சென்னையில் பிறந்தவர். சேலத்தில் வசிக்கிறார். யாமத்தில் அடர்ந்த மழை, உபாசகி, கைநிறை செந்தழல் ஆகிய இந்த மூன்று கவிதை நூல்களுமே மார்ச் 2021ல் வெளியாகியிருக்கின்றன.
ஏதோ ஒரு காரணமாக நெய்தல் நிலமே எனக்குப் பிடித்திருக்கிறது என்று என்னுரையில் சொல்லியிருப்பதற்கும், சேலத்தில் வசிப்பதற்கும் இடையில் உண்மையான வாழ்க்கை ஒளிந்திருக்கிறது. சவிதாவின் கவிதைகளில் பலவும் இந்த உண்மையைச் சொல்லவே விளைகின்றன.
கன்னியின் விரகம் காசித்தடவலில் முடிவது அதிர்வை ஏற்படுத்துகிறது:
” பல்லாங்குழியின் காசித்தடவலுக்கு
ஒப்பானதொரு வழித்தலில் வந்தடைந்து
உள்ளங்கை நிறைத்த சோழிகளை
சடுதியில் வழித்தோடுகிறது
அந்த நல்லிரவு”
இது தான், கடைசியில் இது தான் காதலை விட, காதலனை விட, காதல் என்ற உணர்வு தரும் சுகந்தம் தான் வாழ்க்கையின் வாசனை தீராமல் பார்த்துக் கொள்கிறது.
” நாகலிங்க பூவின் அரைவட்ட புல்லியில்
பதித்து வைப்பதற்கான சிறுதொகுதியே
நேசத்துக்கான இடம்
வாழ்வு மொத்தமைக்கும்
ஆன போதும்
வாசமாய் படர்ந்து விடுகிறது
ஆயுசுக்கும்.”
பெண்களின் உலகம் மெல்லிய உணர்வுகளால் நிறைந்தது. மிக எளிமையான ஒரு செயலும் ஒரு முகத்தை நினைவுக்குக் கொண்டுவந்து புன்முறுவல் பூக்க வைக்கிறது.
” விட்டுவிட்டுப் போயிருந்த
உன் கருநீச்சட்டையில்
ஒரு கையை
நுழைத்துப் பார்க்கையில்
பொருந்தும் கழுத்துப்பகுதிக்கு
பூனைமயிரின் சிலிர்ப்பு
இன்னும் ஞாபகத்திலிருக்கிறது”
” சேர்த்து வைத்த உண்டியலை
தலைகுப்புறத்தூக்கி குச்சியால்
அனைத்தையும் வழித்தெடுக்கும்
சிறுமி போல……….
உன் அகம்கொண்ட
ஆசைகளை எல்லாம் அள்ளி
முடிந்து கொள்கிறேன்
என் அவிழ்த்துப் போட்ட கூந்தலுக்குள்”
ரேணுகாவின் (பரசுராமரின் தாய்) கதையை
நான்கே வரிகளில் முடித்திருக்கிறார்:
” முழுக்க நனைந்தவள்
தலைமுழுகிய பின்னரே
கரை ஏறினாள் கடைவாயோரம்
வழிந்திருக்கும் பெண்மையைத்
துடைத்தபடி”
போதாமைகளால் நிரம்பிய வாழ்வில் கானல்நீரைத் தேடும் பயணம் தாகம் அடங்கும் நம்பிக்கையில் தொடர்கிறது.
” அனைத்து
அந்தரங்க அலைபேசி
செயலிகளிலும்
வழிந்து ததும்புகின்றன
மறைக்கப்பட்டும் மறக்கப்பட்டும்
ஒளியிழந்த காதலும்
விழிகூசும் காமமுமாக”
வேதனை, பிரிவு, ஏமாற்றம், காதலெனும் கடுந்துயரம் இவற்றை வெளிப்படுத்த கவிதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் சவிதா என்று தோன்றுகிறது. கவிதைகள் எல்லாவற்றிலும் தீனமாக, ஆழமாக, சத்தமாக, தொனிகள் மாறினாலும் ஒலிப்பது பெண்குரலே. புராணக் கதாபாத்திரங்களின் பெண்களும் அவர்கள் அறிவை நிலைநாட்டுவதை விட உணர்வைக் கடத்தவே யத்தனிக்கிறார்கள் இவரது கவிதைகளில்.
மூன்று கவிதைத் தொகுப்புகளை, ஒரே மாதத்தில், ஒரே பதிப்பகத்தின் வழி வெளிவரச் செய்வதற்கு உண்மையிலேயே தைரியம் வேண்டும். கவிதை நூல்களின் தலைப்புகளில் மட்டுமல்ல, உள்ளடக்கங்களிலும் ஒரு Pattern இருக்கும் கவிதைகள். உதாரணத்திற்கு உபாசகி தொகுப்பில் இறைஞ்சுதல் என்னும் உணர்ச்சி அதிகம்.
வன்முறை செய்பவனைச் சொல்கிறார் ஒரு கவிதையில்: ” எரிந்து போன பின்னும் எழுந்தமரும் சவம் போன்றே ஆகிக்கொண்டிருந்தது அவன் முகம்”. விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் நிறம் மாறும் முகம். ஆடம்பரமான மொழியையோ, அதிர்ச்சியை ஏற்படுத்தும் வார்த்தைகளையோ நம்பாமல், இதயத்தின் மொழியாக, எளிமையாக இந்தக் கவிதைகளை எழுதி இருக்கிறார் சவிதா.
எளிமைக்கும், உண்மைக்கும் இருக்கும் அதே அழகு இந்தக் கவிதைகளுக்கும் இருக்கின்றன.
பிரதிக்கு:
பரிதி பதிப்பகம் 72006 93200
முதல்பதிப்பு மார்ச் 2021
உபாசகி விலை ரூ.120
யாமத்தில் அடர்ந்த மழை ரூ. 130
கைநிறை செந்தழல் ரூ. 150