வீழ்ச்சி – பா.திருச்செந்தாழை:
வாழ்ந்தவர் கெட்டால் கதைகளில் வருவதெல்லாம் இதிலும் வருகிறது, ஆனால் இங்கே குடும்பம் திரும்ப மேலேவந்து விடும் என்பதற்கான அறிகுறிகள், ஒரு வார்த்தை கூட கதையில் வராமலேயே ஒளிந்திருக்கின்றன. அம்மாவிற்கு இருக்கும் Instinctஉடன் ஆரம்பிக்கும் கதையில் சகுந்தலா பலசரக்குக் கடையை மீட்டெடுக்கும் பழையகதை காரணமாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு தலைமுறையில் ஒருவர் கெட்டி அடுத்த தலைமுறை தத்தி என்பது மாறிமாறி வரும் போலிருக்கிறது. சிவபாலனிடம் சகுந்தலாவின் ரத்தம் அதிகம் ஓடுகிறது.
” ஒவ்வொரு அலைக்கும் கைப்பிடி மணலாக
பறிபோய்க் கொண்டிருந்த அந்த நாட்களின் நடுவே……..” மொழிநடை கதையைப் பாந்தமாகக் கைபிடித்து அழைத்து செல்கிறது.
சன்னதம் – மயிலன் ஜி சின்னப்பன்:
கிராமத்துக்கதை, அதே பேச்சுகளுடனும், பழக்க வழக்கங்களுடனும் நன்றாக வந்திருக்கிறது. மணமுடித்த யாருக்குமே அதே காதலன் ஒருநாளும் கிடைக்கப் போவதில்லை, வீராயிக்கு இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக. வீராயிக்கு விவரமிருந்திருந்தால் கொட்டொலியை டேப்பில் போட்டு தினம் கேட்க விட்டிருப்பாள். ஒருமுறை சன்னதம் வந்ததோடு நின்று போயிற்று! பாவம்! வீராயி போலவே தங்கத்துக்கும், தேடிய தகப்பனுக்கும், வந்த தகப்பனுக்கும் பலத்த வித்தியாசம். சிறுவனின் பார்வை, ஊர்வம்பு, அத்தனை ஆத்திரத்தையும் சேர்த்துவைத்து வீராயி உயிர்நாடியை விடாது பிடித்தல் என்று எத்தனையோ விஷயங்கள் வந்து போகின்றன இந்தக் கதையில். வீராயி கடைசிவரை திருநாவு குதிரையில் ஏறிவரக் காத்திருப்பாள்.
மோப்பநாய் – சரவணன் சந்திரன்:
இந்தக் கதையில் எதுவோ நடக்கப் போகிறது என்று எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு ஏமாற்றம் இல்லை. இப்ராஹிமின் உண்மைப்பெயர் தங்கப்பாண்டி.
சிவந்த மச்சத்தின் நிழலில் – மானசீகன்:
இஸ்லாமிய சமூகத்தைப் பின்புலமாக வைத்த கதை. அப்ரீனுக்கும், கதைசொல்லிக்கும் சொல்லி வைத்தாற்போல் நெருங்கிய நட்பு இந்துத் தோழர்கள், ஆனால் இருவருக்கும் எவ்வளவு வித்தியாசம். நன்னிமா சித்தம் கலங்கிய நிலையிலும் பேரனுக்கு நல்வழி காட்டுகிறார். அப்ரினை விட நன்னிமா குறித்தே அவன் அதிகம் யோசிக்கிறான். கடைசியில் தன் வாழ்க்கையில் எல்லோரையும் மன்னித்த நன்னிமா அவன் மனதுக்குள் புகுந்து கொள்கிறாள். இனி அதில் வஞ்சமில்லை.
நரை விதை – லோகேஷ் ரகுராமன்:
மூன்று கால கட்டங்களில் நடக்கும் மூன்று கதைகள். நடப்புக் கதைக்கும் முன்னிரண்டு கதைகளுக்கும் என்ன இணைப்பு என்பது புரியவில்லை. Out of focus ஆன படத்தை உத்தேசமாக இது தான் என்று கண்டுகொள்ளும் நினைவு எழுகிறது.
துறப்பு -:இளங்கோவன் முத்தையா:
இளங்கோவன் முத்தையாவின் கதையை எதிர்பார்ப்பில்லாமல் படித்தது அதிர்வை அதிகமாக்கி விட்டது. நான்கு கதாபாத்திரங்கள் இந்தக் கதையை வலுவானதாக்கி இருக்கிறார்கள். முதலாவது மனைவி. அவளாக இருந்தால் அங்கே தான் வண்டியை நிறுத்தியிருப்பாள். அவளுக்கு ஆம்புலன்ஸூம் வராது எதுவும் வராது. Demand செய்து சாதிக்கும் ரகம். அவள் டாக்டரிடம் எவ்வளவோ சொன்னேன் என்பது மட்டும் பொருத்தமில்லை. “அப்படியா அது பொண்ணா” என்பது தான் அவள். அடுத்து சுற்றி நடப்பதில் பாதிப்படையும் கதைசொல்லி. எதிலும் நிச்சயமில்லாதவன். நாட்டில் பாதிப்பேரின் பிரதிநிதி. மூன்றாவது சுடிதார் பெண். ” இப்ப சொன்னா திட்டுவாரு, அப்புறம் சொல்லிக்கலாம்”. கடைசியாக கதையில் Score செய்வது சிறுவன். இன்றைய குழந்தைகளின் மாதிரி. போனில் சார்ஜ் போனது மட்டுமே அவன் கவலைப்படும் விஷயம். சுடிதார் பெண்ணின் போன் Offஆவது, அவள் பிழைப்பாளா இல்லையா தெரியாதது, எதற்காக டாக்டரைப் பார்க்கப் போனார்கள் என்பது தேவையில்லாதது என்று சொல்லாதது என்பது போல் கதை நன்றாக வருகையில் எல்லாமே சேர்ந்து அமரிக்கையாக வந்து உட்காருகின்றன. பாராட்டுகள் இளங்கோவன் முத்தையா.
இந்திரஜித் – எம்.கே. மணி :
இந்திரஜித் அவனது கற்பனைகளை எல்லாம் இவர்கள் இருவரிடம் வந்து கொட்டுவதும், அவனது எதிர்பாராத முடிவும் விதி ஏதோ ஏற்கனவே முடிவுசெய்து வைத்ததைப் போல் திட்டம் மாறாமல் நடக்கின்றன. சிவதாசன் சாகும் வரை மாலா, மனோகர் Obsessionல் இருந்து வெளிவரப் போவதில்லை. மகிக்குத் தெரிந்த இந்திரஜித் வேறு ஆள். மணியின் வார்த்தைகள் மிகா மற்றுமொரு கூர்மையான கதை.
பங்காளி – கமலதேவி:
கிராமத்தில் ஜாதி வித்தியாசம் தெரியாமல் உறவு சொல்லி அழைப்பதும், ஒருவருக்கொருவர் அழைக்காமலே ஓடிவந்து உதவிசெய்யும் இயல்பான, சுமுகமான சூழல் கதையில் வருகிறது. மற்றவர்களை அழைத்தால் சண்டையாகக் கூடிய சமாச்சாரம், சம்பந்தப்பட்டவர்கள் பேசுகையில் ஒன்றுமில்லாது போகிறது. கமலதேவி அலட்டாமல் எளிதாக இந்தக் கதையைச் சொல்லியிருக்கிறார்.
எருக்கிலம்பற்றைக்குச் சில எட்டுகள் தள்ளி மடுவத்தில் தலைப்பூடம்- சப்னாஸ் ஹாசிம்:
சப்னாஸ் ஒவ்வொரு கதையிலும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டு வருகிறார். பஞ்சமும், பட்டினியும் திருட்டை Adventure levelக்கு கொண்டு போகின்றன. மாமாவைக் குறித்து, கிழவி குறித்த சில தகவல்கள் கதையின் அழுத்தத்தைக் கூட்டுவதற்கு பயன்படுகின்றன. சப்னாஸின் சிறுகதைத் தொகுப்பு வருவதற்கு அதிக நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை.
நீச்சல்காரன் – ஜான் சீவெர்- தமிழில் இல. சுபத்ரா:
Midlife crisisஐ சொல்லும் கதை. இளமையின் சாதனைகளை மனதில் வைத்துக் கொண்டு உண்மையை நேருக்குநேர் சந்திக்கத் துணிவில்லாத ஒருவனின் கதை. உடல் ஒத்துழைக்க மறுக்கிறது, சுற்றியிருப்பவர்கள் அலட்சியம் செய்கிறார்கள், மனைவி குழந்தைகள் பிரியப் போகிறார்கள் ஆனால் இவனுக்கு அதை எல்லாம் விட்டுவிலகிய சாதனையாளன் பிம்பம் ஒன்று மனதில் இருக்கிறது. சுபத்ரா எளிமையாக மொழிபெயர்த்திருக்கிறார்.
முறிவு – ஜான் அப்டைக் – தமிழில் கோ.கமலக்கண்ணன்:
Alive Munro ஒரு கதையில் இதே Subjectஐக் குழந்தைகள் கண்ணோட்டத்தில் இருந்து சொல்லியிருப்பார். இந்தக் கதையில் கணவனின் பார்வைக் கோணத்தில் இருந்து. வேறொரு பெண்ணுடன் உறவு, மனைவியைப் பிரிதல் எல்லாவற்றையும் விட அதைக் குழந்தைகளிடம் சொல்வது தான் பெரிய டிராமா ஆகிப்போகிறது. குழந்தைகள் தம்பதியரை பலவீனமடையச் செய்கிறார்கள். மேலைநாடுகளில் வருத்தப்பட்டுக் கொண்டே அவரவர் பாதையில் செல்கிறார்கள், நாம் வருத்தப்பட்டுக் கொண்டே வாழ்ந்து முடிக்கிறோம். Beautiful story and good translation by Kamala Kannan.
நிச்சயிக்கப்பட்டவள் – ஆண்டன் செகாவ் – தமிழில் கயல்:
பெண்கள் சொந்தக்காலில் நிற்கவேண்டும் என்ற தன் கருத்தை செகாவ் இந்தக் கதையில் சொல்லியிருக்கிறார். எல்லோருக்குமே இரண்டு பாதை கண்முன் இருக்கும். ஒன்று பாதுகாப்பான கூண்டுக்குள் வாழ்ந்து மடிவது. மற்றொன்று பரந்த உலகத்தில், சுதந்திரமாக ஆனால் Comfort zoneஐ விட்டு விலகிய வாழ்க்கை. அதிலும் இப்போதைய பெண்களுக்கே சமூகம், குடும்பம் என்று ஆயிரம் தடைகள் வரும்போது நூறுவருடத்துக்கு முந்தைய கதையில் நாடியா அதை செய்திருக்கிறாள். கயலின் தெளிவான மொழிபெயர்ப்பு, தடங்கல் இல்லாது வாசிக்க வைக்கிறது.