ஆசிரியர் குறிப்பு:
எட்டயபுரத்தில் பிறந்தவர். ஊடகவியலாளராக பல நாளிதழ்களில் பணிபுரிந்தவர். நாடக அரங்க அமைப்புகளில் பங்கு கொண்டவர். கடந்த பத்துஆண்டுகளாக கல்வித்துறையில் தன்னை இணைத்துள்ளார். இவரது கொடக்கோனார் கொலை வழக்கு என்ற நாவல் நல்ல வரவேற்பைப் பெற்றது. புனைவு, அல்புனைவு, நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு என பல தளங்களில் இயங்கிவரும் இவரது நேர்காணல்களின் தொகுப்பு இந்த நூல்.
எம்.வி.வி நேர்காணலில் இரண்டு விஷயங்கள் மிக முக்கியமானவையாகத் தோன்றுகின்றன. முதலாவது வியாபாரம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கையில் சிறுபத்திரிகை நடத்தி இரண்டையும் இழுத்து மூடியது. அடுத்தது புத்தகங்கள் மறுபிரசுரம் காணாததால், அடுத்து வரும் வாசகர்களுக்குத் தெரியாமல் போவது.
கேள்வி: எல்லாரும் எழுதலாம். கிராமம் பற்றி, பிரச்சனை பற்றி எழுதிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அவற்றில் இந்த நேர்த்தியையும் ரசனையையும் எப்போதாவது தான் காணமுடிகிறது. பெரும்பாலானவை கலையாக வருவதில்லை.
கி.ராஜநாராயணன்: அதற்கான காரணம் ஏற்கனவே சொன்னேன் இல்லையா, நான் நிறைய படிச்சேன்.
நீங்கள் 1990க்குப் பிறகு அதிகமாக கதை எழுதவில்லையே?
வயசு தான். வயசு ஆக ஆக மரங்கள்ல காய்ப்பு குறையுமில்ல. அதமாதிரி.
டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு போல ஒரு தேடல், பயணம் தமிழில் இல்லாமல் போனது ஏன்?
கவிஞர் சமயவேல்: அது இல்லாததால் தானே தமிழில் படைப்புகள் மொக்கையாக உருவாகுகின்றன. ……… சரி சமுதாயம் மொக்கையாய் இருந்தால் அதைத்தானே எழுதுவார்கள்.
ச.தமிழ்ச்செல்வன்- தெலுங்கானாவைப் பற்றி எழுதுவதற்கு தெலுங்கானா போய் 3 மாசம் தங்கி, அங்குள்ள மக்களை சந்தித்துப் பேசுற எழுத்தாளராகக் கோணங்கி இருக்கிறார். ஆனா அவருடைய உழைப்பு இவ்வளவு இருக்கும் போது, ஒரு வாக்கியத்தை வாசித்து அர்த்தம் கொள்ள முடியாம இருக்கும் போது நான் அயர்ச்சி அடைகிறேன். நான் 30 ஆண்டுகளாக விடாமல் வாசித்துக் கொண்டிருக்கிற ஆள் தான். எனக்கே ஒரு அயர்ச்சி உண்டாகிறதுன்னு சொன்னா சராசரி வாசகர் நுழைய முடியாத எழுத்தாக அது இருக்குன்னு தான் நான் நினைக்கிறேன். அதை எப்படி பாசிட்டிவ்வா பார்க்கிறதுன்னு எனக்குத் தெரியலை.
பேட்டி என்பதே தன்னைத் தீர்த்துக்கொள்வது தானே என்ற சமயவேலின் வரிகள் முக்கிமானவை. பல நேர்காணல்களில், உரையாடல் பாணியே அதிகமாக இருக்கிறது. இலக்கியம், கல்வித்துறை, சமூகப்போராளிகள், நாடகம், ஓவியம் என்று பல துறைகளின் முக்கியமான ஆளுமைகளை நேர்காணல் செய்திருக்கின்றார். இந்த நேர்காணல்களில் முக்கியமான விசயம், பெரும்பாலானோர் மிக நேர்மையான பதில்களை அளித்தது.
அசோகமித்திரன் அவருக்கு மிகவும் பிடித்த இலக்கியவாதி சார்லஸ் டிக்கன்ஸ் என்கிறார். எம்.வி.வி இசங்களை நம்பி எதுவும் எழுதியதில்லை என்கிறார். கி.ரா நீண்ட தாம்பத்ய வாழ்க்கைக்கு மனைவியிடம் பொய் சொல்லுதல், அவள் பொய்யை நம்புதல் முக்கியம் என்கிறார். பாவண்ணன் இருபது ஆண்டுகள் பெங்களூரில் வாழ்ந்த பிறகும் (பல வருடங்கள் முன்னால் எடுத்த பேட்டி) கன்னட மொழியை பேச, எழுதத் தெரிந்த போதும், பல மொழிபெயர்ப்புகள் செய்தபிறகும் தமிழன் என்ற அடையாளம் சிலநேரம் பயமாக இருக்கிறது என்று சொல்வது முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியது.
தொ.ப நேர்காணலில் நெல்லையில் நாடார்கள் கொத்து கொத்தாக மதம் மாறியதன் காரணம் பிராமணர்கள் இல்லை வெள்ளாளர் ஆதிக்கம் என்கிறார். கிருஷ்ணம்மாள் ஜகன்னாதனின் பன்முக ஆளுமையில் பல அறியாத செய்திகள் அவருடைய நேர்காணலில் வருகின்றன.
இரவி, பாலேந்திரா போன்றவர்களின் நேர்காணல்களில் ஈழத்தில் நடந்தது குறித்து பல செய்திகள் கிடைக்கின்றன. நாடகம் குறித்த முருகபூபதி, நாசர், நாடக ராமானுஜம் போன்றோரின் விளக்கங்கள் பல புதிய திறப்புகளை ஏற்படுத்துகின்றன. தமிழிசை குறித்த பல தகவல்களை தருமபுரம் சுவாமிநாதன் கூறியிருக்கிறார். திராவிடஅரசியல் குறித்தும் சில விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்ளன. அப்பணசாமி எல்லா நேர்காணல்களையுமே, Template கேள்விகளில் இருந்து விலகி, ஒரு Healthy discussion modeல் அமைத்திருப்பதே இந்த நூலின் தனித்துவம். பதில்களில் மட்டும் இல்லை விடை, அவை ஏற்படுத்தும் தாக்கங்கள், தொடர் விவாதங்கள், எதிர்வினைகள் எல்லாமே சேர்ந்து விடைகளின் பரப்பளவை அதிகரித்துக் கொண்டே இருக்கும். நல்ல தொகுப்பு இது.
பிரதிக்கு:
தமிழ்வெளி 90940 05600
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ. 350.